சமூக தீமைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூக தீமைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 ஜூன், 2013

ஏமாறாதே! ஏமாற்றாதே!



ஹக்கம் என்னும் அரசன் ஸ்பெயினை ஆண்டு கொண்டிருந்த காலம்.
ஒருநாள் அவர் நகரை வலம் வந்தபோது ஒரு அழகான நிலத்தைப் பார்த்தார். அதனால் கவரப்பட்ட அவர் அந்த இடத்திலே தமக்கென மாளிகை ஒன்றை கட்டிக் கொள்ள விரும்பினார்
அந்த நிலம் ஒரு கிழவிக்கு உரியது. அதிலே ஒரு குடிசை அமைத்து குடியிருந்தாள். அந்த நிலத்திற்கு நியாமான ஒரு விலையைக் கொடுக்க அரசர் முன்வந்தார் அக்கிழவி விற்க மறுத்துவிட்டாள். 'தன் கணவரோடு வாழ்ந்த குடிசையே தனக்கு அரண்மனை' என்றாள்.
அரசருக்கு ஆத்திரம் வந்தது.

08 அக்டோபர், 2012

வரதட்சணைக்கு பெரிதும் காரணம் பெண்களே-3


திருமணச் சடங்கு
நடுவர் அவர்களே! 
ஒரு பெண்ணைக் கட்டிக் கொடுத்தால் அவளுக்கு புகுந்த வீட்டில் ஏற்படும் கொடுமைகளில் ஒன்று நாத்தனார் கொடுமை. இந்த நாசம் பிடித்த நாத்தனார்கள் சுனாமிகளைப் போல் குடும்பத்தை நாசம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

  •  இந்த மாமியார் நாத்தனார் என்ற பெண்களின் கோரப்பிடியில் சிக்கி சீரழியும் பெண்கள் எத்தனை? 
  • இவர்களால் ஸ்டவ்கள் வெடித்து பரிதாபமாய் பலியான பெண்கள் எத்தனை? 
  • தீக்குளித்த பெண்கள் எத்தனை? 
  • விஷம் குடித்த பெண்கள் எத்தனை? 
  • தற்கொலை செய்துகொண்ட பெண்கள் எத்தனை? 
இப்படி ஏராளமான மாபாதகங்களை செய்துகொண்டிருப்பவர்கள் இந்த பெண்கள்தான்.

ஒரு வாலிபன் வரதட்சணை வேண்டாம் என்று மறுத்தாலும் அவனைப் பெற்ற தாயும் சகோதரியும் சும்மா விடுவதில்லை. 
இதுல இரட்டை சீர்வரிசைன்னு ஒன்னு இருக்குங்க.. இதை எவதான் கண்டுபிடிச்சாளோ தெரியல.. இரட்டை சீர்வரிசைன்னா என்ன தெரியுமா? 
  • அண்டாவானா ரெண்டு; குண்டாவானா ரெண்டு.
  • சட்டியானா ரெண்டு பெட்டியானா ரெண்டு. 
இப்படி அண்டா குண்டா எல்லாமே ரெண்டு கொடுத்தா மட்டும் போதாது.அதுக்குள்ள 101 லட்டு வக்காட்டி குத்தம்; குழல் பணியாரம் வக்காட்டி குத்தம்; தேங்காயில ஒன்னு குறைஞ்சால குத்தம். இப்படி சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் குத்தம் கண்டுபிடிச்சு மார்க்கத்திலில்லாத மடமைகளை கடமைகளாக்கி வைத்திருப்பவர்கள் இந்த பெண்கள்தான். 

ஆகவே வரதட்சணை வாங்குவது பெண்களின் மடமை!
அதை வாங்காமலிருப்பது ஆண்களின் கடமை!!
எனவே வாட்டி வதைக்கும் வரதட்சணைக் கொடுமைக்கு பெரிதும் காரணம் பெண்களே! பெண்களே!! என்று உறுதிபடக் கூறி அமர்கிறேன்.

07 அக்டோபர், 2012

வரதட்சணைக்கு பெரிதும் காரணம் பெண்களே-2


தனிக்காட்டு ராஜாவாக அமர்ந்திருக்கும் சிங்கமே!
மரியாதைக்குரிய நடுவர் அவர்களே!
வரதட்சணை வன் கொடுமைக்கு பெண்கள்தான் காரணம் என்று அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்து சொன்னதற்குப் பிறகும் இந்த வருங்காலக் கிழவிகளுக்கு இன்னுமா புரியவில்லை?
வரதட்சணைக்கு மாத்திரமல்ல.. நடுவர் அவர்களே! உலகில் நடக்கும் அத்தனை தீமைகளுக்கும் இந்த பெண்கள் தான் காரணம். ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பார்கள் பெண்களால் ஆகின்றதோ இல்லையோ அழிவுதான் அதிகம் நடந்துகொண்டே இருக்கிறது.

ஆதிமனிதனாம் ஆதம் (அலை) அவர்களுக்கு பிறந்த காபீல் என்பவர் ஹாபீலைக் கொலை செய்தார். உலகில் நடந்த முதல் கொலை யாரால் நடந்தது தெரியுமா? இக்லிமா என்ற பெண்ணால்தான். அதுமட்டுமல்ல பெண்கள் சிறந்தவர்கள் பெண்கள் உயர்ந்தவர்கள் என்று பேசுகிறாங்க பெருசா..
அன்றைய பெண்களின் நிலை என்ன? இன்றைய பெண்களின் நிலை என்ன? அன்று தாய்மார்கள் குழந்தையை தொட்டிலில் போட்டு தாலாட்டும்போது இஸ்லாமிய பாடல்களை பாடினார்கள்.
கண்ணுறங்கு கண்மணியே! கருவில் வந்த கற்கண்டே !!
ஆண்டவன் தந்த அற்புதமே !
அல்லாஹு அக்பர் என்று உறங்கு! 
நீ அண்ணல் நபி ஆசியோடு உறங்கு 

ஆனால் இன்னைக்குள்ள தாய்மாருக்கு தாலாட்டுப் பாடவே தெரியல.. அப்படியே பாடினாலும் என்ன தெரியுமா பாடுறாங்க..

''ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டி
ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டி ''
(இந்த இடத்தில் வேறு ஏதாவது பாடலை சேர்த்துக் கொண்டாலும் சரியே)

இந்தமாதிரி பாலாய்ப்போன சினிமாப் பாடலைப் பாடி பாடி குழந்தைகளைக் கெடுத்து சமுதாயத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த பெண்கள்.

நடுவர் அவர்களே! நோகாம நொங்கு திங்குறதுன்னா என்ன தெரியுமா? சொல்றேன் கேளுங்க.. தன் பையனுக்கு மாத்திரம் நகையும் நட்டும் காசு பணத்தையும் அதிகமாக வாங்கி மருமகள் கொண்டு வந்ததையெல்லாம் தன் மகளுக்கு போட்டு கல்யாணம் பண்ணி வைக்கிற லேட்டஸ்டு கலாச்சாரம்தான் நோகாம நொங்கு திங்குறது.

ஆதியிலே வந்தவன் வீதியிலே போனானாம்.. நேத்து வந்தவன் நெய்யூத்தி தின்னானாம். அந்த கதையாவுல இருக்கு?
ஒரு பொம்பள தன் மகனுக்கு பொண்ணு பார்க்க போயி 150 பவுன் நகை போடனும்னு கேட்டாளாம். ''அடி ஆத்தி.. அப்படியென்ன ஒம் மகன் லாடு வூட்டு லபக்கு தாஸா.. இல்ல லாடு வூட்டு கொலாப்புட்டா? என்ன உத்தியோகம் பார்க்கிறான் என்று கேட்டால், ''எம்புள்ள S.I யா இருக்கான் அப்படின்னாங்க '' ''அது என்ன S.I அப்படின்னு கேட்டால், ''சும்மா இருக்கிறதுதான்'' அப்படின்னு சொன்னாங்க.
''சரி 150 பவுன் போடுகிறோம்.. நீங்க என்ன போடுகிறீர்கள்.? என்று கேட்டால் ''நாங்க அதை வாங்கி எடை போடுவோம்; குறைஞ்சா கல்யாணத்துக்கு தடை போடுவோம்'' அப்படின்னாங்க.
இப்படிப்பட்ட பெண் மாமியாரின் அவலட்சணங்களால்தான் வரதட்சணைக் கொடுமை காட்டுத்தீயாய் சமூகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது.

அருமையானவர்களே!

  • ஏங்கித் தவிக்கும் ஏழைக் குமர்களின் ஏக்கப் பெருமூச்சுகளைத் துடைத்திட 
  • வாடி வதங்கும் வண்ண மலர்களின் வருத்தங்களைக் கலைந்திட
  • கண்ணீர்க் கடலில் தினம் தினம் கலங்கிக் கிடக்கும் கன்னியரின் கவலைப் போக்கிட 
  • வாழ வழியின்றி விழி பிதுங்கி நிற்கும் பெண் குமர்கள் கரை சேர்ந்திட
  • வேதனைத் தீயில் வெம்பித் துடிக்கும் பெண் இனத்தின் துயர் தீர்ந்திட
  • கல்யாணச் சந்தையில் விலைபோக முடியாமல் விரக்தியின் விளிம்பில் நடைப் பிணமாய் வாழும் எண்ணற்ற அன்பு மலர்களை, அழகுப் பதுமைகளை வாழவைத்திட 
ஆண்கள் மாத்திரமல்ல பெண்களும் திருந்தவேண்டும் குறிப்பாக மாமியார் என்ற அல்லி ராணிகள் கெட்ட கள்ளி ராணிகள் கொள்ளை ராணிகள் திருந்தினால் மட்டுமே வரதட்சணை சனியனை ஒழிக்க முடியும். ஆகவே வாட்டி வதைக்கும் வரதட்சணைக் கொடுமைக்கு பெரிதும் காரணம் பெண்களே பெண்களே என்று கூறி என்னுரையை நிறைவு செய்கிறேன்.


சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே! 

02 அக்டோபர், 2012

வரதட்சணைக்கு பெரிதும் காரணம் ஆண்களே -2


வாட்டி வதைக்கும் வரதட்சணைக்கு பெரிதும் காரணம் ஆண்களே என்று எங்கள் அணியினர் ஆதாரத்துடன் அடித்துப் பேசியும் இந்த மண்டையிலே மசாலா இல்லாத மரமண்டைகளுக்கு உரைக்கவில்லைனா என்ன செய்வது?
பத்துமாசம் சுமந்து பெற்றெடுத்த தாய்மார்களை எதிர்த்துப் பேச வந்திருக்கும் நன்றி மறந்தவர்களே! நன்றி கெட்டவர்களே!

நடுவர் அவர்களே! இவங்கள பார்த்தால் இருட்டுல புடிச்சு வச்ச கொழுக்கட்டை மாதிரி இருந்துக்கிட்டு எங்கள எதிர்த்து பேச வந்துட்டாக
الجنة تحت أقدام الأمهات                                                                                                                            
  

தாயின் காலடியில் சேயின் சொர்க்கம் என்று பெண்ணினத்தின் பெருமையை உயர்த்திப் பேசிய பெருமானாரின் மணி மொழியை மறந்துவிட்டீர்களா

திருமணம் சொர்க்கத்தில்; நிச்சயிக்கப்படுது என்பார்கள்.
''ஏங்க.. சொர்க்கத்திலயா நிச்சயிக்கப்படுது? ரொக்கத்திலும் சொக்கத் தங்கத்திலும் அல்லவா நிச்சயிக்கப்படுது?
இன்று நடுத்தரமான குடும்பத்துல ஒரு பெண்ணை கல்யாணம் முடிச்சுக் கொடுக்கணும்னா என்னவெல்லாம் கொடுக்கணும்னு தெரியுங்களா?

  • சொத்த மாப்பிள்ளையானாலும் சொக்கத் தங்கத்துல 25 பவுன் நகை.
  • வேலைவெட்டிக்கே போகாமல் ஊர் சுற்றித் திரியும் ஊதாரி மாப்பிள்ளைக்கு 50 ஆயிரம் பணம்
  • வாட்ச் வாங்க வக்கில்லாதவனுக்கு கைக்கு ஒரு வாட்ச்
  • விரலே இல்லாத விளக்கெண்ணைக்கு இன்ஷியல் போட்ட மோதிரம்.
  • நிச்சயதார்த்தம் அன்னைக்கு 100 பேருக்கு ஓசி பிரியாணி.
  • கல்யாணத்தன்னிக்கு சுத்தமான கிடாக்கறியிலே 500 பேருக்கு தண்டச்சோறு
  • சுத்த பேக்கு மாப்பிள்ளயானாலும் தேக்கு மரத்துல கட்டிலும் பீரோவும் கொடுக்கணுங்க
  • பண்டாரங்களுக்கு பாத்திரப் பண்டங்கள் வேற.
  • கல்யாணம் முடிஞ்சு குழந்தை பெறந்துச்சுன்னா குழந்தைக்கு காதுக்கு கழுத்துக்கு இடுப்புக்கு தங்கத்திலோ வெள்ளியிலோ போடனுங்க
  • சாதாரண நொண்டி மாப்பிள்ளைக்கே வண்டி வண்டியா கொடுக்கனும்னா படிச்ச பண்டார மாப்பிள்ளைக்கு எவ்வளவு கொடுக்கணும்? 

நடுவர் அவர்களே!
நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடத்தில் உங்களுக்கு ஒரு அழகிய முன்மாதிரி இருக்கிறது என்று அல்லாஹ் கூறுகிறான்
அப்படிப்பட்ட பெருமானார் திருமணம் முடித்திருக்கிறார்கள். எந்த மனைவியிடமாவது வரதட்சணை வாங்கியிருக்கிறார்களா? சீர் வரிசையாவது வாங்கியிருக்கிறார்களா? இல்லையே!

மார்க்கத்தின் மான்புகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு இந்த ஆண்கள் செய்யும் அக்கிரமங்களால் வாடி வதங்கும் பெண்கள் எத்தனை? கதிகலங்கிக் கிடக்கும் கன்னியர் எத்தனை? மனம் வெதும்பி அழுகின்ற மங்கையர் எத்தனை? தனக்கு ஒரு வரன் கிடைக்காதா என்று ஏங்கித் தவிக்கும் ஏழைக் குமர்கள் எத்தனை?
ஏ۔۔ வக்கற்ற வாலிபக் கூட்டமே! நீங்கள் வரதட்சணை வாங்கி வயிறு வளர்ப்பதில் சங்கடங்கள் சோகங்கள் உங்களுக்கு தெரியுமா? புனிதமிக்க இஸ்லாத்தில் பிறந்து இஸ்லாத்தில் வளர்ந்து வயதுக்கு வந்த ஏழைக்குமர்களை திருமணம் செய்ய முஸ்லிம் இளைஞர்கள் வரதட்சணை கேட்பதால் வேறு வழியில்லாமல் மாற்று மத இளைஞர்கள் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். இஸ்லாத்தைத் தூக்கிப் பிடித்திருக்கிறேன் என கொக்கரிக்கு இளைஞர்களே! கண்ணியத்திற்குறிய பள்ளிவாசல் நிர்வாகிகளே! மார்க்கத்திற்கு வழிகாட்டிக்கொண்டிருக்கும் உலமாப் பெருமக்களே!! இதற்கெல்லாம் தீர்வு காண்பது உங்கள் கடமை அல்லவா? ஆண்களாகிய நீங்கள் பொறுப்புகளை உணராததால்தான் இந்த வரதட்சணைக் கொடுமை அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
ஆகவே புற்றுநோய் தொற்று நோய் போல பரவிகொண்டிருக்கும் இந்த வரதட்சணைக்கு பெரிதும் காரணம் ஆண்களே ஆண்களே என்று உறுதிபடக் கூறி என் உரைக்குத் திரையிடுகிறேன்.

28 ஜூலை, 2012

ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள்


ஆண்மை
பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது.


அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது. அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இது குறித்து கூறுகையில், நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்.


இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறதாம்.


அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் மிகவும் குறைவு. முதலில் இதற்கு கால நிலையும், உணவுப் பழக்கவழக்கங்களே காரணம் என கருதப்பட்டது. ஆனால் அதே காலநிலை, உணவுப் பழக்கத்தில் மேலை நாட்டினரால் அரேபிய ஆண்களைப் போல இருக்க முடியவில்லை.


இது ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் குழப்பியிருக்கிறது. அந்த குழப்பம் அவர்களுடைய கவனத்தை பிற காரணிகளின் மேல் திரும்பியிருக்கிறது. உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் யோசனை முளைத்திருக்கிறது.


அதன் பின்பே பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் ஆரோக்கியத்துக்கும் இடையேயான இந்த தொடர்பு தெரியவந்திருக்கிறது. தெருவிலும், பணித்தளங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் பாலியல் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது.


முக்கால்வாசி ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.


பெண்களின் கவர்ச்சிகரமான நடைபாதைகளில் ஆண்களின் ஆரோக்கியத்தைப் புதைக்கும் கல்லறைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன என்பது அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருக்கும் அதே வேளையில், தேவையற்ற பாலியல் கனவுகளை வளர்க்காமல் நட்புணர்வுடன் அடுத்த பாலினரை நோக்கும் மனநிலையை ஆண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை செய்கிறது.

01 மே, 2012

வட்டியால் வீழ்ந்த குடும்பம்


வட்டி அழியும் தர்மம் வளரும்-ஒரு உண்மைச் சம்பவம் :


பெங்களூர் சாம்ராஜ் பேட்டை வால்மீகி நகரில் டாக்டர் அமானுல்லாஹ்கான் மருத்துவமனை மிக பிரபல்யமாந்து. பொதுவாக தனியார் மருத்துமனைகளில் பல காசு பிடுங்குவதில்தான் குறியாக இருக்கும். ஏழையாக இருந்தாலும் கராராக நடந்துகொள்வதைப் பார்த்திருக்கிறோம்.ஆனால் இந்த மருத்துவமனையோ வித்தியாசமானது. ஏழைகளின் மீது இரக்கம்படுவதால் இங்கு எப்போதும் கூட்டம்மொய்த்துக்கொண்டே இருக்கும்.
 டாக்டர் அமானுல்லாஹ் கான் மட்டுமின்றி மனைவி நவீதா பானுவும் டாக்டர். மூத்த மகன் நவாஸ் ரஷீதும் டாகடர்தான். இளைய மகன் நிஜாம் ரஷீதும் கோலார் மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு MBBS படித்து வருகிறார். குடும்பமே டாக்டர் மயம்தான். பெங்களூரே மெச்சும் வகையில் இந்த குடும்பம் மகிழ்ச்சியாக இருந்து வந்தது. 


இருக்கும் மகிழ்ச்சி சொகுசாக வாழவேண்டிய இந்த டாக்டர் இன்னும் மகிழ்ச்சியாக வாழ ஆசைப்பட்டு வங்கியில் இரண்டு கோடி ரூபாய் கடன் வாங்கி மருத்துவமனையை நான்கு மாடி கொண்டதாக விரிவு படுத்தினார். மகன் நவாஸ் ரஷீதுக்கு தனியாக ஒரு கிளினிக் வைத்துக் கொடுத்தார். இந்த நிலையில் தனது மருத்துவமனையை வைத்து மேலும் மூன்றரை கோடி ரூபாய் கடன் பெற்றார். மருத்துவ உபகரணங்கள் வாங்க பல மருந்துக் கம்பெனிகளிடமும் கடன் பெற்றார். 


எப்பொழுதுமே கடன் வாங்கும்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கும் அதைத் திரும்பச் செலுத்தவேண்டிய கட்டம் வரும்போது ஏற்படும் மரண அவஸ்தை இருக்கிறதே அதை சொல்லி மாளாது. இப்பொழுது டாக்டர் அமானுல்லாஹ் கானுக்கு ஏற்பட்ட கடன் வட்டியாக குட்டி போட்டு கழுத்தை நெரிக்க முற்பட்டது பலரின் வஞ்சக பேச்சுகளால் வசாமாக மாட்டிக் கொண்ட இந்த பரிதாப குடும்பம் வேறு வழி தெரியாமல் தவித்தது. கடைசியில் ஒருவருக்கொருவர் விச ஊசி போட்டுக்கொண்டு உலகத்தை விட்டே விடைபெற்றுக் கொண்டனர். 


நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்யமாட்டான். எனினும் மனைதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்துகொள்கின்றனர். (அல்குர்ஆன் 44:16)


 يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم 
அல்லாஹ் வட்டியை அழிக்கிறான் தர்மத்தை வளர்க்கிறான் -(அல்குர்ஆன்)

 يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم ) روى ابن أبي حاتم من طريق الحسن قال ذاك يوم القيامة يمحق الله الربا يومئذ وأهله . وقال غيره : المعنى أن أمره يئول إلى قلة . وأخرج ابن أبي حاتم من طريق مقاتل بن حيان قال : " ما كان من ربا وإن زاد حتى يغبط صاحبه فإن الله يمحقه " وأصله من حديث ابن مسعود عند ابن ماجه وأحمد بإسناد حسن مرفوعا : " إن الربا وإن كثر عاقبته إلى قل " وروى عبد الرزاق عن معمر قال : سمعنا أنه لا يأتي على صاحب الربا أربعون سنة حتى يمحق . 

சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே! அல்லது கீழ்காணும் தளங்களில் பகிர்ந்து விட்டுச் செல்லலாமே!

24 ஏப்ரல், 2012

வரதட்சணைக்கு பெரிதும் காரணம் ஆண்களே-1


ஆடும் மலர்களிலும் அலைபாயும் கடல்களிலும் கூவுகின்ற குயில் குரல்களிலும் ஓங்கி ஒலித்திடும் வல்லவனாம் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். செங்கதிரும் தன்மதியும் சேர்த்துக் கையில் தந்திடினும் எம் கொள்கை விடமாட்டேன் என்றுரைத்த ஏந்தல் நபியின் மீதும் நபிவழி நடந்திட்ட நற்றவத் தோழர்கள் மீதும் நாதாக்கள் மீதும் நம்மவர்கள் மீதும் அல்லாஹ்வின் அருளும் அன்பும் என்றென்றும் உண்டாவதாக


பெரியோர்களே! தாய்மார்களே! எங்களை எதிர்த்து பேசவந்திருக்கும் எதிர் அணியினரே! நியாயத்திற்கு கட்டுப்பட்டு தீர்ப்பு வழங்க காத்திருக்கும் கருப்பா இருந்தாலும் வெள்ள மனசுகொண்ட அருமையான நடுவர் அவர்களே!


சமுதாயத்தை வாட்டி வதைக்கும் வரதட்சணைக் கொடுமைக்கு பெரிதும் காரணம் ஆண்களே என்று ஆதாரத்துடன் வாதாட வந்திருக்கிறேன்.


அருமையானவர்களே! அருள் மறையிலே அல்லாஹ் அழகாக சொல்கிறான்
 'அர்ரிஜாலு கவ்வாமூன அலன்னிசாயி ''
ஆண்கள் பெண்களின் பொருப்புதாரிகள் பெண்களின் நிர்வாகிகள் என்று அல்லாஹ் கூறியிருக்க அதை இந்த ஆண்வர்க்கம் மறந்துவிட்டு பெண்ணினத்தை சுரண்டி சுரண்டி சமுதாயத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அன்புள்ள நடுவர் அவர்களே இந்த ஆண்களின் அக்கிரமத்தைப் பற்றி ஒரு கவிஞன் இப்படி சொன்னான்
''ஒரு பெண்ணிடம் கைக்கூலி வாங்கின்ற கோழைகள்ஏன்தான் பிறந்தார்களோ?ஒரு தன்மானம் இல்லாத பிள்ளையைப் பெற்றோர்கள் ஏன் தான் பெற்றார்களோ?
அல்லாஹ்வின் சாபத்தைப் பெறுவதற்கா? இல்லை ஆயிரம் கன்னிகள் அழுவதற்கா?
என்று இந்த ஆண்களின் அக்கிரமத்தை சுட்டிக் காட்டியிருக்கிறான்.


ஆணவம் பிடித்து அலையும் இந்த ஆண்மக்களால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இழிவுகளும் அவமானங்களும் சோதனைகளும் வேதனைகளும் கொஞ்சமா நெஞ்சமா?
அப்பப்பா! அப்பப்பா! நினைத்தாலே நெஞ்சம் உருகுகிறது; கண்கள் கலங்குகிறது


தமிழகத்தில் பிரபலமான ஒரு ஊரில் ஏழைக்குடும்பத்தில் பிறந்த பாவப்பட்ட பெண்ணை மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வந்தார்கள். சீவிமுடித்து சிங்காரித்து அழகுப் பதுமையாய் வந்து நின்றாள் அந்த மணப்பெண். ஆனால் வெக்கங்கெட்ட மாப்பிள்ளை வீட்டார் நகையும் தொகையும் எவ்வளவு தருவீர்கள் என்றுதான் கேட்டார்கள். 50 பவுனும் 50 ஆயிரமும் கண்டிப்பாய் வேண்டுமென்று கண்டிஷன் வைத்தார்கள். அவ்வளவு எங்களால் முடியாது என்று பெண்வீட்டார் சொன்னதுமே வைத்திருந்த பலகாரங்களை தின்று தீர்த்த அந்த பண்டாரங்கள் இடத்தைக் காலிசெய்துவிட்டு போய்விட்டார்கள். 


அடுத்த மாதம் இன்னொரு மாப்பிள்ளை வீட்டார் என்னும் கொள்ளைக் கூட்டம் வந்து பேரம் பேசிவிட்டு சென்றது. ஒருமுறையல்ல இருமுறையல்ல.. பலமுறை மாப்பிள்ளை வீட்டாருக்கு முகத்தைக் காட்டி காட்டி வெறுத்துப்போன அந்த ஏழைப்பெண் ''அட என்னடா வாழ்க்கை.. வந்தவனெல்லாம் வக்கனையாய் தின்றுவிட்டு வாழவைப்பதற்கு காசு கேட்கிறானே' என்று மனம் நொந்து தூக்குக் கயிறு மாட்டி உயிரை விடுகிறாள். 


இந்த கோர நிகழ்வை அறிந்த பெற்றொர்கள் துக்கம் தாளமுடியாமல் கதறி கதறி அழுகின்றனர். ஆசைஆசையாய் தாலாட்டி சீராட்டி வளர்த்தெடுத்த தன் மகள் பருவ வயதில் தாலிக் கயிறு ஏறுவதற்கு பதிலாக தூக்குக் கயிறு ஏறிக் கிடக்குதே என்று ஏங்கி ஏங்கி ஒரு கட்டத்தில் அவர்களும் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
அச்சச்சோ.. அச்சச்சோ.. என்ன கொடுமை என்ன கொடுமை ஒரு குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக நாசமாக்கிய மகாப் பாவிகள் இந்த மாப்பிள்ளை வீட்டார்.
இந்த லட்சணத்தில் இந்த மானங்கெட்ட மாப்பிள்ளைகள் பெண்களை எதிர்த்து பேசவந்திட்டாங்க  


நடுவர் அவர்களே இந்த மூன்று அரைவேக்காடு ஆண்கள் .. இவங்க முழிக்கிற முழியைப் பாருங்க. திருவிழாவுல காணாமப் போன ஆடுமாதிரி... 
மே.. மே..மே..
அடப்பாவிகளா.. அடப்பாவிகளா.. இந்த பெண்களெல்லாம் எவ்வளவு பெரிய தியாகி தெரியுமா? பத்துமாதம் சுமந்துபெற்றெடுத்த தாயைப் பிரிந்து பாசத்தைக் கொட்டி வளர்த்த தந்தையைப் பிரிந்து அண்ணனைப் பிரிந்து தம்பியைப் பிரிந்து அக்காவை விட்டு த்ங்கையை விட்டு ஊரை விட்டு உறவை விட்டு கட்டிய கணவனே பெரிது என்று உன் காலடியில் கிடக்கிறாளே உன் அன்பு மனைவி உன் வாழ்க்கைத் துணைவி அவளைக் காப்பாற்றவேண்டியுள்ள ஆண்களே பெண்ணிடம் வரதட்சணையைப் பிச்சையாகக் கேட்டு வாங்கி பெண்ணினத்தை நாசத்தின் படுகுழியில் தள்ளி சமுதாயத்தின் மானத்தைக் காற்றில் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்களே இது நியாயம்தானா? பாவப்பட்ட பெண்களின் வயித்தெரிச்சல் உங்களை சும்மா விடுமா?


அருமையானவர்களே! அல்லாஹ் தன் திருமறையிலே சொல்லிக் காட்டுகிறான்:
''திருமணம் முடிக்கும் ஆண்களே மணப்பெண்ணுக்கு மனமுவந்து மஹர்த் தொகையை அள்ளிக் கொடுங்கள்'' என்று அல்லாஹ் சொல்லியிருக்க،
கன்னிப் பெண்ணைக் கரம்பிடிக்க காசு கேட்பது என்னங்கய்யா நியாயம்? கரும்பு தின்ன கூலி கேட்கலாமா? 

  • காசு கொடுத்தால் கழுதைக்கும் தாலி கட்டும் கண்றாவிகள் ஆண்கள்.
  •  பணம் பணம் என்று உச்சரித்து பெண்வீட்டாரை நச்சரித்து பணம் தராவிட்டால் கல்யாணமே நடக்காது என்று எச்சரித்து பெண்களை நாசமாக்கியவர்கள் ஆண்கள்
  • தன்மானத்தை இழந்து தரங்கெட்டு நடப்பவர்கள் ஆண்கள் 
  • கல்யாணச் சந்தையிலே ஆடுமாடுகளைப் போல் விலைபோகக்கூடியவர்கள் ஆண்கள் 
  • எல்லாவற்றுக்கும் மேலாக மறுமையை மறந்து திருமணத்தை தீமையாக்கிக் கொண்டிருப்பவர்கள் ஆண்கள்

ஆகவே. வாட்டி வதைக்கும் வரதட்சணைக் கொடுமைக்கு பெரிதும் காரணம் ஆண்களே! ஆண்களே!! என்று உறுதிபடக் கூறி உரைக்குத் திரையிடுகிறேன். நன்றி வஸ்ஸலாம்.

வரதட்சணைக் கொடுமைக்கு பெரிதும் காரணம் பெண்களே -1



நடுவர் அவர்களே! 
எனக்கு முன்னால் பேசிய சகோதரி கண்டதையெல்லாம் உளறிக் கொட்டிவிட்டு போயிருக்கிறார். முழுப் பூசனிக்காயை சோத்துல மறைக்கிறமாதிரி உண்மையை மறைச்சு பேசியிருக்கிறார். ஆற்றல்மிக்க ஆண் சமுதாயத்தை அவமானத்திப் பேசிச் சென்றிருக்கிறார். நடுவர் அவர்களே! நீங்க ஆணா? பெண்ணா?

சரி அது போகட்டும். அவுங்க பேசும்போது தமிழகத்திலொரு குடும்பம் தற்கொலை செய்துகொண்டதாகவும் அதுக்கெல்லாம் காரணம் ஆண்கள்தான் அப்படின்னு சொன்னானாங்க. நான் கேட்கிறேன் உலகத்துல எங்கேயாவது மாமனார் மருமகன் சண்டையை கேள்விப்பட்டிருக்கீங்களா/? ஆனால் எங்கே பார்த்தாலும் ஒரே மாமியார் மருமகள் சண்டைதான். இதை உங்களால மறுக்கமுடியுமா?

ஓ முக்காடு போட்டு முழிக்கும் முண்டாசுகளே! நல்லா சொல்றேன் கேட்டுக்குங்க. பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுகளை என்னாலே காட்டமுடியும்.
மாமியார் என்ற பணப் பேய்கள் ஒரு பெரிய உதாரணம். உங்களுக்கு மட்டும்தான் உண்மைச் சம்பவம் சொல்லத் தெரியுமா? நானும் ஒரு உண்மைச் சம்பவம் சொல்றேன் கேளுங்கம்மா கேளுங்க.

தமிழகத்தில் ஒரு பிரசித்த பெற்ற ஊரில் தன் மகனுக்கு லட்ச ரூபாய் ரொக்கமும் சொக்கத் தங்கம் இருபது பவுனும் கறாராய்ப் பேசி தன் மகனுக்கு ஒரு பெண்ணைப் பார்க்கிறாள் மாப்பிள்ளையின் தாய். 15 பவுன் நகையைப் போட்டுவிட்டு மீதி நகையை பிறகு தருகிறோம் என்று சொன்னதைக் கேட்ட மாமியார் என்ற பெண்பிசாசு ''அப்படியென்றால் இந்த சம்பந்தமே வேண்டாம்'' என்று பேயாட்டம் போடுகின்றாள். எல்லாம் ஒருவழியாக சமாதானம் ஆகி திருமணம் நடக்கிறது. கல்யாணம் முடிந்து சில நாட்கள்தான். மீதி 5 பவுனை எங்கே எங்கே என்று அந்த மணப்பெண்ணை நச்சரித்து கொடுமைப் படுத்துகிறாள் மாமியார். சில மாதங்கள் கழிகிறது. புதுப்பெண்ணும் கர்ப்பிணி ஆகிறாள். பாவம் வயிற்றில் கருவை சுமக்கிறாளே என்று கூட பார்க்காமல் அவளின் தலைமுடியைப் பிடித்திழுத்து மீதி நகையை தரவக்கில்லாத உனக்கு குழந்தை ஒரு கேடா'' என சொல்லி வயிற்றில் எட்டி உதைக்கிறாள் கல்னெஞ்சம் படைத்த அந்த மாமியார். கர்ப்பிணியான அந்த மருமகள் அந்த உதையைத் தாங்கமுடியாமல் மயங்கி கீழே விழுகிறாள். அப்படியும் ஆத்திரம் அடங்காமல் அந்த ராட்சசி மாமியார் மயங்கிக் கிடக்கும் மருமகளை அடித்து உதைத்து இரண்டு கால்களையும் பிடித்து தரதரவென இழுத்து சமையலறைக்குள் கொண்டுபோய் மண்ணெண்ணையை ஊற்றி உயிரோடு கொழுத்துகிறாள்.
என்ன கொடுமை. என்ன அக்கிரமம்.. 5 பவுன் நகைக்காக ஒரு கர்ப்பிணியை உயிரோடு கொழுத்திய மகாப்பாவி மாமியார் என்ற பெண்தானே. நடுவர் அவர்களே! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். இதுபோல எத்தனையோ கொடுமைகள் பெண்களால்தான் நடந்துகொண்டிருக்கின்றன. அம்மா தாய்மாரே.. கொஞ்சம் அடக்கி வாசிங்க. ரொம்ப பேசினீங்கன்னா ஒரு பய கூட உங்கள கட்டமாட்டான்.

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்பின்து பரக்கத்துன்'' பெண் குழந்தை ஒரு பரக்கத்*தாகும் என்று. ஆனால் இன்று பெண்களே பெண்களை மதிப்பதில்லை. ஆண்குழந்தை பிறந்தால் ஆயிரம் ஆயிரம் ஆனந்தம் அளவிலா சந்தோஷம். முகமெல்லாம் சிரிப்பு. அதே நேரத்தில் பெண்குழந்தை பிறந்துவிட்டால் போதும் அந்த அம்மாவின் முகம் வாடி வதங்கி சுருங்கிப் போய்விடுகிறது. தலைமேல கைவச்சு உட்கார்ந்துடுவாங்க. பெண்களாகிய நீங்களே பெண்களை மதிப்பதில்லை. குற்றம் செய்வது நீங்கள்; பழி போடுவது எங்கள் மீதா? பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா?
 இன்றைக்கு சமுதாயத்துல வரதட்சணை வாங்கமாட்டோம் என்று எல்லா ஆண்களும் சேர்ந்து முடிவெடுத்தாலும் இந்த வீணாப்போன பொம்பளைங்க விடமாட்டாங்க நடுவர் அவர்களே. எப்படி கேட்கிறீங்களா?
நான் இந்த மேடையிலே சவால் விடுறேன். நல்லா குறிச்சு வச்சிக்கிருங்க. நான் வரதட்சணை வாங்காம கல்யாணம் முடிக்க தயார். ஆனா இந்த சமுதாயம் என்ன சொல்லும் தெரியுமா? 'பொழைக்கத் தெரியாதவன்'.  குறிப்பா இந்த பொம்பளைங்க என்ன சொல்வாங்க தெரியுமா? ''அடியே.. மாப்பிள்ளைட்ட ஏதோ கொறை இருக்குடி.. அதேன் கைக்கூலி வேணாம்கிறார்''.
ஆக, திருந்த நினைக்கும் எங்களை திருந்தவிடாம தடுக்கிறது யாரு? பெண்கள்தான்! ஆகவே, வாட்டி வதைக்கும் வரதட்சணைக் கொடுமைக்கு பெரிதும் காரணம் பெண்களே பெண்களே என்று கூறி அமர்கிறேன்.
 -----------------------------------------------------------------------------------------------
 *பரக்கத்:அருள்வளம், பாக்கியம்.

31 மார்ச், 2012

டிவி முசீபத்தே-3





நடுவர் அவர்களே!
எனக்கு முன்னால் பேசிய சகோதரி டிவியிலே எந்த ஆபத்தும் இல்லை என்றும் அது பொழுதுபோக்கு என்றும் பீலா விட்டுட்டு போயிருக்கார். ஆனால் உண்மை என்ன தெரியுமா?

ஆரம்பத்தில் சினிமா ஒரு பொழுதுபோக்காகத்தான் அறிமுகமானது. ஆனால் காலம் மாற மாற காட்சிகளும் மாறிப்போனது. இப்பொழுது முழுக்க முழுக்க ஆபாசமாகவும் அனாச்சாரமாகவும் உருவெடுத்து உருக்குலைந்து நிற்கிறது. கதையிலே ஆபாசம்; காட்சியிலே ஆபாசம்; பாட்டிலே ஆபாசம் பேச்சிலே ஆபாசம் உடையிலே ஆபாசம் உதட்டிலே ஆபாசம் இப்படி எல்லாமே ஆபாசமயம். கடைசிக் காலத்திலே அறிவு மங்கிவிடும்; ஆபாசம் மிகைத்து விடும் என்று அண்ணலார் சொன்னார்களே அதற்கு முக்கிய கருவியாக அமைந்திருப்பது இந்த டிவிதான். அப்படி இருக்க டிவி ஒரு நிஃமத்து என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? கூறுங்கள் நடுவர் அவர்களே! 

இன்று டி வியினாலும் சினிமாவாலும் சீர்கெட்டுப் போவதிலே மற்றவர்களைக் காட்டிலும் மாணவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அன்றாட பாடங்களை உச்சரிக்கவேண்டுய அவர்களின் உதடுகள் சினிமாப் பாடல்களை முனுமுனுத்துக்கொண்டிருக்கின்றன. நாட்டு நடப்புகளை விட நடிகர் நடிகைகளைப் பற்றியே அதிகம் தெரிந்து வைத்துள்ளனர். ஒரு புதுப் படம் வெளியாகிறதென்றால் மாணவ மாணவிகளின் உள்ளங்களை முதன்முதலாக கவருவது அதில் நடிக்கும் நடிகர்களின் ஆபாச உடைகளே! அது எவ்வளவு அலங்கோலமாக அவலட்சணமாக இருந்தாலும் அதுதான் அன்றைய ஃபேஷன்.

 அதுமட்டுமா? நம்மிலே பலருக்கு நம்முடைய பிறந்த தேதி காலம் தெரியாது ஆனால்,
  •  எந்த நடிகை எங்கு பிறந்தாள் எந்த நடிகனுக்கு என்ன வயது? அவன் குலம் என்ன கோத்திரமென்ன? இவர்கள் எத்தனை படங்களில் நடித்துள்ளார்கள்?  அவர்களின் உடை என்ன? நடை என்ன? ஸ்டைலென்ன? இவை அத்தனையும் புள்ளி விபரமாக தெரிந்து வைத்துள்ள புள்ளிராஜாக்கள் நம்மில் எத்தனையோ பேருண்டு.
இவ்வளவு பற்றும் பாசமும் பைத்தியமும் நடிகர்கள் மீது வைத்திருப்பதால்தானே அங்கங்கே இந்த கூத்தாடிகளின் பெயரால் மன்றங்களும் சங்கங்களும் சபைகளும் ஆயிரக்கணக்கிலே அதிகரித்துவிட்டன. இந்த கூத்தாடிகள்தான் நமது வாழ்விற்கு வழிகாட்டிகளா? இந்த நடிகர்கள்தான் நம்மை செம்மைப் படுத்தும் சீர்திருத்த செம்மல்களா? சிந்தித்துப் பாருங்கள்.

''நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடத்தில் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது ''என்று அல்லாஹ் கூறுகிறான். நபியின் முன்மாதிரியை விட்டுவிட்டு நடிகர்களின் முன்மாதிரியை பின்பற்றுகிறோமே இதுதான் நாளை மறுமையில் நம்மைக் காப்பாற்றுமா? இந்த இழிநிலைக்கு நம்மை ஆளாக்கியது எது? டிவி என்ற அரக்கனல்லவா?

சிலர் வீட்டிலே டி.வி வாங்கிவைக்கிறார்கள் எதற்காக ? செய்திகளை பார்க்கலாமே நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்ளலாமே என்று.  ஆனால் அந்த வீட்டின் பெண்மனிகள் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

 நடுவர் அவர்களே! நான் ஒரு வீட்டிற்கு சென்றிருந்தேன். பெரும்பாலும் பெண்கள் நாடகத்தில்தான் மூழ்கிக் கிடப்பார்கள் என்று பார்த்தால் அந்த பெண்மணி அதிசயமாக செய்தி பார்த்துக்கொண்டிருந்தார். பரவாயில்லையே இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா? என்று ஆச்சரியப்பட்டு அந்த பெண்ணிடம் கேட்டேன்: ஏம்மா இவ்வளவு நேரம் செய்தி பார்த்தீர்களே என்ன சொன்னாங்க? அதற்கு அந்த அம்மணி சொன்ன பதிலென்ன தெரியுமா? ''செய்தியா.. அந்த கண்றாவியை யார் பார்த்தது? செய்தி வாசிச்ச அந்த பெண்ணையல்லவா நான் நோட்டமிட்டுக்கொண்டிருந்தேன். ஆஹா !என்ன அழகான புடவை கட்டியிருந்தாள்! கழுத்துல நகை அம்புட்டும் சுத்தமான தங்கம். டிசைன் டிசைனா வளையல்.. எம் புருசனுந்தான் இருக்கார்.. என்னத்த வாங்கித் தந்தார்?'' என்று புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க. இப்படித்தான் நடுவர் அவர்களே! நாட்டிலே நடக்குது.

 டி.வியிலே தோன்றும் பெண்களின் அலங்காரத்தைப் பார்த்து நாமும் அதேபோல வாங்கணும்; உடுத்தணும் அலங்கரிக்கணும் என்று ஏங்குகிறார்கள். கணவன் கஷ்டப்பட்டு அனுப்புகிற காசையெல்லாம் கண்டதையும் வாங்கி கரியாக்குகிறார்கள். இந்த ஊதாரித்தனத்தாலும் நாதாரித்தனத்தாலும் எத்தனையோ குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டன. இதற்கு அடிப்படைக் காரணம் எது? டி.வியில் வரும் பொய்யான விளம்பரக் காட்சிகள்தானே. விளம்பரத்தில் பார்த்ததையெல்லாம் விலைக்கு வாங்கவேண்டும் என்று நினைப்பதால் வீண்விரையம் அதிகமாகிவிட்டது.
 இத்தனை சீரழிவுக்கும் காரணமான டி.வியை நல்ல சாதனம் என்று சொல்ல நாவு கூசுகிறது நடுவர் அவர்களே நாவு கூசுகிறது. ஆகவே டி.வி ஒரு பயங்கரமான முசீபத்துதான் என்று கூறி எனது வார்த்தைகளுக்கு திரையிடுகிறேன்.
                          ------------------------------------

சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இட்டுச் செல்லலாமே!

இது தொடர்பான இதர பதிவுகள்:

டிவி முஸீபத்தே!-2



நடுவர் அவர்களே! ஒட்டகத்தின் கழுத்தைப் பார்த்து ஒருவன் கேட்டானாம்: ஒட்டகமே ஒட்டகமே..ஏன் உன் கழுத்து கோணலாக இருக்கிறது என்று. அதற்கு ஒட்டகம் சொன்னதாம்: அட பைத்தியக்காரா..எனது உடலில் எந்த பகுதிதான் நேராக இருக்கக் கண்டாய்? என்று சொன்னதாம்.
 அதுபோல நடுவர் அவர்களே! ஒட்டகம் என்றாலே கோணல்தான். சினிமா என்றாலே சீரழிவுதான். அதிலே நல்ல சினிமா கெட்ட சினிமா என்று ஏன் பிரிக்கவேண்டும்? கழுதை விட்டையில் முன்விட்டை என்ன? பின்விட்டை என்ன? எல்லாம் விட்டைதானே!


உங்களைப் பார்த்து நான் கேட்கிறேன்: சினிமாவைப் பார்த்து சீர்திருந்தியதாக ஒரு வரலாறு உண்டா? படம் பார்த்து முன்னுக்கு வந்ததாக சரித்திரம் உண்டா? சினிமாப் பார்த்து சீரழிந்ததாக எத்தனையோ வரலாறுகளை என்னால் காட்டமுடியும். ஒன்றா இரண்டா? நடுவர் அவர்களே.
குறித்துக் கொள்ளுங்கள்.
 இதோ தினத்தந்தியிலே வந்த செய்தி: பம்பாயில் இரண்டு சிறுவர்கள் ஒரு பணக்காரனின் குழந்தையைக் கடத்தி வைத்துக்கொண்டு ரூபாய் பத்தாயிரமும் தங்கச் செயினும் தந்தால்தான் விடுவோம்; தராவிட்டால் குழந்தையைக் கொன்றுவிடுவோம்'' என்று ஃபோனில் மிரட்டினார்கள். போலீஸ் குறிவைத்து அவர்களைப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் சொன்ன வாக்குமூலம் என்ன தெரியுமா?  ''கேல்கேல்மேன்' எனும் திரைப்படம் பார்த்தோம்; அதில் இப்படித்தான் மிரட்டி பணம் பறிக்கும் காட்சியைக் கண்டோம். அது எங்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது; நாமும் இப்படி செய்தால் பெரிய செல்வந்தனாக ஆகலாமே என்றுதான் செய்தோம்; ஆனால் மாட்டிக்கொண்டோம்'' என்றார்களாம்.

 இதோ இன்னும் கேளுங்கள்: டி.வி படத்தால் வந்த விபரீதங்கள்: அமெரிக்காவிலே பாஸ்டன் நகரிலே ஐந்து வயது சிறுவன் இரண்டு வயது பெண் குழந்தையை கத்தியால் குத்திக் கிழித்துவிட்டான். ஏன் இப்படி செய்தாய்? என்று கேட்டதற்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா? ''இரண்டு நாட்களுக்கு முன் இரண்டு படங்கள் பார்த்தேன் அதில் அதிகமான கத்திக்குத்து சம்பவங்களும் வன்முறை வெறியாட்டங்களும் அடிக்கடி காண்பிக்கப்பட்டது. இதேபோல் நாமும் செய்து பார்த்தால் என்ன? என்று விளையாட்டாக செய்தேன்; வினையாகிவிட்டது என்றான்.
பார்த்தீர்களா என் சமுதாயமே! நன்முறையில் வாழவேண்டிய பிள்ளைகள் வன்முறையில் வாழ நினைத்ததற்கு என்ன காரணம்?

எனக்கு முன் பேசியவர் டி.வியிலே காட்டப்படும் விளையாட்டுகளைப் பார்த்து வீரம் வரத்தானே செய்கிறது என்று வீராப்பாய் பேசிவிட்டுப் போயிருக்கிறார். நான் கேட்கிறேன்: டி.வியிலே விளையாட்டுகளைப் பார்த்து வீரம் வருகிறதோ இல்லையோ வெறித்தனம் வருகிறது.


வெறித்தனம் வருகிறது:

நடந்த சம்பவம் ஒன்று:  உலகக் கோப்பையை இந்தியா பெறுமா? பாக்கிஸ்தான் பெறுமா? என்று இரு இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட சூடான வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. ஒருவரையொருவர் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர். படுகாஅயம் அடைந்த நாசிர் என்பவர் ஆஸ்பத்திரி கொண்டும் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். திண்மனியிலே வந்த செய்தி. விளையாட்டு தேவைதான்; அதற்காக இவ்வளவு வெறித்தனம் தேவையா? இதை உருவாக்கியது எது? பாலாய்ப்போன டி.வி.தானே.

 பைத்தியமே பிடித்துவிடுகிறது:
அதாவது பரவாயில்லை. சில நேரம் பைத்தியமே பிடித்துவிடுகிறது இந்த டி.வி.யைப் பார்த்து. டி.வி.யிலே ஹாக்கி போட்டியை ரசித்துக்கொண்டிருந்தார் ஒரு ரசிகர். அமெரிக்கா கோல் போட்டபோது சந்தோஷம் தாங்க முடியாமல் என்ன செய்வது எனப் புரியாமல் தன் கையில் இருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டாராம். 1998-ல் தினமணியில் வந்த செய்தி. விளையாட்டில் கூட விபரீதத்தை விதைக்கின்ற இந்த டிவி தேவைதானா? கூறுங்கள் நடுவர் அவர்களே கூறுங்கள்.

சில பேர் கூறுவார்கள்: சினிமாக்கள்தானே சீரழிக்கிறது? சினிமாவை விட்டுவிட்டு சீரியல்களைப் பார்க்கலாமே! நாடகங்களில் நல்ல கருத்தும் வருகிறதே. அதைப் பின்பற்றலாமே! என்றெல்லாம் பசப்புகிறார்கள். பாருங்கள் நான் இப்படிச் சொன்னவுடன் தாய்க்குலங்கள் எல்லாம் தலையாட்டுகிறார்கள். எந்தள்வுக்கு அவர்களுக்கு நாடகங்கள் மேல் நம்பிக்கை. சாப்பிட மறந்தாலும் மறப்பார்கள்.. நாடகம் பார்க்க மறக்கமாட்டார்கள். நாடகங்களில் பெரும்பாலும் என்ன வருகிறது? 
மாமியாரை எப்படியெல்லாம் ஏமாற்றலாம்?
மருமகளை எப்படியெல்லாம் கொடுமைப் படுத்தலாம்?
கணவனுக்கு எப்படியெல்லாம் மாறு செய்யலாம்?
மனைவிக்கு எப்படியெல்லாம் துரோகம் செய்யலாம்
?
இதுதானே அதிகமாக காட்டப்படுகிறது? இந்த கன்றாவியை எல்லாம் கண்டிப்பாக பார்க்கத்தான் வேண்டுமா? பார்க்காவிட்டால் பசியெடுக்காதா? தூக்கம் வராதா? என்ன கொடுமை இது? 
  • நல்ல நாடகம் இண்ட்ரெஸ்டா பார்த்துக்கொண்டிருக்கும்போது வீட்டுக்கு யார் வந்தாலும் அவர்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
  • கட்டிய கணவன் வந்தாலும் கண்டுகொள்வதில்லை.
  • உற்றார் உறவினர் வந்தாலும் உபசரிப்பதில்லை; 
  • நல்ல நண்பர்கள் வந்தாலும் நலம் விசாரிப்பதில்லை; 

ஏண்டா இந்த சனியன்கள் இந்த நேரத்தில் வந்தார்கள் என்று ஏகப்பட்ட எரிச்சலோடு எரிமூஞ்சியைக் காட்டுகிறார்கள். பார்த்தீர்களா இந்த டி.வி. வந்து நம்மை எவ்வளவு பெரிய பாவியாகிவிட்டது? இப்பொழுது சொல்லுங்கள் டி.வி நிஃமத்தா? முசீபத்தா? நிச்சயமாக முசீபத்துதான் என்று கூறி என்னுரைக்குத் திரையிடுகிறேன். 


இது தொடர்பான இதர பதிவுகள்:






27 மார்ச், 2012

திருத்தப்படவேண்டிய திருமணச் சடங்குகள்-நாடகம்4


நாடகம் பகுதி-1 ஐ படிக்க இங்கே அழுத்தவும்

                                    காட்சி-7

பஷீர் பாய் சலீம் பாயின் பரிதாபமான நிலை கண்டு இறங்குகிறார் அவர் சலீமை சந்தித்து பேசுகிறார்:
''சலீம் பாய்.. இப்ப நடந்த எல்லாத்தையும் நான் பார்த்துட்டுதான் இருந்தேன். ஒரு சமுதாயத்துல ஒரு சிலர் செய்யிறத வச்சு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தப்பா எடை போடக்கூடாது. உங்களுடைய மன உறுதியை நான் பாராட்டுறேன். உங்களுக்கு சம்மதம்னா உங்க பொண்ண எம் பையனுக்கு எடுத்துக்கிறேன். நயா பைசாக்கூட வேணாம். என்ன சொல்றீங்க?''

உன்மையாவா சொல்றீங்க?

''ஆமாங்க சலீம் பாய். மார்க்கமும் ஒழுக்கமும் உள்ள பொண்ணைத்தான் நான் தேடிக்கிட்டு இருந்தேன். உன்மையான வெற்றி அதுலதானே இருக்கு? நம்ம நபி (ஸல்) அவர்கள்கூட அழகாச் சொன்னாங்களே:
''பொதுவா பொண்ணு பார்க்குறவங்க பணத்தப் பார்த்து முடிக்கிறவங்களும் உண்டு; பரம்பரையப் பார்த்து முடிக்கிறவங்களும் உண்டு; அழகைப் பார்த்து முடிக்கிறவங்களும் உண்டு. ஆனாஒழுக்கத்தைப் பார்த்து முடிக்கிறவங்கதான் வெற்றி பெற முடியும் ''
அப்படின்னு சொன்னாங்க இல்லையா? அதனாலதான் உங்க பொண்ணை நான் தேர்ந்தெடுத்தேன். அதுமட்டுமில்ல.. புதுசா முஸ்லிமான உங்க குடும்பத்துல நான் பெண்ணெடுத்தா எனக்கு டபுள் நன்மை உண்டு. அது பெரும் பாக்கியம். அதனால கவலைப் படாதீங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்.

''ரொம்ப நன்றிங்க.. அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுசப் போட்டு வப்பான்''

காட்சி-8
(பஷீரும் மகன் அப்துல்லாஹ்வும்):



மகனே அப்துல்லாஹ். இங்கே வாயேன் ஒரு நல்ல செய்தி.

என்ன வாப்பா சொல்லுங்க

மகனே உனக்கு ஒரு நல்ல இடத்துல பொண்ணு பார்த்திருக்கேன்

வாப்பா.. இப்ப எதுக்கு எனக்கு கல்யாணம்?

என்ன ராசா இப்படி சொல்லுற? உனக்கு 24 வயசாச்சு.மூன்றாம் எட்டில் முடிக்காதது திருமணம் அல்ல என்று முன்னோர்கள் சொல்லியிருக்காங்க. நீ சரின்னு சொன்னா மேற்கொண்டு காரியத்தப் பார்க்கலாம். என்ன சொல்ற?

வாப்பா.. உங்க பேச்சுக்கு எப்ப நான் மறுபேச்சு பேசியிருக்கேன்.  நீங்க செய்தா அது சரியாத்தான் இருக்கும். ஆனா ஒரு விஷயம். நான் யாரைக் கல்யாணம் செய்யணும்னு நீங்க முடிவு பண்ணின மாதிரி கல்யாணம் எப்படி நடக்கணும்னு நான் முடிவு பண்ணுறேன்.. ஓகேயா?

ஓகே. சொல்லு எப்படி நடக்கணும்?

என்னோட கல்யாணம் முழுக்க முழுக்க சுன்னத்தான முறைப்படி நடக்கணும். வெள்ளியிலே ஜும்ஆ பள்ளியிலே....

அப்படின்னா என்ன? கொஞ்சம் விளக்கமா சொல்லுவேன்

பல நபிமார்களுக்கும் நல்லோர்களுக்கும் கல்யாணம் நடந்த வெள்ளிக் கிழமையிலே என்னோட கல்யாணமும் நடக்கணும். பெரிய அலங்காரத் தோரணமோ ஆடம்பரமோ இல்லாம பள்ளியிலே எளிமையா நடக்கணும். பத்திரிக்கைக்கூட அடிக்க வேணாம் வாப்பா.

பத்திரிக்கை இல்லாம எப்படிப்பா?

சரி. சிம்பிளா அடிங்க. ஆனா அந்த பத்திரிக்கையில மொய் வாங்குவதில்லை என்பதை முக்கியமா காட்டிடுங்க. அப்புறம் சுன்னத்தான தப்ஸ் ஊர்வலம் இருந்தா நல்லது. மத்தளம் கொட்டு இல்லாம ஆட்டம் பாட்டம் இல்லாம தாரைத் தப்பட்டைகள் கிழிந்து தொங்காம குடி கும்மாளம் இல்லாம நல்ல முறையில இருக்கணும்.

சரி.. அப்புறம்?

முகத்தையே மறைக்கிற அளவுக்கு மாலை போடாம சிம்பிளா ஒரே ஒரு மாலை போதும். மாப்பிள்ளை என்பதற்கு ஒரு அடையாளமாகவும் நறுமணமாகவும் இருக்கும். அதுமட்டுமில்ல.. மலர்கள் இருக்கும் சபையில் மன இறுக்கம் மன அழுத்தம் ஏற்படாது என்பது மருத்துவம். அதனால ஒரு ஒரே ஒரு மாலை போதும்.


சரிப்பா.. வீடியோவுக்கு சொல்லிரவா?

வீடியோவா? அறவே வேண்டாம். ஃபோட்டோ எடுக்கிறதப் பத்திக்கூட யோசிக்கணும் வாப்பா. ஏன்னா ஃபோட்டோ எடுக்கிற சாக்குல ஜமாத்த காக்க வச்சிரக்கூடாது. அதனால நிறைய பேரோட பொன்னான நேரமும் வீணாகி வேலையும் கெட்டுப் போயிடும். நம்ம சக்திக்கு தக்கவாறு ஒரு சில ஆடுகளையாவது அறுத்து வலீமா விருந்து கொடுத்துறணும். அதுல ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுத்துறணும். ஏன்னா ஏழைகளை விட்டு விட்டு பணக்காரங்களை மட்டும் கூப்பிட்டு கொடுக்கிற விருந்து தரங்கெட்ட விருந்து அப்படின்னு நம்ம நபி (ஸல்) சொல்லியிருக்காங்க.

சரி மகனே. நான் போயி ஆட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்துர்றேன். இந்தா ஒரு 50,000 ஐ நீ வச்சிக்க.

50,000 மா? ஏன் வாப்பா எனக்கு அம்பதாயிரம்?

உனக்கில்லப்பா. உன்னோட ஃபிரண்ட்சுக்கு பார்ட்டி வைக்கணுமில்ல. அதுக்குத்தான்.

என்ன வாப்பா. நீங்களே இப்படி பேசலாமா?

அதில்லப்பா. எம் மகன் கல்யாணம். நிறைய பேர் வந்து வாழ்த்தணும்னு எனக்கு ஆசை இருக்காதா? இப்பவெல்லாம் 'தண்ணீ'  வாங்கிக் கொடுத்தானே கல்யாணத்துக்கு வர்றாங்க?

அதுக்காக..? அனாச்சாரத்தை செய்யமுடியுமா? நல்லா சொல்றேன் கேட்டுக்குங்க. 'தண்ணீ 'வாங்கிக் கொடுத்தான் கல்யாணத்துக்கு வருவாங்கன்னா அப்படி ஒரு நட்பே எனக்குத் தேவை இல்லை. அவங்க வந்து வாழ்த்தித்தான் நான் வாழணும்னு அவசியமில்லை.

வெரிகுட் வெரிகுட். எம்புள்ளன்னா எம்புள்ளதான். அப்பனுக்குப் புள்ள தப்பாம பொறந்துட்டடா!
                                                             ------------

காட்சி-9
 (சலீம் பாய்,  கரீம் பாய்)



''அஸ்ஸலாமு அலைக்கும் கரீம் பாய்''

''வ அலைக்குமுஸ் சலாம் சலீம் பாய் இப்ப என்ன விஷயமா வந்தீங்க? அதேன் அன்னைக்கே சொன்னேன்ல. நமக்குள் சம்பந்தம் இல்லைன்னு. இப்ப எந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு வந்தீங்க? நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதாதா?''

கரீம் பாய்.. அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம். எம் மக ஆயிஷாவுக்கு ஒரு நல்ல இடம் அமைஞ்சிருக்கு கைக்கூலி நயாப் பைசாக்கூட இல்ல அந்த கல்யாணத்துக்கு முதல் அழைப்பே உங்களுக்குத்தான். நீங்கதான் அதைத் தலைமை தாங்கி நடத்தி தரணும்.''

என்னது நானா? நிஜமாவா சொல்றீங்க?

ஆமா நிச்சயமா நீங்க கல்யாணத்துக்கு வரணும்.

ஆகா... சலீம் பாய் நீங்க நீங்கதான். என்ன பெருந்தன்மை உங்களுக்கு! உங்களை எப்படியெல்லாம் ஒதுக்கினேன்? நீங்க எவ்வளவு தூரம் என்னை மதிக்கிறீங்க?!

கரீம் பாய்.. என்னதான் இருந்தாலும் நீங்க எனக்கு வழிகாட்டி இல்லையா? நான் நரகத்தின் படுகுழியில் கிடந்தேன்; நீங்கதான் கைகொடுத்து கலிமா சொல்லிக் கொடுத்து சொர்க்கத்திற்கு சொந்தக்காரனாக மாத்துனீங்க. அதனால இந்த கல்யாணம் உங்க துஆவுலதான் நடக்கணும்.

''இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா வர்றேன்.''

அல்லாஹ்வின் கிருபையால் சலீமின் இல்லத் திருமணம் கரீம் பாய் தலைமையில் ஜமாத்தார்கள் புடைசூழ இனிதே நடந்தது..
மிக எளிமையாக!

வாங்க வாசகர்களே! நாமும் அந்த முன்மாதிரி திருமணத்தை வாழ்த்திட்டு 'வலீமா' விருந்தை ஒரு பிடி பிடிச்சிட்டு வருவோம்.