பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 ஆகஸ்ட், 2015

பாதுகாப்புக் கவசம்.. வேணும் கைவசம்!


  • பாவையரின் பாதுகாப்புக் கவசம் பர்தா!
  • உண்மையான உத்தமிகளின் உடலில் பர்தாவும் உள்ளத்தில் உறுதியான ஈமானும் இருந்தால் அவர்களைக் காக்க கருவிகள் தேவையில்லை; ‘லேடீஸ் சேஃப்டி ஷாக்கர்’ அவசியமில்லை. 
  • பர்தாவே அவர்களுக்கு பாதுகாப்புக் கவசம்தான்.
  • சமீபத்தில் லண்டன் மாநகரில் நடந்த நிகழ்வு ..
  • இன்னும் பல அரிய தகவல்கள்.. 
  • மலேசிய மின்னல் பண்பலையில் வெள்ளி தோறும் வலம் வரும் வாழ்வியல் வசந்தம்.. 
  • கேட்க... பதிவிறக்கம் செய்ய...

10 ஆகஸ்ட், 2013

வந்து விட்டது வாழ்வியல் நூல்: "பெண்கள் சமுதாயத்தின் கண்கள்"



இதோ வெளிவந்துவிட்டது... 
பெண்களுக்கான ஓர் அருமையான வாழ்வியல் நூல்.

"பெண்கள் சமுதாயத்தின் கண்கள்"


விலை 20 ரூபாய் மட்டுமே. 

1. குடும்பத்தின் குல விளக்கு 
o  நல்ல மனைவி யார்?
o  தொழுவாள்; தொழுமாறு தூண்டுவாள் !
o  பின் தூங்கி முன் எழுவாள்  பத்தினி!
o  வாசல் தெளிப்பது வளம் சேர்க்கும் .
o  வள்ளுவரும் வாசுகியும்!
o  கணவனே சொர்க்கமும் நரகமும் !
o  இலத்தரசி: இல்லத்தின் வாயிற்படி!

2. காரியம் சாதித்த காரிகைகள் 
o  மலடி கூட மன்றாடிக் கேட்டால் மழலைச் செல்வம் உண்டு.
o  தொழுகையும் துஆவும் துணை செய்யும். 

3. பாதுகாப்புப் பெற்ற பாவையர் 
o  தொட்டால் ஷாக் இன்று; தொடாமலேயே ஷாக் அன்று.
o  உடலில் பர்தா; உள்ளத்தில் உறுதியான ஈமான்.
o  பர்தா ஒரு கொடுமையா?
o  கவர்ச்சி, கற்புக்கு களங்கம் மட்டுமல்ல; ஆண்மைக்கும் ஆபத்து!
o  பர்தா அவசியமா? அநாகரீகமா?- விவாதம் 
o  வலிப்பு கூட பரவாயில்லை; ஆடை விலக அனுமதிக்க மாட்டேன்!
o  அந்நியன் பார்வையில் பட்ட அங்கம் அவசியமில்லை!
o  நாணம் வேண்டாமா நங்கையரே?

4. அள்ளி வழங்கிய அன்னையர் 
o  நகையும் தொகையும் தந்த நங்கையர். 
o  ஒரு லட்சம் தீனாரும் ஒரே நாளில் தீர்ந்தது.
o  உம்மு ஷரீக் (ரலி) அவர்களின் உதவி.
o  கதிஜா (ரலி) அவர்களின் கருணை. 

5. சகல துறையிலும் சாதித்த பெண்கள் 
o  ஹதீது கலை 
o  ஆத்மஞானப் பாதை 
o  வீரம் 
o  புலமை 
o  பொதுசேவை

இன்னும் பல தலைப்புகளில் அரிய தகவல்கள்.

தொடர்புக்கு:
ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி பாஜில் தேவ்பந்த் 
        9865369819
sadhakmaslahi@yahoo.com,  sadhak532@gmail.com


16 ஜூன், 2013

இல்லற வாழ்க்கையில் வள்ளுவரும் வாசுகியும்

இல்லறம்
உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்? அவரது மனைவி வாசுகி தான்.

அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். தன் கணவர் சாப்பிடும் போது, கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள ஒரு கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் அந்த சோறைப் சாப்பாட்டுடன் கலந்து கொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? என்று வினவியதற்கு ''அன்னம்  புறத்து சிதறினால் அதை எடுத்து சுத்தம் செய்து உண்ணவேண்டும். அது விசாலமான இரணத்தை தரும்'' என்றார். 
வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவருக்கும், வள்ளுவருக்கும் துறவறம் பெரிதா, இல்லறம் பெரிதா என்ற பேச்சு எழுந்தது. வள்ளுவர் இல்லறத்தின் பக்கம் நின்றார். அவர்கள் சாப்பிட ஆரம்பித்தனர். வாசுகி அவர்களுக்கு பழைய சாதம் பரிமாறினார். பின், கிணற்றுக்கு தண்ணீர் எடுக்கச் சென்று விட்டார். வள்ளுவர் அவளை திடீரென அழைத்தார். "கிணற்றடியில் நிற்கிறேன், ஏதாச்சும் வேணுமினா போட்டுச் சாப்பிடுங்க' என்று கத்தவில்லை. அப்படியே கயிறை விட்டார். குடம் கிணற்றுக்குள் விழவில்லை. அப்படியே நின்றது. உள்ளே வந்த அம்மையாரிடம், ""இந்த சோறு சுடுகிறது,'' என்றார். அம்மையார் பதிலேதும் பேசாமல், விசிற ஆரம்பித்து விட்டார். பழைய சோறு எங்காவது சுடுமா? இருப்பினும், வாசுகி கணவரைக் கேள்வி ஏதும் கேட்காமல் பணிவிடை செய்தார். துறவி ஆச்சரியப் பட்டார். வள்ளுவர் நெசவுத்தொழில் செய்பவர். தறியின் ஓடத்தை பட்டப்பகல் வேளையில் கீழே போட்டு விட்டு, ""வாசுகி, ஓடம் கீழே விழுந்து விட்டது. விளக்கை எடுத்து வா,'' என்றார். பகலென்றும் பாராமல், கேள்வி கேளாமல் அம்மையார் விளக்கை எடுத்து வந்தார். கணவனின் சொல் கேட்கிற மனைவி மட்டும் கிடைத்து விட்டால், துறவறத்தை விட இல்லறமே மிகச்சிறந்தது என்றாராம் அந்த பெரியவர்.

இத்தகைய அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார். ''நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு'' என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தப் புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார் நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,
அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு
என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா!


21 மே, 2013

என்னை நீங்கள் நினையுங்கள்; உங்களை நான் நினைக்கிறேன்

மலடி கூட மன்றாடிக் கேட்டால் மழலைச் செல்வம் உண்டு:
மூஸா அலை அவர்களிடம் ஒரு பெண் வந்து குழந்தைக்காக துஆ செய்யும்படி வேண்டினாள். நபி துஆ செய்தார்கள் அல்லாஹ் கூறினான் : அவள் ஒரு மலடி என்று நான் ஏற்கனவே எழுதிவிட்டேன் என்றான். ஒரு ஆண்டு கழிந்து மீண்டும் வந்து துஆ செய்யும்படி வேண்டினாள் . மீண்டும் அதே பதில் இறைவனிடம்.
அடுத்த ஆண்டு அதே பெண் கையில் குழந்தையோடு வந்தபோது இது யாருடைய குழந்தை என்று கேட்டார்கள். என்னுடையதுதான் என்றாள்.

09 பிப்ரவரி, 2013

உத்தமிகளே உங்களைத்தான் ...


 உடலில் பர்தா; உள்ளத்தில் உறுதியான ஈமான்:
சென்ற தொடரில் பெண்களைப் பாதுகாக்க நவீன கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட தகவலைத் தந்தோம்
ஆனால் உண்மையான உத்தமிகளின் உடலில் பர்தாவும் உள்ளத்தில் உறுதியான ஈமானும் இருந்தால் அவர்களைக் காக்க கருவிகள் தேவையில்லை
பர்தாவே அவர்களுக்கு பாதுகாப்புக் கவசம்தான் சமீபத்தில் லணடன் மாநகரில் நடந்த நிகழ்வு ஒன்று :
ஒரு ஒதுக்குப் புறம்பான ஓரப் பகுதியில் சில ரவுடிகள் ஒளிந்து நின்றுகொண்டு அந்த வழியாக வரும் பெண்களை

07 பிப்ரவரி, 2013

தொட்டால் ஷாக் இன்று ; தொடாமலேயே ஷாக் அன்று

பெண்களுக்கெதிரான குற்றங்கள் பெருகிவரும் சூழலில் அவர்களைக் காப்பாற்ற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன . பாலியல் பலாத்காரக் குற்றங்களுக்கு மரண தண்டனை , அல்லது நீண்ட கால சிறை தண்டனை போன்ற சட்டங்கள் அதிரடியாக நடைமுறைக்கு வந்துள்ளன  .
இந்நிலையில் இரண்டு இளைஞர்கள் ஒரு புதிய கருவியைக் கண்டு பிடித்துள்ளனர்.

05 டிசம்பர், 2012

மூன்று மாத இத்தா ஏன்? - ஒரு அறிவியல் விளக்கம்



யூத விஞ்ஞானி ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை ஏற்றார்

கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். இவரது மனமாற்றத்திற்கு வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம்.

‘மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்” (2:228) என்கிறது அத்திருவசனம்.

மணவிலக்கு செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே -அதாவது மூன்று மாதவிடாய் பருவங்களில் ‘இத்தா’ இருந்த பின்பே மறுமணம் செய்ய வேண்டும்

‘‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) தங்கள் விஷயத்தில் காத்திருக்க வேண்டும்’’ (2:228) என்கிறது ஒரு வசனம். இந்த வசனத்தைப் படித்தபோதுதான் ராபர்ட் மனம் மாறினார்.

ராபர்ட் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்-கொண்டிருந்தார். கைவிரல் ரேகைப் பதிவு (Finger Printing) ஒரு மனிதனை அடையாளம் காட்டுவதைப் போன்றே, டி.என்.ஏ. ரேகைப் பதிவு தம்பதியரை அடையாளம் காட்டிவிடும். ‘ஒரு பெண்ணில் பதிவாகியுள்ள ஆணின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு மூன்று மாதங்களுக்குப் பிறகே அழியும்” என்பது ராபர்ட்டின் ஆராய்ச்சி முடிவு. அதையே குர்ஆனின் இவ்வசனம் கூறுகிறது என்பதைக் கண்ட யூத விஞ்ஞானி ஆடிப்போனார்; குர்ஆனை ஏற்றார்.

இது தொடர்பாக, எகிப்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது சையித் கூறுகிறார்:

அறிவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டே ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தில் இணைந்துள்ளார்.
தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண் தனது பாலின ரேகையைப் பெண்ணிடம் விட்டுச்செல்கிறான். அந்த ரேகை மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுபிடித்தார்.அதற்கேற்ப, அமெரிக்காவில் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் கள ஆய்வில் இறங்கினார் அவர் அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவர்களது ரேகை மட்டுமே பதிவாகியிருந்தது. அதே நேரத்தில், அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது, அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களில் பதிவாகியிருந்தன.

ராபர்ட் கில்ஹாம் அதிரடியாக ஒரு காரியம் செய்தார். அவர் தம் மனைவியை மருத்துவப் பரிசோதனைக்கு ஈடுபடுத்தினார். அவளிடம் மூன்று ரேகைப் பதிவுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அத்துடன் தம்முடைய மூன்று மகன்களில் ஒருவன் மட்டுமே தமக்குப் பிறந்தவன் என்பதையும் கண்டறிந்தார்.

இதிலிருந்து, மூன்று மாத ‘இத்தா’ ஏன் கடமையாக்கப்பட்டது என்பதற்கான காரண விளக்கமும் கிடைக்கிறது. முந்தைய கணவனின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு முற்றாக அழிய மூன்று மாதங்கள் பிடிக்கும். அதன்பின் அவள் மறுமணம் செய்துகொண்டால், டி.என்.ஏ. பரிசோதனையில் குழப்பம் இராது. இல்லையேல், மறுமணம் செய்தபின் பிறக்கும் குழந்தையின் டி.என்.ஏ.வும் முந்தைய கணவனின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போக இடமுண்டு. குழந்தை யாருடையது என்ற குழப்பம் வெடிக்கும்.
- மௌலவி அ.முஹம்மது கான் பாகவி
நன்றி - சமரசம்

சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே!

08 அக்டோபர், 2012

வரதட்சணைக்கு பெரிதும் காரணம் பெண்களே-3


திருமணச் சடங்கு
நடுவர் அவர்களே! 
ஒரு பெண்ணைக் கட்டிக் கொடுத்தால் அவளுக்கு புகுந்த வீட்டில் ஏற்படும் கொடுமைகளில் ஒன்று நாத்தனார் கொடுமை. இந்த நாசம் பிடித்த நாத்தனார்கள் சுனாமிகளைப் போல் குடும்பத்தை நாசம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

  •  இந்த மாமியார் நாத்தனார் என்ற பெண்களின் கோரப்பிடியில் சிக்கி சீரழியும் பெண்கள் எத்தனை? 
  • இவர்களால் ஸ்டவ்கள் வெடித்து பரிதாபமாய் பலியான பெண்கள் எத்தனை? 
  • தீக்குளித்த பெண்கள் எத்தனை? 
  • விஷம் குடித்த பெண்கள் எத்தனை? 
  • தற்கொலை செய்துகொண்ட பெண்கள் எத்தனை? 
இப்படி ஏராளமான மாபாதகங்களை செய்துகொண்டிருப்பவர்கள் இந்த பெண்கள்தான்.

ஒரு வாலிபன் வரதட்சணை வேண்டாம் என்று மறுத்தாலும் அவனைப் பெற்ற தாயும் சகோதரியும் சும்மா விடுவதில்லை. 
இதுல இரட்டை சீர்வரிசைன்னு ஒன்னு இருக்குங்க.. இதை எவதான் கண்டுபிடிச்சாளோ தெரியல.. இரட்டை சீர்வரிசைன்னா என்ன தெரியுமா? 
  • அண்டாவானா ரெண்டு; குண்டாவானா ரெண்டு.
  • சட்டியானா ரெண்டு பெட்டியானா ரெண்டு. 
இப்படி அண்டா குண்டா எல்லாமே ரெண்டு கொடுத்தா மட்டும் போதாது.அதுக்குள்ள 101 லட்டு வக்காட்டி குத்தம்; குழல் பணியாரம் வக்காட்டி குத்தம்; தேங்காயில ஒன்னு குறைஞ்சால குத்தம். இப்படி சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் குத்தம் கண்டுபிடிச்சு மார்க்கத்திலில்லாத மடமைகளை கடமைகளாக்கி வைத்திருப்பவர்கள் இந்த பெண்கள்தான். 

ஆகவே வரதட்சணை வாங்குவது பெண்களின் மடமை!
அதை வாங்காமலிருப்பது ஆண்களின் கடமை!!
எனவே வாட்டி வதைக்கும் வரதட்சணைக் கொடுமைக்கு பெரிதும் காரணம் பெண்களே! பெண்களே!! என்று உறுதிபடக் கூறி அமர்கிறேன்.

07 அக்டோபர், 2012

வரதட்சணைக்கு பெரிதும் காரணம் பெண்களே-2


தனிக்காட்டு ராஜாவாக அமர்ந்திருக்கும் சிங்கமே!
மரியாதைக்குரிய நடுவர் அவர்களே!
வரதட்சணை வன் கொடுமைக்கு பெண்கள்தான் காரணம் என்று அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்து சொன்னதற்குப் பிறகும் இந்த வருங்காலக் கிழவிகளுக்கு இன்னுமா புரியவில்லை?
வரதட்சணைக்கு மாத்திரமல்ல.. நடுவர் அவர்களே! உலகில் நடக்கும் அத்தனை தீமைகளுக்கும் இந்த பெண்கள் தான் காரணம். ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பார்கள் பெண்களால் ஆகின்றதோ இல்லையோ அழிவுதான் அதிகம் நடந்துகொண்டே இருக்கிறது.

ஆதிமனிதனாம் ஆதம் (அலை) அவர்களுக்கு பிறந்த காபீல் என்பவர் ஹாபீலைக் கொலை செய்தார். உலகில் நடந்த முதல் கொலை யாரால் நடந்தது தெரியுமா? இக்லிமா என்ற பெண்ணால்தான். அதுமட்டுமல்ல பெண்கள் சிறந்தவர்கள் பெண்கள் உயர்ந்தவர்கள் என்று பேசுகிறாங்க பெருசா..
அன்றைய பெண்களின் நிலை என்ன? இன்றைய பெண்களின் நிலை என்ன? அன்று தாய்மார்கள் குழந்தையை தொட்டிலில் போட்டு தாலாட்டும்போது இஸ்லாமிய பாடல்களை பாடினார்கள்.
கண்ணுறங்கு கண்மணியே! கருவில் வந்த கற்கண்டே !!
ஆண்டவன் தந்த அற்புதமே !
அல்லாஹு அக்பர் என்று உறங்கு! 
நீ அண்ணல் நபி ஆசியோடு உறங்கு 

ஆனால் இன்னைக்குள்ள தாய்மாருக்கு தாலாட்டுப் பாடவே தெரியல.. அப்படியே பாடினாலும் என்ன தெரியுமா பாடுறாங்க..

''ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டி
ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டி ''
(இந்த இடத்தில் வேறு ஏதாவது பாடலை சேர்த்துக் கொண்டாலும் சரியே)

இந்தமாதிரி பாலாய்ப்போன சினிமாப் பாடலைப் பாடி பாடி குழந்தைகளைக் கெடுத்து சமுதாயத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த பெண்கள்.

நடுவர் அவர்களே! நோகாம நொங்கு திங்குறதுன்னா என்ன தெரியுமா? சொல்றேன் கேளுங்க.. தன் பையனுக்கு மாத்திரம் நகையும் நட்டும் காசு பணத்தையும் அதிகமாக வாங்கி மருமகள் கொண்டு வந்ததையெல்லாம் தன் மகளுக்கு போட்டு கல்யாணம் பண்ணி வைக்கிற லேட்டஸ்டு கலாச்சாரம்தான் நோகாம நொங்கு திங்குறது.

ஆதியிலே வந்தவன் வீதியிலே போனானாம்.. நேத்து வந்தவன் நெய்யூத்தி தின்னானாம். அந்த கதையாவுல இருக்கு?
ஒரு பொம்பள தன் மகனுக்கு பொண்ணு பார்க்க போயி 150 பவுன் நகை போடனும்னு கேட்டாளாம். ''அடி ஆத்தி.. அப்படியென்ன ஒம் மகன் லாடு வூட்டு லபக்கு தாஸா.. இல்ல லாடு வூட்டு கொலாப்புட்டா? என்ன உத்தியோகம் பார்க்கிறான் என்று கேட்டால், ''எம்புள்ள S.I யா இருக்கான் அப்படின்னாங்க '' ''அது என்ன S.I அப்படின்னு கேட்டால், ''சும்மா இருக்கிறதுதான்'' அப்படின்னு சொன்னாங்க.
''சரி 150 பவுன் போடுகிறோம்.. நீங்க என்ன போடுகிறீர்கள்.? என்று கேட்டால் ''நாங்க அதை வாங்கி எடை போடுவோம்; குறைஞ்சா கல்யாணத்துக்கு தடை போடுவோம்'' அப்படின்னாங்க.
இப்படிப்பட்ட பெண் மாமியாரின் அவலட்சணங்களால்தான் வரதட்சணைக் கொடுமை காட்டுத்தீயாய் சமூகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது.

அருமையானவர்களே!

  • ஏங்கித் தவிக்கும் ஏழைக் குமர்களின் ஏக்கப் பெருமூச்சுகளைத் துடைத்திட 
  • வாடி வதங்கும் வண்ண மலர்களின் வருத்தங்களைக் கலைந்திட
  • கண்ணீர்க் கடலில் தினம் தினம் கலங்கிக் கிடக்கும் கன்னியரின் கவலைப் போக்கிட 
  • வாழ வழியின்றி விழி பிதுங்கி நிற்கும் பெண் குமர்கள் கரை சேர்ந்திட
  • வேதனைத் தீயில் வெம்பித் துடிக்கும் பெண் இனத்தின் துயர் தீர்ந்திட
  • கல்யாணச் சந்தையில் விலைபோக முடியாமல் விரக்தியின் விளிம்பில் நடைப் பிணமாய் வாழும் எண்ணற்ற அன்பு மலர்களை, அழகுப் பதுமைகளை வாழவைத்திட 
ஆண்கள் மாத்திரமல்ல பெண்களும் திருந்தவேண்டும் குறிப்பாக மாமியார் என்ற அல்லி ராணிகள் கெட்ட கள்ளி ராணிகள் கொள்ளை ராணிகள் திருந்தினால் மட்டுமே வரதட்சணை சனியனை ஒழிக்க முடியும். ஆகவே வாட்டி வதைக்கும் வரதட்சணைக் கொடுமைக்கு பெரிதும் காரணம் பெண்களே பெண்களே என்று கூறி என்னுரையை நிறைவு செய்கிறேன்.


சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே! 

28 ஜூலை, 2012

ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள்


ஆண்மை
பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது.


அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது. அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இது குறித்து கூறுகையில், நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்.


இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறதாம்.


அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் மிகவும் குறைவு. முதலில் இதற்கு கால நிலையும், உணவுப் பழக்கவழக்கங்களே காரணம் என கருதப்பட்டது. ஆனால் அதே காலநிலை, உணவுப் பழக்கத்தில் மேலை நாட்டினரால் அரேபிய ஆண்களைப் போல இருக்க முடியவில்லை.


இது ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் குழப்பியிருக்கிறது. அந்த குழப்பம் அவர்களுடைய கவனத்தை பிற காரணிகளின் மேல் திரும்பியிருக்கிறது. உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் யோசனை முளைத்திருக்கிறது.


அதன் பின்பே பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் ஆரோக்கியத்துக்கும் இடையேயான இந்த தொடர்பு தெரியவந்திருக்கிறது. தெருவிலும், பணித்தளங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் பாலியல் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது.


முக்கால்வாசி ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.


பெண்களின் கவர்ச்சிகரமான நடைபாதைகளில் ஆண்களின் ஆரோக்கியத்தைப் புதைக்கும் கல்லறைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன என்பது அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருக்கும் அதே வேளையில், தேவையற்ற பாலியல் கனவுகளை வளர்க்காமல் நட்புணர்வுடன் அடுத்த பாலினரை நோக்கும் மனநிலையை ஆண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை செய்கிறது.

24 மே, 2012

பெரியோரைப் பேணுவோம்

பெரியோரை மதிப்போம்

நல்லோர்கள் வாழ்வை நாம் புரட்டிப் பார்த்தால் அவர்கள் பெற்றோர் நலன் பேணுவதில்பெரும் அக்கறை எடுத்துக்கொண்ட விதத்தைப் படித்து மெய்சிலிர்த்துப் போகிறோம்.
பின்வரும் நிகழ்வுகளை வாசியுங்கள் சுப்ஹானல்லாஹ் இந்தளவு பேற்றோரைப் பேண முடியுமா என்று மூக்கில் விரல் வைத்து வியப்பின் விளிம்பைத் தொடுவீர்கள்.
கஹ்மஸ் இப்னு ஹஸன் ரஹ் அவர்கள் வீட்டில் ஒரு தேளைக் கண்டார்கள். அதை அடிக்க முனைந்தார்கள். அது விருட்டென்று ஓடி ஒரு குழிக்குள் மறைந்தது. அவர்கள் விடவில்லை. குழிக்குள் கையை விட்டு அதைப் பிடிக்க முயன்றார்கள். அது வசமாக தீண்டிவிட்டது. 
''ஏன் இந்தளவு சிரத்தை எடுத்துக்கொள்ளவேண்டும்? அதுதான் குழிக்குள் போய்விட்டதே..'' என்று வினவப்பட்டபோது, ''ஒரு வேளை அது வெளியே வந்து என் தாயாரைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சினேன். அப்படி எதுவும் நடப்பதற்குள் நாமே அதைக் கொன்றுவிடலாம் என எண்ணினேன்.'' என்றார்கள். இதைப் படிக்கும்பொழுது அபூபக்கர் ரலி அவர்களின் நினைவு நம் நெஞ்சில் நிழலாடுகிறது.
தவ்ரு குகையில் தாஹா நபியை மடியில் தாங்கி அருமை அபூபக்கர் (ரலி) அவர்கள் அமர்ந்திருக்கும்பொழுது அரவம் ஒன்று அவர்களின் பாதத்தைப் பதம் பார்க்க, 'தன் உயிர் போனாலும் பரவாயில்லை... களைப்புடன் கண்ணயர்ந்திருக்கும் கண்மணி அவர்களின் துயில் களைந்துவிடக் கூடாது என்று அந்த விஷத்தையும் வேதனையையும் சகித்துக்கொண்ட அபூபக்கர் (ரலி) அவர்களின் தியாகத்தைப் போன்ற நிகழ்வு இது.


இமாம் ஜைனுல் ஆபிதீன்( ரஹ்) சிறந்த ஒரு 'தாபிஈ'. 
அவர்களிடம் கேட்கபட்டது: ''நீங்கள் தாயைக் கவனிப்பதில் கண்ணுங்கருத்துமாய் உள்ளவர்கள். ஆனாலும் ஒருமுறை கூட தாயாருடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டதில்லையே. ஏன்?''
அவர்கள் கூறிய பதில்: என் தாயின் பார்வையில் பட்டு அவர்கள் மனம் விரும்பிய ஏதேனும் ஒரு உணவுப் பகுதியை நான் கவனிக்காமல் அள்ளி உண்டுவிடுவேனோ அதன் காரணமாக அவர்களைப் புண்படுத்திய குற்றத்திற்கு ஆளாகிவிடுவேனோ'' என்று அஞ்சுகிறேன்.


முஹம்மது இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் தாயாரிடம் உரையாடும்பொழுது குரலைத் தாழ்த்தி தனிந்த குரலில் பேசுவார்கள். பார்க்கிறவர்கள் ''என்ன இப்னு சீரீனுக்கு ஏதாவது உடம்புக்கு முடியலையா?'' அடங்கி ஒடுங்கி அமைதியாக பேசுகிறாரே'' என்று கேட்பார்களாம்.


இப்னு அவ்னில் முஸ்னீ ரஹ் அவர்களும் அப்படித்தானாம். ஆனால் ஒருமுறை அவர்களை அவரது தாயார் சற்று தூரத்தில் நின்றிருந்ததால் சப்தமிட்டு அழைக்க இவர்களும் சப்தமிட்டு குரல் கொடுத்தார்களாம். நம்மைப் பொருத்தவரை இதுவெல்லாம் நம் வாழ்வில் அன்றாட நிகழ்வு. ஆனால் அவர்களோ அதைப் பெருங்குற்றமாக நினைத்து இரண்டு அடிமைகளை உரிமையிட்டு அதற்கு பரிகாரம் தேடினார்கள்.


தல்க் இப்னு ஹபீப் (ரஹ்) அவர்களின் வாழ்வு மிக மிக ஆச்சரியம். அவர்கள் தன் தாயின் தலையைத் தடவி முத்தமிடுவார்கள்; தாய் கீழிருக்கும்போது மாடிக்கு இவர்கள் ஏறியதே இல்லை. தாயின் பாதத்தின் கீழ்தான் சுவனம் உள்ளது அந்த தாயின் தலைக்கு மேல் நம் பாதம் இருப்பதா? அவர்கள் மனம் அதற்கு இடம் தரவே இல்லை.


விவேகானந்தர் ஒருமுறை அமெரிக்காவிற்கு பிரச்சாரம் செய்யக் கிளம்பினார். அம்மாவிடம் பயணம் சொன்னார். அப்போது அம்மா மகனே அதோ அந்த கத்தியை எடுத்து என்னிடம் தந்துவிட்டுப் போ என்றார். அந்த அவசர நேரத்திலும் கத்தியை எடுத்துக் கொடுத்தார் என்பது ஆச்சரியமல்ல. கத்திமுனையை தன் பக்கமாக பிடித்துகொண்டு பிடியை தாயாரிடம் நீட்டினார். கொடுக்கும் அவசரத்தில் கத்தி குத்தினால் அது என் கையாக வேண்டுமானால் இருக்கட்டும் என் தாயின் கையில் ஒரு கீறல் விழுவதைக்கூட சம்மதியேன். ''மகனே நீ மக்களுக்கு உபதேசம் செய்ய தகுதியானவன். போய்விட்டு வெற்றியோடு திரும்பி வா'' என்று அந்த தாய் வாழ்த்தி வழியனுப்பினாள்.


குர்ஆன் நெடுகிலும் நாம் காண்கிறோம். இறைவனுக்கு செய்யும் கடமைக்கு அடுத்தபடியாக பெற்றோருக்கு செய்யவேண்டிய கடமையே பிரதானப்படுத்துகிறான் இறைவன். 
وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا [ النساء: 36.
قُلْ تَعَالَوْا أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ أَلَّا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا [ الأنعام:151)

 وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَأَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّي ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا [ الإسراء: 23، 24.
وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ [ لقمان: 14




தாய் தந்தையர் பொழியும் பாசத்தை பிள்ளைகளில் எத்தனை பேர் அவர்களுக்கு திருப்பித் தருகிறார்கள்?
தான் உண்டு தன் வேலை உண்டு தன் குழந்தைகளுண்டு என்று வருடக் கணக்கில் பெற்றோரை திரும்பிக் கூடப் பார்க்காத பலர் உண்டு
காரணம் கேட்டால் ''நான் சிறுவனாக இருந்தபோது என் தந்தை என்னைக் கான்வெண்டில் படிக்கவைக்கவில்லை; என்னைவிட மூத்தவன் மீதுதான் அவருக்கு பிரியம்; அம்மா எனக்கு எண்ணெய் ஏறிய கன்னங்கரேல் என்ற ஒற்றை மூக்குத்திதான் கொடுத்தார்; ஆனால் நேற்று வந்த மருமகளுக்கோ இரட்டைவடம் சங்கிலியைக் கொடுத்தார்'' என்று ஏதேதோ காரணம் சொல்வார்கள்
இன்னும் சிலரோ, ''இந்த இரண்டு கிழங்கட்டைகளுக்குமே மாத்தி மாத்தி வைத்தியம் பார்த்துக்கிட்டு இருந்தா நான் எப்போ நாலு காசு சேர்த்து வைக்கிறது?'' என்று அங்கலாய்ப்பார்கள்.
பொருள் ஈட்டுவதும் சிக்கனமாக செலவழிப்பதும் நல்ல பழக்கம்தான்; ஆனால் அதற்கு எதை விலையாகக் கொடுப்பது என்று இல்லையா?
வெளிநாட்டை பின்னனியாகக் கொண்ட ஒரு கற்பனைக் கதை..
அது ஒரு கிராமம். அந்த ஊர் பண்ணையாரிடம் ஒரு ஹெலிகாப்டர் இருந்தது. தான் சாவதற்குள் ஒரு முறையாவது அந்த ஹெலிகாப்டரில் பறந்து பார்க்கவேண்டும் என்று அந்த ஊரிலிருந்த வயதான மாது ஒருத்தி தன் மகனிடம் ஆசைப்பட்டுக் கேட்டாள். அவனுக்கு இதில் சிறிதும் விருப்பமில்லை. சாவப்போகிற நேரத்தில் கிழத்துக்கு என்னல்லாம் ஆசை வருகிறது பார்'' என்று புலம்பிக்கொண்டே பண்ணையாரிடம் சென்று விஷயத்தைக் கூறினான். அதற்கு பண்ணையார், நான் யாரையுமே பணம் வாங்காமல் ஹெலிகாப்டரில் ஏற்றிச் செல்வதில்லை; இருந்தாலும் உனக்காக ஒரு சலுகை தருகிறேன். ஹெலிகாப்டரை கன்னாபின்னாவென்று ஓட்டிப் பழகிவிட்டேன். தவிர நான் ஹெலிகாப்டர் ஓட்டும்போது பக்கத்தில்யாராவது பயத்தில் கத்தினால் நான் டென்ஷனாகி விடுவேன். அதனால் பயணம் செய்யும்போது நீங்கள் ஒரு துளி சப்தம்கூட எழுப்பக்கூடாது. இதை மீறி யாராவது கத்தினால் தரை இறங்கியது நூறு டாலர் அபராதம் கட்டவேண்டும் என்றார். மகனும் இதற்கு ஒப்புக்கொண்டார்.
பயணம் துவங்கியது. பண்ணையார் தான் சொன்னமாதிரியே ஹெலிகாப்டரை தாறுமாறாக ஓட்டினார்; வானத்தில் கரணம் அடித்தார். கடைசியில் தரை இறங்கியதும் பண்ணையார், பரவாயில்லையே நாம் ஆகாயத்தில் பறந்தபோது நீங்கள் ஒரு முனகல் சப்தம் கூட எழுப்பவில்லையே'' என்று பாராட்டினார். அதற்கு, ''ஆமாம். என் அம்மா ஹெலிகாப்டரிலிருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். ''அம்மா'' என்று கத்தினால் நூறு டாலர் அபராதம் கட்ட சொல்வீர்களே என்று எண்ணி என்னை நானே கட்டுப்படுத்திக்கொண்டேன்'' என்றானாம் அந்த அருமை(?) மகன்.
பெற்ற அம்மாவை விட இவனுக்கு பந்தயமும் பணமும் எப்படி முக்கியமாகப் போய்விட்டதோ அப்படித்தான் இப்போது பலருக்கும் பெற்றோரை விட மற்றவைகள்தான் முக்கியமாகப் போய்விட்டது.

இமாம் ஸஅதி (ரஹ்) குலிஸ்தானில் சுவையான நிகழ்வு ஒன்றைக் குறிப்பிடுகிறார்கள்: அவர்கள் மக்காவிற்கு ஹஜ்ஜு செய்ய சென்றிருந்தபொழுது அங்கு ஒரு இளைஞரை சந்தித்தார்கள். தம்பி, உங்களுக்கு எந்த ஊர்?'' அதற்கு அவன் தனது ஊரைக் குறிப்பிட்டான். ''அப்படியா? நான் அந்த ஊருக்கு வந்துள்ளேனே. நீ யாருடைய மகன்?''   ''நான் இன்னாருடைய மகன்'' அவன் தனது தந்தையின் பெயரைக் கூறினான். ''அடடா.. உனது தந்தை எனக்கு நண்பராயிற்றே அவர் முன்பு ஒரு தடவை ஹஜ்ஜுக்கு வந்திருந்தபொழுது நானும் வந்திருந்தேன். அவர் துஆ ஏற்றுக்கொள்ளப்படும் இடத்தில் நின்றுகொண்டு தனக்கு ஒரு ஆண் குழந்தை தந்தருளுமாறு இறைஞ்சினார். அதன்மூலம் பெறப்பட்ட குழந்தையா நீ? நல்லது. உன்னைப் பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நீ ஊருக்குத் திரும்பியதும் எனது சலாமை உன் தந்தைக்கு தெரியப்படுத்து'' என்று கூறி அவனிடமிருந்து விடைபெற்றார்கள். சில அடிகள்தான் எடுத்து வைத்திருப்பார்கள். அதற்குள் அவன் அவர்களைக் கைதட்டிக் கூப்பிட்டு ''நீங்கள் துஆ ஏற்றுக்கொள்ளப்படும் இடம் என்று கூறினீர்களே. அது எங்கே உள்ளது?'' என்றான். ''ஏனப்பா அதைக் கேட்கிறாய்'?'' 
''என் தந்தையை இறைவன் சீக்கிரம் எடுத்துக்கொள்ளட்டும் என்று அவ்விடத்தில் நின்று நான் துஆ கேட்கப்போகிறேன்'' என்றானாம். இமாம் ஸஅதி அப்படியே ''ஷாக்'' ஆயிட்டாங்களாம். இந்த மாதிரி பிள்ளைகளாக நாம் இருக்கக்கூடாது.



ஒரு அரசன் அறிவித்தான்: மக்களே! நம் நாட்டில் 80, 90 வயதைத் தாண்டி நிறைய பெருசுக இருக்காங்க. அவங்களால எந்த பயனும் இல்லை. பூமிக்குப் பாரமாக இருக்காங்க. அதனால எல்லாப் பெரிசுகளையும் தூக்கிட்டுப் போய் மலை மேல் விட்டுவிட்டு வந்துடுங்க. கழுகோ நாய் நரியோ அவர்களைக் கடித்துக் குதறித் திங்கட்டும்'ணு உத்தரவிட்டார்.
நாட்டு மக்களும் அரசனுக்கு பயந்து அவ்வாறே செய்தனர்.
ஒரு வீட்டில் தாத்தாவை பேரன் தூக்கிட்டுப் போனான். அவர் கேட்டார்: ஏண்டா பேராண்டி.. உன்னையும் உங்கப்பனையும் நான் எப்படியெல்லாம் பாசத்தைக் கொட்டி வளர்த்தேன். ஈவிரக்கமில்லாமல் என்னை மலைக்குத் தூக்கிட்டுப் போறீயே''
''ராஜாவின் ஆணை.. வேற வழி தெரியல தாத்தா..''
''நம் வீட்டில் பூமிக்கடியில் தானியம் தவசம் போட்டு வைக்கிற நிலவறை இருக்கல்லவா? அதற்குள்ளே என்னை விட்டு மூடி வைத்துவிடு நான் அதற்குள்ளே பத்திரமாக இருந்துகொள்கிறேன் யாரும் கண்டு பிடிக்கமுடியாது''
பேரனும் அப்படியே செய்தான்.
ஊரில் ஒரு திருவிழா. மன்னர் ஒரு பந்தயம் வைத்தார். ஒரு பனை மரத்தில் நடுவில் நான்கு அடி நீளம் வெட்டிக்கொண்டு வந்து வைத்தார். ''இதில் அடிமரம் எது மேல்மரம் எது?ன்னு கண்டுபிடிக்கிறவங்களுக்கு ஆயிரம் வராகன் பரிசு'' அப்படின்னார்.
போட்டியில் நிறைய பேர் திணறினார்கள். பேரன் வீட்டுக்குப் போய் தாத்தாவிடம் போட்டியைப் பற்றி கூறினான் அவர் சொன்னார்: ''ஐந்து அடி நீளம் ஐந்து அடி ஆழத்தில் ஒரு தண்ணீர் தொட்டி கட்டி அதில் நிறைய தண்ணீர் விடச் சொல்லி தண்ணீருக்குள் பனைமரத்துண்டை தூக்கிப் போடச் சொல். அடிமரம் தண்ணீருக்கு அடியில் போயிடும்; மேல்மரம் மேலே தெரியும்''
பையன் மன்னரிடம் சென்று அப்படியே செய்துகாட்டினான். மன்னர் ஆச்சர்யப்பட்டு ஆயிரம் வராகன் பரிசு கொடுத்தார்.
அடுத்து ஒரு பந்தயம். ''ஆளே இல்லாமல் தானாக வாசிக்கிற ஒரு மிருதங்கம் காட்டமுடியுமா'' என்று மன்னர் கேட்டார். பையன் தாத்தாவிடம் வந்து யோசனை கேட்டான். அவர் சொன்னார்: ''மிருதங்கத்தின் ஒருபக்க தோலைப் பிரித்து எடுத்துவிட்டு உள்பக்கத்தில் ராணி தேனி ஒன்றை கூட்டுடன் கொண்டுவந்து வை. எல்லா தேனிகளும் பின்னாலேயே வந்து மிருதங்கத்திற்குள் புகுந்துவிடும். உடனே அந்த மிருதங்கத்தின் வாயைத் தோலை வைத்து மூடி ரெடி பண்ணிவிடு.''
அவர் கூறியது போல தேனிக்களை அடைத்த மிருதங்கத்தை பையன் தூக்கிச் சென்று மன்னரைப் பார்த்தான். ''மிருதங்கத்தில் சப்தம் வரவில்லையே'' என்று மன்னர் கேட்க, பையன் சின்னைக் கம்பியில் மிருதங்கத்தைக் கோர்த்து லேசாக தூக்கினான். உள்ளே இருந்த தேனீக்கள் அதிர்ச்சியில் உள்பக்கமாக தோலைக் கொட்ட ஆரம்பிக்க, ''ங்கொய்.. ங்கொய்''ன்னு சத்தம் வந்தது. எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். மன்னர் மகிழ்ச்சி அடைந்து இன்னொரு ஆயிரம் வராகன் பரிசு கொடுத்தார். ஆனாலும் அவருக்கு ஒரு சந்தேகம். ''ஏம்பா.. உனக்கு 16 வயது கூட இருக்காது. உண்மையைக் கூறு. இதெல்லாம் நீயே கண்டுபிடித்தாயா? அல்லது யாராவது சொல்லிக் கொடுத்தாங்களா?''
''மன்னா.. என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் உத்தரவை மீறி நான் ஒரு காரியம் பண்ணிட்டேன். என் தாத்தாவை நான் கொல்லவில்லை. அவரை என் வீட்டில் மறைத்து வைத்துள்ளேன். அவர்தான் இந்த யோசனைகளைக் கூறினார்''.
மன்னர் புரிந்துகொண்டார். அடடா.. பெரியவங்க கிட்ட எவ்வளவு அனுபவமெல்லாம் இருக்கு? அவங்க தங்கம் வைரத்தை விட உயர்ந்தவர்கள். ''இனிமேல் யாரும் பெரியவங்களைக் கொல்லவேண்டாம். யார் வீட்டில் பெரியவங்க இருந்தாலும் அவர்களைக் கடைசி வரையிலும் பராமரிக்கிற செலவை அரசாங்கமே எடுத்துக்கொள்ளும்'' என்று மன்னர் அறிவித்தார்.
 ஒரு மன்னர் தன் தந்தை அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தை தரிசிப்பதற்காக புறப்பட்டார். மக்களும் ஆசைப்பட்டு கிளம்பினார்கள். மன்னா தங்கள் தந்தை இந்த நாட்டுக்கு சேவைகள் பல செய்தவர். எங்கள் நெஞ்சை விட்டு நீங்காதவர். அதனால் அவர்களின் மண்ணறையை  தரிசிக்க நாங்களும் வருகிறோம்.'' மன்னர் சம்மதித்தார். ''ஆனால் ஒரு நபந்தனை. பயணத்தின் பாதை பாலைவனம். நெடுந்தூரம் செல்லவேண்டியுள்ளது. ஆகவே வயதானவர்கள் யாரும் வரக்கூடாது.''
மன்னருடன் இளைஞர்கள் பயணத்திற்கு ஆயத்தமானார்கள். பயணத்தின் இடையில் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு தாகத்தால் அவதிப்பட்டார்கள். எங்கு தண்ணீர் கிடைக்கும் என்று தெரியவில்லை. இந்நிலையில் ஒரு வாலிபன் இதோ இந்த திசையில் சிறிது தூரம் சென்றால் தண்ணீர் கிடைக்கும் என்றான் அந்த திசையில் சென்று பார்த்தபொழுது உண்மையாகவே தண்ணீர் கிடைத்தது. எல்லோரும் குடித்து தாகம் தணித்துக்கொண்டர்கள். மன்னன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். எங்களில் யாருக்கும் தெரியாத இந்த விஷயம் உனக்கு மட்டும் எப்படி தெரிந்தது?''என்றான். '' மன்னா.. நீங்கள் என்னை மன்னிப்பதாக இருந்தால் ஒரு உண்மையைக் கூறுகிறேன். ''
''கண்டிப்பாக உன்னை மன்னிக்கிறேன். காரணம் நீ எங்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளாய். சொல் அந்த உண்மையை.!''
''நாம் பயணம் புறப்பட்டபொழுது என்  வயதான தந்தையும் கிளம்பினார். வயதானவர்கள் வரக்கூடாது என்ற உங்கள் உத்தரவை எடுத்துக் கூறினேன். அதற்கு அவர், ‘’இல்லை. எனக்கு அங்கே வர மிகுந்த ஆர்வம் உள்ளது. நீ ஒரு உபாயம் செய். என்னை ஒரு முடிச்சுக்குள் வைத்து மறைத்து எடுத்துச் செல்''.
நான் அப்படியே அவரை எடுத்து வந்தேன். தண்ணீரின்றி நாம் அவதிப்படுகிறோம் என்று கேள்விப்பட்டு அவர் மெல்ல முடிச்சை விட்டு வெளியே எட்டிப் பர்த்தார். ஒரு வகைப் பறவைகள் இந்த திசையிலிருந்து பறந்து செல்வதைக் கண்டு ''மகனே இந்த பறவைகள் நீர்நிலைகள் இருக்கும் இடத்தில்தான் வாழும். எனவே இந்த திசையில் தண்ணீர் நிச்சயம் இருக்கும்'' என்றார் அதைத்தான் நான் உங்களிடம் கூறினேன்'' என்றான். மன்னரும் மக்களும் புரிந்துகொண்டனர். மூத்தோரின் ஆலோசனை அவசியம்.



நான் ஒரு பெரியவரிடம் கேட்டேன்: உங்களுக்கு மொத்தம் எத்தனை பிள்ளைகள்? அவர் சொன்னார்: ''எனக்கு 3 son.''
''அதுல உங்களுக்கு சோறு போடுறது எந்த சன்?'' அவர் சொன்னார்: ''பென்சன்''!
இன்னைக்கு பெத்த பிள்ளைங்க சோறு போடுறது இருக்கட்டும்.  பெற்றோர்களிடம் காசு இருந்தாத்தான் பெத்த பிள்ளைகளே மதிக்கிறாங்க.
அழகாய் ஒரு கவிஞன் கூறினான்: 
பானையிலே சோறு இருந்தா பூனைகளும் சொந்தமடா! பெட்டியிலே பணம் இல்லை.. பெத்த பிள்ளை சொந்தமில்லை.
ஒரு பையன் தந்தையிடம் சொன்னானாம்: 

''வாப்பா.. உன்னை என் கல்யாணத்துக்கு கூப்பிடமாட்டேன்''
''ஏண்டா கண்ணா?''
பின்னே... உன் கல்யாணத்துக்கு என்னை கூப்பிட்டியா?''

நபி (சல்) கூறினார்கள்: 'யாருக்கு பெற்றோர்களில் இருவருமோ அல்லது ஒருவரோ இருந்து (அவர்களுக்கு பணிவிடை செய்வதின் மூலம்) அவன் சொர்க்கம் நுழையவில்லையோ அவன் நாசமடையட்டும்'.
அல்லாஹ் நம் அனைவரையும் நரகை விட்டும் பாதுகாத்து சுவனத்தில் சுகமாக வாழவைப்பானாக!  

சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே! அல்லது கீழ்காணும் தளங்களில் பகிர்ந்து விட்டுச் செல்லலாமே!