27 மார்ச், 2012

திருத்தப்பட வேண்டிய திருமணச் சடங்குகள்- நாடகம்3


                                        காட்சி-5

            (தரகரும், சலீமும் )


என்ன சலீம் பாய். நல்லா இருந்த நீங்க ரொம்ப டல்லா ஆயிட்டீங்களே என்ன விஷயம்?

அத ஏம்பா கேக்குறே. இந்த பொம்பளப் புள்ளகளைப் பெத்துட்டு வயித்துல நெருப்பக் கட்டிக்கிட்டு வாழவேண்டியதாயிருக்கு. அதுகள ஒரு நல்ல இடத்துல கட்டிக்கொடுக்கிறவரை நிம்மதியே இல்லப்பா.

ப்பூ.. இவ்வளவுதானா விஷயம். கவலையை விடுங்க; கண்ணீரைத் தொடைங்க. ஒங்க பொண்ணுக்கு பொருத்தமான எடத்த நான் காட்டுறேன். ஆனா என்ன கொஞ்சம் செலவாகும்.

எவ்வளவு செலவாகும்?

சும்மா ஒரு 2 லட்சமும் 20 பவுனும்

என்னது.. 2 லட்சமும் 20 பவுனா?

இப்படி வாயைப் பொளந்தா எப்படி கொமர கரையேத்துறது? நீங்க ஒன்னும் கவலப்படாதீங்க. நம்ம துரை இருக்கிறாரே. எவ்வளவு கேட்டாலும் தருவாரு. அவர்கிட்ட வட்டிக்கு வாங்கி காரியத்த கச்சிதமா முடிச்சிரலாம்.

என்னது.. வட்டிக்கு வாங்கியா? அவன்கிட்ட வட்டிக்கு வாங்குறதும் ஒன்னுதான்; என் குமரை வெட்டிப் பொதைக்குறதும் ஒன்னுதான். அவன்கிட்ட வட்டிக்கு வாங்கி என் காரியத்த நான் முடிச்சிருவேன்..நாளைக்கு அவன் வந்து ஊரைக் கிழிக்கவா? அதனால அந்த பேச்சே வேணாம்.

சரி அப்படின்னா பணத்துக்கு என்ன பண்ணப் போறீங்க?

ஏதோ தோது பண்ணுறேன்.. நீங்க ஆகவேண்டிய வேலையப் பாருங்க''

தரகர் செல்கிறார்.

(சலீம் பாய் தனக்குள்):
''பணத்துக்கு என்ன செய்யலாம்.. ஆங்.. ஜமாத்துல போய் உதவி கேட்டுப் பார்ப்போம்''


 (சலீம் பாய் ஜமாத் நிர்வாகியைச் சந்தித்து...):

அஸ் ஸலாமு அலைக்கும்.

வ அலைக்குமுஸ் ஸலாம் வாங்க சலீம் பாய் என்ன விஷயம்?

ஒன்னுமில்ல.. ஒரு சின்ன உதவி

என்ன சம்பளத்த கூட்டணுமா?

அதெல்லாம் ஒன்னுமில்ல. எம் மகள் ஆயிஷாவுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்திருக்கேன். அடுத்த வாரம் கல்யாணம். எல்லாம் சேர்த்து ஒரு 7 லட்சம் செலவாகும். ஜமாத்திலிருந்து ஏதாவது உதவி செய்வீங்கன்னு வந்தேன்

சலீம் பாய்.. ஜமாத்திலிருந்து பெரிய உதவியெல்லாம் செய்ய முடியாது. வேணுமின்னா லட்டர் தாறோம். மக்கள்ட்ட கேட்டுப் பாருங்க; அப்படியே பக்கத்து ஊரு ஜும்ஆ வசூலையும் பாருங்க. இந்தாங்க லட்டர்.

லட்டரை கையில் வாங்கிக் கொண்டு கவலையுடன் சலீம் பாய்):
''ச்சே.. என்ன இது யாருட்டயும் கையேந்தாம எவ்வளவு கவுரமா வாழ்ந்துக்கிட்டு இருந்தேன். இந்த சமுதாயம் என்னை பிச்சை எடுக்க வச்சிருச்சே. சரி என்ன செய்வது. குமருகளைப் பெத்தாச்சு. எல்லாம் பட்டுத்தான் ஆகனும்''

(மக்களை நோக்கி சலீம் பாய் ):
''மக்களே! நான் ஒரு நவ் முஸ்லிம். இரண்டு குமர்களை வச்சிக்கிட்டு சிரமப் படுகின்றேன். உங்களின் உதவியை நாடி வந்திருக்கின்றேன். அல்லாஹ்வுக்காக தாராளமாக உதவி செய்யுங்கள்''

கூட்டத்திலிருந்து ஒரு குரல்:
''ஆமாடா. கிளம்பி வந்துட்டாங்கே. இவனுகளுக்கு இதே பொழப்பாப் போச்சு. வாரம் வாரம் வந்துர்றாங்கே. இதுக்குத்தான் பள்ளிக்கு வரவே பயமா இருக்கு வந்தா பாக்கெட்டுல இருக்குற பத்து ரூபாயையும் அப்பிக்கிட்டு வுட்டுர்றாங்கெ
யா அல்லாஹ் என்ன இது? குமரையும்கொடுத்துட்டு கேவலத்தையும் கொடுக்குறீயே.. இது நியாயமா? மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்னு சொல்லுவாங்களே.. இங்கே தண்ணீரைக் காணோமே. கண்ணீருதானே வருது?
(சலீம் பாய்  தாங்கமுடியாத சோகத்துடன் பாடல்  படித்துக் கொண்டே நடக்கிறார்:

யா அல்லாஹு.. அருட்கொடையாளனே..
துன்பங்கள் போக்கும் பேருபகாரனே
எங்கள் திருமணத்தின் துன்பச் சுமை தீராதா -அதனால் 
விளைந்த கொடுமைகளோ மாறாதா.. யா அல்லாஹ்!


பள்ளிவாசல் தோறும் தொடரும் குமருக்கான பிச்சைகள்
தன்மானம் இழந்தழுகும் பெண்ணைப் பெற்ற நெஞ்சங்கள்
திருமண சந்தையிலே மாப்பிள்ளைக்குப் பேரங்கள் 
கருவே கல்லறையாய் பெண்குழந்தை சிசுவுகள்
புதிதாய் மார்க்கம் வந்த புது முஸ்லிம் குடும்பங்கள் 
திருமணச் சுமையாலே மதம் மாறும் அவலங்கள் 
கருணை தயாளனே இது என்ன கொடுமைகள்
பரக்கத்தை தடை செய்யும் முசீபத்தின் அவலங்கள்


                                                     (எங்கள் திருமணத்தின்)


கஞ்சனும் காசை அள்ளி வீச வைக்கும் கல்யாணம்
வட்டிக் கடன் பட்டு சொத்தை விற்க வைக்கும் கல்யாணம் 
சமூகத்தின் பொருள்வளத்தை நாசமாக்கும் கல்யாணம்
தீமைக்கு தீமையாகி விளைந்து நிற்கும் கல்யாணம் 
வீண்விரைய செலவில் இறை சாபம் தேடும் கல்யாணம்
கவுரவம் தற்பெருமை காட்ட நடக்கும் கல்யாணம் 
என்றுதான் தீருமோ இந்தபெரும் அலங்கோலம் 
என்றுதான் தீருமோ இந்தபெரும் அலங்கோலம் 


                                                    (எங்கள் திருமணத்தின்)


சொர்க்கத்து பந்தமாகும் திருமணத்தின் உறவுக்கு
நரகத்து வேதனையாய் சுட்டெரிக்கும் செலவுகள்
மருந்துண்ண வைக்குகின்ற விருந்து முறைகேடுகள்
கைக்கூலிக்கு கமிஷன் வாங்கும் கல்யாணத்து தரகர்கள்
எளிமைத் திருமணங்கள் 'மஹர்' கொடுத்து நடக்கணும்
இது ஒரு வணக்கம் என்ற உண்மைதனை உணரணும் 
வேதனைத் தீயில் வாடும் பெண்ணினத்தைக் காக்கணும் மார்க்கமும் மனசாட்சியும் இனியாவது ஜெயிக்கணும்
                                                    (எங்கள் திருமணத்தின்)

காட்சி-6

சலீமின் சகோதரி மகன் கோபால் சலீமை நையாண்டி செய்கிறான்:)

மாமா. என்ன மாமா புலம்பிக்கிட்டு இருக்கீங்க. இப்ப பொலம்பி என்ன செய்ய? இதெல்லாம் மதம் மாறுவதற்கு முன்னாடியே யோசிச்சிருக்கணும். அந்த சமுதாயத்துலதான் வரதட்சணைக் கொடுமை அதிகமா இருக்குன்னு தெரியாதா? இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. நீங்க 'உம்' என்று ஒரு வார்த்தை சொல்லுங்க. ஆயிஷாவுக்கு நான் வாழ்க்கை கொடுக்கிறேன். மாமா என்னதான் இருந்தாலும் நான் உங்க முறைமாப்பிள்ளை இல்லையா. அந்த உரிமையிலதான் கேட்கிறேன். ஆயிஷாவை எங்கிட்ட விட்டுருங்க.அஞ்சு பைசா கூட வேணாம். என்ன சொல்றீங்க?

''டே கோபாலு. வார்த்தயை அடக்கிப் பேசு. எங்கிட்ட சன்மானம் இல்லாம இருக்கலாம்; ஆனா தன்மானம் நிறைய இருக்கு. எங்கிட்ட வசதி இல்லாம இருக்கலாம்; ஆனா உறுதியான ஈமான் இருக்கு. இன்னொரு தடவை இப்படி வந்து கேட்டே.. சொந்தக்காரன்னு கூட பார்க்கமாட்டேன்; வெட்டிப் பொதச்சிருவேன்.

''அட போய்யா.. நல்லதுக்கு காலமில்லே''

கோபால் ஓடிவிடுகிறான்.

''யா அல்லாஹ். என்ன ஒரு சோதனை? என் ஈமானுக்கே ஆபத்தா? இதுக்கு வேற வழியே இல்லையா?''

                     நாடகம் பகுதி-4 ஐ படிக்க இங்கே அழுத்தவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...