27 மார்ச், 2012

திருத்தப்பட வேண்டிய திருமணச் சடங்குகள்- நாடகம்3


                                        காட்சி-5

            (தரகரும், சலீமும் )


என்ன சலீம் பாய். நல்லா இருந்த நீங்க ரொம்ப டல்லா ஆயிட்டீங்களே என்ன விஷயம்?

அத ஏம்பா கேக்குறே. இந்த பொம்பளப் புள்ளகளைப் பெத்துட்டு வயித்துல நெருப்பக் கட்டிக்கிட்டு வாழவேண்டியதாயிருக்கு. அதுகள ஒரு நல்ல இடத்துல கட்டிக்கொடுக்கிறவரை நிம்மதியே இல்லப்பா.

ப்பூ.. இவ்வளவுதானா விஷயம். கவலையை விடுங்க; கண்ணீரைத் தொடைங்க. ஒங்க பொண்ணுக்கு பொருத்தமான எடத்த நான் காட்டுறேன். ஆனா என்ன கொஞ்சம் செலவாகும்.

எவ்வளவு செலவாகும்?

சும்மா ஒரு 2 லட்சமும் 20 பவுனும்

என்னது.. 2 லட்சமும் 20 பவுனா?

இப்படி வாயைப் பொளந்தா எப்படி கொமர கரையேத்துறது? நீங்க ஒன்னும் கவலப்படாதீங்க. நம்ம துரை இருக்கிறாரே. எவ்வளவு கேட்டாலும் தருவாரு. அவர்கிட்ட வட்டிக்கு வாங்கி காரியத்த கச்சிதமா முடிச்சிரலாம்.

என்னது.. வட்டிக்கு வாங்கியா? அவன்கிட்ட வட்டிக்கு வாங்குறதும் ஒன்னுதான்; என் குமரை வெட்டிப் பொதைக்குறதும் ஒன்னுதான். அவன்கிட்ட வட்டிக்கு வாங்கி என் காரியத்த நான் முடிச்சிருவேன்..நாளைக்கு அவன் வந்து ஊரைக் கிழிக்கவா? அதனால அந்த பேச்சே வேணாம்.

சரி அப்படின்னா பணத்துக்கு என்ன பண்ணப் போறீங்க?

ஏதோ தோது பண்ணுறேன்.. நீங்க ஆகவேண்டிய வேலையப் பாருங்க''

தரகர் செல்கிறார்.

(சலீம் பாய் தனக்குள்):
''பணத்துக்கு என்ன செய்யலாம்.. ஆங்.. ஜமாத்துல போய் உதவி கேட்டுப் பார்ப்போம்''


 (சலீம் பாய் ஜமாத் நிர்வாகியைச் சந்தித்து...):

அஸ் ஸலாமு அலைக்கும்.

வ அலைக்குமுஸ் ஸலாம் வாங்க சலீம் பாய் என்ன விஷயம்?

ஒன்னுமில்ல.. ஒரு சின்ன உதவி

என்ன சம்பளத்த கூட்டணுமா?

அதெல்லாம் ஒன்னுமில்ல. எம் மகள் ஆயிஷாவுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்திருக்கேன். அடுத்த வாரம் கல்யாணம். எல்லாம் சேர்த்து ஒரு 7 லட்சம் செலவாகும். ஜமாத்திலிருந்து ஏதாவது உதவி செய்வீங்கன்னு வந்தேன்

சலீம் பாய்.. ஜமாத்திலிருந்து பெரிய உதவியெல்லாம் செய்ய முடியாது. வேணுமின்னா லட்டர் தாறோம். மக்கள்ட்ட கேட்டுப் பாருங்க; அப்படியே பக்கத்து ஊரு ஜும்ஆ வசூலையும் பாருங்க. இந்தாங்க லட்டர்.

லட்டரை கையில் வாங்கிக் கொண்டு கவலையுடன் சலீம் பாய்):
''ச்சே.. என்ன இது யாருட்டயும் கையேந்தாம எவ்வளவு கவுரமா வாழ்ந்துக்கிட்டு இருந்தேன். இந்த சமுதாயம் என்னை பிச்சை எடுக்க வச்சிருச்சே. சரி என்ன செய்வது. குமருகளைப் பெத்தாச்சு. எல்லாம் பட்டுத்தான் ஆகனும்''

(மக்களை நோக்கி சலீம் பாய் ):
''மக்களே! நான் ஒரு நவ் முஸ்லிம். இரண்டு குமர்களை வச்சிக்கிட்டு சிரமப் படுகின்றேன். உங்களின் உதவியை நாடி வந்திருக்கின்றேன். அல்லாஹ்வுக்காக தாராளமாக உதவி செய்யுங்கள்''

கூட்டத்திலிருந்து ஒரு குரல்:
''ஆமாடா. கிளம்பி வந்துட்டாங்கே. இவனுகளுக்கு இதே பொழப்பாப் போச்சு. வாரம் வாரம் வந்துர்றாங்கே. இதுக்குத்தான் பள்ளிக்கு வரவே பயமா இருக்கு வந்தா பாக்கெட்டுல இருக்குற பத்து ரூபாயையும் அப்பிக்கிட்டு வுட்டுர்றாங்கெ
யா அல்லாஹ் என்ன இது? குமரையும்கொடுத்துட்டு கேவலத்தையும் கொடுக்குறீயே.. இது நியாயமா? மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்னு சொல்லுவாங்களே.. இங்கே தண்ணீரைக் காணோமே. கண்ணீருதானே வருது?
(சலீம் பாய்  தாங்கமுடியாத சோகத்துடன் பாடல்  படித்துக் கொண்டே நடக்கிறார்:

யா அல்லாஹு.. அருட்கொடையாளனே..
துன்பங்கள் போக்கும் பேருபகாரனே
எங்கள் திருமணத்தின் துன்பச் சுமை தீராதா -அதனால் 
விளைந்த கொடுமைகளோ மாறாதா.. யா அல்லாஹ்!


பள்ளிவாசல் தோறும் தொடரும் குமருக்கான பிச்சைகள்
தன்மானம் இழந்தழுகும் பெண்ணைப் பெற்ற நெஞ்சங்கள்
திருமண சந்தையிலே மாப்பிள்ளைக்குப் பேரங்கள் 
கருவே கல்லறையாய் பெண்குழந்தை சிசுவுகள்
புதிதாய் மார்க்கம் வந்த புது முஸ்லிம் குடும்பங்கள் 
திருமணச் சுமையாலே மதம் மாறும் அவலங்கள் 
கருணை தயாளனே இது என்ன கொடுமைகள்
பரக்கத்தை தடை செய்யும் முசீபத்தின் அவலங்கள்


                                                     (எங்கள் திருமணத்தின்)


கஞ்சனும் காசை அள்ளி வீச வைக்கும் கல்யாணம்
வட்டிக் கடன் பட்டு சொத்தை விற்க வைக்கும் கல்யாணம் 
சமூகத்தின் பொருள்வளத்தை நாசமாக்கும் கல்யாணம்
தீமைக்கு தீமையாகி விளைந்து நிற்கும் கல்யாணம் 
வீண்விரைய செலவில் இறை சாபம் தேடும் கல்யாணம்
கவுரவம் தற்பெருமை காட்ட நடக்கும் கல்யாணம் 
என்றுதான் தீருமோ இந்தபெரும் அலங்கோலம் 
என்றுதான் தீருமோ இந்தபெரும் அலங்கோலம் 


                                                    (எங்கள் திருமணத்தின்)


சொர்க்கத்து பந்தமாகும் திருமணத்தின் உறவுக்கு
நரகத்து வேதனையாய் சுட்டெரிக்கும் செலவுகள்
மருந்துண்ண வைக்குகின்ற விருந்து முறைகேடுகள்
கைக்கூலிக்கு கமிஷன் வாங்கும் கல்யாணத்து தரகர்கள்
எளிமைத் திருமணங்கள் 'மஹர்' கொடுத்து நடக்கணும்
இது ஒரு வணக்கம் என்ற உண்மைதனை உணரணும் 
வேதனைத் தீயில் வாடும் பெண்ணினத்தைக் காக்கணும் மார்க்கமும் மனசாட்சியும் இனியாவது ஜெயிக்கணும்
                                                    (எங்கள் திருமணத்தின்)

காட்சி-6

சலீமின் சகோதரி மகன் கோபால் சலீமை நையாண்டி செய்கிறான்:)

மாமா. என்ன மாமா புலம்பிக்கிட்டு இருக்கீங்க. இப்ப பொலம்பி என்ன செய்ய? இதெல்லாம் மதம் மாறுவதற்கு முன்னாடியே யோசிச்சிருக்கணும். அந்த சமுதாயத்துலதான் வரதட்சணைக் கொடுமை அதிகமா இருக்குன்னு தெரியாதா? இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. நீங்க 'உம்' என்று ஒரு வார்த்தை சொல்லுங்க. ஆயிஷாவுக்கு நான் வாழ்க்கை கொடுக்கிறேன். மாமா என்னதான் இருந்தாலும் நான் உங்க முறைமாப்பிள்ளை இல்லையா. அந்த உரிமையிலதான் கேட்கிறேன். ஆயிஷாவை எங்கிட்ட விட்டுருங்க.அஞ்சு பைசா கூட வேணாம். என்ன சொல்றீங்க?

''டே கோபாலு. வார்த்தயை அடக்கிப் பேசு. எங்கிட்ட சன்மானம் இல்லாம இருக்கலாம்; ஆனா தன்மானம் நிறைய இருக்கு. எங்கிட்ட வசதி இல்லாம இருக்கலாம்; ஆனா உறுதியான ஈமான் இருக்கு. இன்னொரு தடவை இப்படி வந்து கேட்டே.. சொந்தக்காரன்னு கூட பார்க்கமாட்டேன்; வெட்டிப் பொதச்சிருவேன்.

''அட போய்யா.. நல்லதுக்கு காலமில்லே''

கோபால் ஓடிவிடுகிறான்.

''யா அல்லாஹ். என்ன ஒரு சோதனை? என் ஈமானுக்கே ஆபத்தா? இதுக்கு வேற வழியே இல்லையா?''

                     நாடகம் பகுதி-4 ஐ படிக்க இங்கே அழுத்தவும்

திருத்தப்பட வேண்டிய திருமணச் சடங்குகள்- நாடகம்2

 நாடகம் பகுதி-1 ஐ படிக்க இங்கே அழுத்தவும்                                      

    காட்சி-3             


(கரீம், சலீம், ஜமாஅத் தலைவர் மற்றும் நிர்வாகி)


கரீம்:
''அஸ் ஸலாமு அலைக்கும் தலைவரே

வ அலைக்குமுஸ் ஸலாம்; வாங்க கரீம் பாய். இது யாரு புதுசா இருக்கு?

நம்ம சரவனன்தான் கலிமா சொல்லிட்டாரு.

யாரு.... நம்ம சரவணனா? சுப்ஹானல்லாஹ்! முகத்துல என்ன ஒரு தெளிவு.. என்ன ஒரு பொழிவு? சரி என்ன விஷயமா வந்தீக?

ஒன்னுமில்ல.. இவருக்கு ஹிதாயத் கிடைச்சிருச்சு. அதுபோல ஒரு வேலையும் கிடைச்சிருச்சுன்னா சந்தோஷமா இருப்பாரு; பாவம் கஷ்டப் படுராரு.
 தலைவர்:
கரீம் பாய்.. கஷ்டப்படுறவங்களுக்கும் கடன்படுறவங்களுக்கும் உதவி செய்யத்தானே நம்ம பைத்துல்மால் வச்சிருக்கோம் நம் ஊரில் இருக்கும் செல்வந்தர்களெல்லாம் வருடத்திற்கு ஒரு முறை அவர்களுடைய ஜகாத் பணத்தையெல்லாம் கணக்கிட்டு நம்ம பைத்துல்மாலில் கொண்டுவந்து கொடுத்துடுவாங்க. நாம அதை என்ன செய்கிறோம்? இந்த மாதிரி புதுசா முஸ்லிமானவங்க, கஷ்டப்படுறவங்க, கடன் தொல்லையால் அவதிப்படுறவங்க, பெண்குமர்களை வச்சிக்கிட்டு பேந்த பேந்த முழிக்கிறவங்க, பிள்ளைகளைப் படிக்க வைக்க பணம் இல்லாதவங்க இவங்களைத் தேடிப்போயி உதவி செய்கிறோம். அதனால கண்டிப்பா உங்களுக்கு உதவி செய்வோம்.
 நிர்வாகி:
ஆமாம். உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?
 சலீம்:
2 பரக்கத்து 2 ஹரக்கத்து.

''அப்படின்னா?''

''2 பொம்பளப் புள்ள 2 ஆம்பளப் புள்ள.''

''ஆஹா..  பொம்பளப் புள்ளயை பரக்கத்துன்னு சொன்னீங்க பார்த்தீங்களா? வெரிகுட். அல்லாஹ் உங்கள கைவிடமாட்டான். உங்க 2 பொம்பளப் புள்ளகளையும் நம்ம நிஸ்வான் மதரசாவுல சேர்த்துடுங்க; ஹிதாயத்துன்- நிஸ்வான்.. நிச்சயமா ஹிதாயத் கிடைக்கும். 2 ஆம்பளப் புள்ளைகளுக்கும் சுன்னத் வைக்கனுமில்லையா? கவலைப் படாதீங்க. நம்ம ஊருல வாலிபர்கள் சிலர் ஏழைகளுக்கு இலவசமாக சுன்னத் வைக்கிறாங்க. அது மட்டுமில்ல.. நம்ம வாலிபர் சங்கம் பெரு நாள் அன்னக்கி அரிசிகளையும் ஆடைகளையும் உங்க வீட்டுக்கு வந்தே கொடுத்திடுவாங்க. உங்களை ஆதரிக்க இத்தனை கைகள் இருக்கும்போது நீங்க ஏன் கவலைப் படவேண்டும்? உங்க நிரந்தர வேலைக்காக ஒரு ஏற்பாடு செய்கிறோம். இன்ஷா அல்லாஹ் இன்னையிலிருந்து நீங்கதான் நம்ம பள்ளியில முஅத்தின். சம்பளம் 5000. சம்மதமா?
 சலீம்:
ரொம்ப நன்றி தலைவரே.. ஜஸாக்கல்லாஹ்.

                   (திரை மூடித் திறக்கிறது)
                                                        காட்சி- 4           
                                       
(சில வருடங்களுக்கு பிறகு. கரீமும்  சலீமும் சந்தித்துக் கொள்கின்றனர்

வாங்க சலீம் பாய். என்ன இந்த பக்கம்?

ஒன்னுமில்ல.. எம் மூத்த மக ஆயிஷா ஆலிமா பட்டம் வாங்கிருச்சு; ஆளாகி 5 வருஷமாச்சு; அதை ஒரு நல்ல இடத்துல கட்டிக்கொடுக்கணுமில்லையா?

ஆமா கண்டிப்பா செய்யணும். வாங்க உட்கார்ந்து பேசுவோம். அம்மா பாத்திமா.. நம்ம சலீம் பாய் வந்திருக்காக. சூடா ரெண்டு காப்பி கொண்டு வாம்மா. ம்.. நீங்க சொல்லுங்க

அதான் கரீம் பாய்.. நான் என்ன சொல்றேன்னா.. நம்ம ஆயிஷா அழகுலயும் கொறச்சலில்ல; அறிவுலயும் கொறச்சலில்ல; ஒழுக்கம்னா ஒழுக்கம் அப்படி ஒரு ஒழுக்கம். அதனால?

அதனால?!

அதனால உங்க மகனுக்கே ஆயிஷாவை நிச்சயம் பண்ணிரலாம்னு இருக்கேன். நீங்க சரின்னு சொன்னா..

என்னது.. எம் மகனுக்கு உம் மகளா? என் வீட்டுல நீ சம்பந்தம் பண்ணுறதா? முதல்ல எடத்த காலி பண்ணு

நான் என்ன சொல்றேன்னா...

நீ ஒன்னும் சொல்லவேணாம்; இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேட்குதா? கெட் அவுட்.

என்ன கரீம் பாய் இப்படி ஆத்திரப் படுறீங்க? கலிமா சொல்லிட்டா எல்லாருமே சமம்னு நீங்க சொல்லலையா?
பாகுபாடு பார்க்கக்கூடாதுன்னு பல தடவை உங்க வாயாலேயே சொல்லலையா?

சொன்னேன்; அதுக்காக சம்பந்தம் பண்ணமுடியுமா? எம் பொண்டாட்டி செருப்பாலேயே அடிப்பா.

அப்படியா பாகுபாடு பார்த்தா அல்லாஹ் நெருப்பாலேயே அடிப்பானே. அப்ப என்ன செய்வீங்க?

''யோவ் ரொம்ப பேசாதே. முதல்ல எடத்த காலி பண்ணுய்யா.. சம்பந்தமாம் சம்பந்தம்.. யாருக்கிட்ட யாரு சம்பந்தம் பண்ணுறது.''

(வெளியேறுகிறார். கவலையுடன் நடக்கிறார்.)

'ச்சே.. கரீம் பாய் இப்படி பேசிட்டாரே. என்ன பண்ணுறது? ம்.. வேற ஏதாவது விசாரிச்சுப் பார்ப்போம். ஒரு நல்ல இடம் கிடைக்காமலா போயிடும்?'
பாடல் ஒலிக்கிறது:
'' ஒரு கதவை மூடிவிட்டால் பல வழியைத் திறந்து வைப்பான்; உண்மை பேசும் மானிடர்க்கே உறுதுணையாய் அவன் இருப்பான்''
  பாடல் மனதுக்கு ஆறுதலாய் இருந்தது.



திருத்தப்படவேண்டிய திருமணச் சடங்குகள்-நாடகம்1



''அய்யா தரகரே.. இங்கே வாங்க எம் பையன் பாஷாவுக்கு ஒரு நல்ல பொண்ணா பாருங்க!''

''அப்படியா உங்க பையன் என்ன செய்கிறார்?''

''என்னய்யா இப்புடபொசுக்குன்னு கேட்டுப்புட்டே. எம்பையன் ஒரு பெரிய  வி.ஐ.பி ய்யா!''

''வி.ஐ.பி.ன்னா?''

''V...I...P... வேலை இல்லா பட்டதாரி''
.
''அடத்தூ..வெட்டியா சுத்திக்கிட்டு இருக்கான்னு சொல்லுங்க''

''அட ஆமாய்யா. யோவ் தரகரே எம் பையனுக்கு நீ பாக்குற எடம் பெரிய எடமா இருக்கணும்''

''பெரிய எடம்னா நம்ம பள்ளிக் கூடத்துக்கு பக்கத்துல குப்பைக் கொட்டுற இடம் இருக்கே அது போதுமா?''

''யோவ் அதில்லைய்யா. பெரிய எடம்னா பசையுள்ள பார்ட்டி.''

''ஓ பசையுள்ள பார்ட்டியா?''

''அதேதான். இப்பவாவது புரிஞ்சிட்டியே போ.. போய் பார்த்துட்டு வா!''

(தரகர் தனக்குள் சொல்லிக் கொள்கிறார்):
'பசையுள்ள பார்ட்டிய எங்கே போய் தேடுறது..
ஆங். அந்தா இருக்கார் பசையுள்ள பார்ட்டி.'
 (பக்கத்தில் போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்தவனை இழுத்து வருகிறார்)

''யோவ் என்னைய்யா போஸ்டர் ஒட்டுறவன இழுத்துக்கிட்டு வாறே?''

''நீங்கதான் பாய் கேட்டீங்க.. பசையுள்ள பார்ட்டின்னு. அதான்!''

''அய்யோ உன்னோட பெரிய வம்பாப் போச்சுய்யா. போயி நல்லா பணக்கார இடமாப் பார்த்துட்டு வா, போ!''

''சரிங்க பாய்.''

சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து )
''பாய்.. ஒரு பெரிய இடம் சிக்கியிருக்கு. அந்த ஆளுக்கு 2 பொண்ணு. பெரிய பொண்ணு கொஞ்சம் கருப்பாத்தான் இருக்கும்.. ஆனா 2 லட்சம் தர்ராங்களாம். அடுத்த பொண்ணு அதைவிட கருப்பா இருக்கும். ஆனா 5 லட்சம் தர்ராங்களாம்.. நான் எதைப் பார்க்கட்டும்?''

''அப்படின்னா அதைவிட இன்னும் கருப்பா பாரு!''

''அடத்தூ.. நீயெல்லாம் ஒரு மனுஷனா?''

''சரி சரி. கோவிச்சுக்காதேய்யா. ரொம்ப வேணாம். ஒரு 2 லட்சம் 20 பவுன் சிம்பிளா ஒரு இடம் பாருய்யா.''

''இது ஒனக்கு சிம்பிளா? 2 லட்சம் 20 பவுன் என்பது உனக்கு சிம்பிளா?''

''யோவ்.மொறப்படிப் பார்த்தா நான் 10 லட்சம் கேட்கணும். ஏதோ போனாப் போகட்டும்னு 2லட்சம் கேக்குறேன்.''

''என்னது 10 லட்சமா? எப்படி?''

''ஆமாய்யா. எம் பையனை பெத்து வளத்து ஆளாக்கியிருக்கேன்ல..அதுக்கு ஒரு 7 லட்சத்த போடு. படிக்க வச்சு பட்டதாரி ஆக்கியிருக்கேன்ல.. அதுக்கு ஒரு 2 லட்சத்த போடு. நாளைக்கு அவனுக்கு கல்யாணம்னா விருந்து வைக்கனும், குரூப்புக்காரனுக்கு பார்ட்டி வைக்கனும்.. அதுக்கு ஒரு 1 லட்சத்த போடு. ஆக கொறஞ்சது 10 லட்சம் கேட்கணும். ஏதோ போனாப் போகட்டும்னு 2லட்சம் கேக்குறேன்.''

''ஏன்யா. இதெல்லாம் ஒரு பெத்த பிள்ளைக்கு தகப்பன் செய்யவேண்டிய கடமை. கடமைக்குப் போய் கணக்கு பாக்குறீயே, இது நியாயமா?''

''யோவ். நியாயம் அநியாயமெல்லாம் இருக்கட்டும், சொன்ன வேலையை செய்யா! கமிஷன் தர்றேன்.''

''கமிஷனா.. அப்ப ஓகே!''
                                     (திரை மூடித் திறக்கிறது)


                                       காட்சி-2 

சரவணன் உள்ளிட்ட மக்கள் கூட்டத்தில் கரீம் பாய் இஸ்லாமை எடுத்துச் சொல்கிறார் :

ஒன்றே குலம் என்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் மக்களே! நாம் அனைவரும் சகோதரர்கள். ஆதம் ஹவ்வா என்ற ஒரு தாயின் மக்கள் நமக்குள் குலத்தாலோ நிறத்தாலோ ஏற்ற தாழ்வுகள் இல்லை.
 நாம் அனைவரும் ஒரே இறைவனின் படைப்புகள். அந்த இறைவனுக்கு முன்னால் அரசன் ஆண்டி ஏழை பணக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் எல்லோரும் சமமே!
சரவணன் :
ஐய்யா. இந்த சமவுரிமைக்காகத்தானே நாங்க ஏங்குறோம். எங்கள ஒரு மனுஷனாவே மதிக்கமாட்டேங்குறாங்கய்யா. நாங்க தொட்டா தீட்டு; பட்டா தீட்டுங்குறாங்க. உயர்ஜாதி குடியிருக்கும் தெருவுல நாங்க நடக்கக்கூட உரிமை இல்லய்யா. நடந்தா கால வெட்டுறாங்க தட்டிக்கேட்டா கழுத்த வெட்டுறாங்க. இதுக்கெல்லாம் ஒரு முடிவே இல்லையாங்க?
கரீம் பாய் :
தம்பி..  நம்ம நாட்டுல எத்தனையோ நல்லவங்க வந்து நச்சுன்னு மண்டையிலே ஒரைக்கிற மாதிரி நல்லாத்தான் சொல்லிட்டுப் போனாங்க. சாதிகள் இல்லையடி பாப்பா அப்படின்னு பாரதியார் பளிச்சின்னு சொன்னார். தீண்டாமை ஒரு பாவச்செயல் அப்படின்னு நாட்டுத் தந்தை நல்லா சொன்னாரு. சொல்லி என்ன செய்ய? இன்னமும் இந்த நாட்டுல பல கிராமங்கள்ல தீண்டாமைக் கொடுமை தலைவிரிச்சுத்தானே ஆடுது? பல டீக்கடைகள்ல இரண்டு டம்ளர் முறை இன்னும் இருக்கத்தானேசெய்யுது? மேல்ஜாதிக்கு ஒன்னு கீழ் ஜாதிக்கு ஒன்னுன்னு.
சரவணன் :
ஏம் பாய்.. இதுக்கெல்லாம் ஒரு விடிவே இல்லையா?
கரீம் பாய் :
ஏன் இல்லை? பெரியார் முதல் பெரியார்தாசன் வரை சொன்ன ஒரே தீர்வு என்ன தெரியுமா? இன இழிவு ஒழிய இனிய மருந்து இஸ்லாம் ஒன்றுதான். எந்த சாதியா இருந்தாலும் கலிமா சொன்ன மறு நிமிடமே கண்ணியம் வந்துடும்; மரியாதை கூடிடும்; நீயும் மானமுள்ள ஒரு மனுஷனா தலை நிமிர்ந்து வாழலாம்
சரவணன் :
அப்படியா பாய்! அப்படின்னா இப்பவே சொல்றேன் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்.

கரீம் பாய் :
ரொம்ப சந்தோஷம்.. ரொம்ப சந்தோஷம்.!
சரவணன் :
கரீம் பாய்.. எனக்கு கிடைத்த இந்த ஹிதாயத் என் மனைவி மக்களுக்கும் கிடைக்கனும். அவங்களும் நரகத்தை விட்டும் விடுதலையாகனும்.
கரீம் பாய் :
நிச்சயமா. அல்லாஹ் உங்களுக்கு துணை இருப்பான்; போய் உங்க குடும்பத்துக்கும் கலிமா சொல்லிக் கொடுங்க.. போங்க.''

சரவணன் சலீமாக மாறிய சந்தோஷத்துடன் வீடு சென்றார்.

(அடுத்த நாள்....
சலீமும் கரீமும் மீண்டும் சந்திக்கின்றனர்)

''அஸ் ஸலாமு அலைக்கும் கரீம் பாய், எப்படி இருக்கீங்க?

வ அலைக்குமுஸ் ஸலாம் சலீம் பாய், அல்லாஹ்வுடைய கிருபையிலே நல்லா இருக்கேன். அது சரி எங்கே கிளம்பிட்டீங்க?

தொழுகத்தான்.. பள்ளிக்குப் போய்க்கிட்டு இருக்கேன். பாங்கு சொல்ல பத்து நிமிஷந்தானே இருக்கு? முன்கூட்டியே பள்ளிக்குப் போய் உளூ செய்துட்டு உட்காருவது நல்லதுதானே கரீம் பாய்?

அடடா சுப்ஹானல்லாஹ். பரம்பரை முஸ்லிம்கிட்டயே இந்த பழக்கம் இல்லையே? நேத்துத்தான் கலிமா சொன்னீங்க? இன்னிக்கே இவ்வளவு ஈமானா? மாஷா அல்லாஹ். சரி வாங்க நாம ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம்.

(பள்ளிக்குள் நுழைகின்றனர்)

''சரி பள்ளிக்குள் வந்தாச்சு.. வாங்க முன் சஃப்புக்கு போயிரலாம்''

''முன் சஃப்புகா? நானா?''

''ஏங்க சலீம் யோசிக்கிறீங்க? எப்ப கலிமா சொன்னீங்களோ அப்பவே உங்களுடைய பழைய அடையாளமெல்லாம் போயிருச்சு. இப்ப நீங்க ஒரு உயர்ந்த முஸ்லிம்; நீங்க விரும்பினா முதல் வரிசையில மட்டுமல்ல அதுக்கு மேலே இமாமாக கூட நிக்கலாம்''

''என்னது இமாமாவா?''

''ஆமாம் முறைப்படி ஓதிப் படிச்சிட்டு இப்பவே நீங்க இமாமா கூட இருந்து எங்களுக்கு வழிகாட்டலாம். நான் ஏற்கனவே சொல்லலையா? அல்லாஹ்வுக்கு முன்னாடி அரசனும் ஆண்டியும் சமம்னு.''

சலீம் தொழுதுவிட்டு இறைவனிடம் இறைஞ்சுகிறார்:

''யா அல்லாஹ்.. சாக்கடையை விட்டுட்டு சத்தியத்திற்கு வந்துட்டேன்; உனது உண்மையான மார்க்கத்தை ஒப்புக்கொண்டு விட்டேன்.எனது உறவினர் என்னை உதறிவிட்டனர்.எனது பங்காளிகள்கூட என்னைப் பகைத்துவிட்டனர். இப்பொழுது முழுமையாக உம்மேல தவக்குல் வச்சிருக்கேன். நீதான் கடைசி வரைக்கும் என்னைக் காப்பாத்தனும். ஆமீன்.''
கரீம் பாய் :
ஆமீன்; ஆமீன்; யாரப்பல் ஆலமீன். கவலைப் படாதீங்க சலீம் பாய். உங்களுக்கு உற்ற துணையா நாங்க இருக்கோம். கூடிய விரைவில் உங்களுக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்கிறேன்; வாங்க நம்ம தலைவரைப் போய் சந்திப்போம்.

ஆரம்ப கால புற்றுநோயை தடுக்க கேரட் மற்றும் உருளைகிழங்கு




அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட ஆய்வொன்றில் கேரட் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை ஆரம்ப நிலையில் காணப்படும் மார்பக புற்றுநோயை தடுக்க கூடியது என தெரிய வந்துள்ளது. இவற்றில் உள்ள வைட்டமின் 'ஏ' வழியே பெறப்படும் ரெட்டினாய்க் அமிலம் ஆனது செல்க ளின் வளர்ச்சி, புதுப்பொலிவு மற்றும் செல் பாதுகாப்பு ஆகியவற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி தோல் வனப்புடன் இருப்பதற்கும் உதவுகிறது. 

மனிதனின் உடலில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஜீன் ரெட்டினாய்க் அமிலத்தின் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை அதிகரிக்கும் பணியினை செய்கிறது. இதனால் ரெட்டினாய்க் அமிலம், ஆரம்ப நிலையில் காணப்படும் புற்றுநோய் வளர்ச்சியை முற்றிலும் தடுத்து நிறுத்துகிறது என அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. 


புற்றுநோய் வராமல் தடுப்பதில் கேரட் உருளைக்கிழங்கு முக்கியப் பங்காற்றுகிறது.

கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் எனும் நோய் எதிர்ப்பு சக்தியை கேரட் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தவிர வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டிற்கு உண்டு.


உதாரணமாக குடல்புண் (அல்சர்) நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் கேரட் சாறினை வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டு வர அவை குணமாகும். வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்குவதற்கும் கேரட் துணை புரிகிறது.

இந்த துர்நாற்றத்திற்கு வாயோ, பற்களோ காரணம் அல்ல. வயிற்றிலிருக்கும் கோளாறுதான் காரணம். வாரத்திற்கு ஐந்து நாட்கள் கேரட் சாறினை சர்க்கரை மற்றும் உப்பு எதுவுமின்றி அருந்தி வர வாய் துர்நாற்றம் பறந்தோடி விடும்.


வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதமாகும். இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளை பச்சயைாக மிக்ஸிசியில் அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். 


உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்குமுன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்தினால் இரைப்பைக் கோளறுகள் குணமடையும். உருளைகிழங்கு சாப்பிடுவதன் மூலம் ஆரம்ப கால புற்றுநோயை தடுக்கும்


ஆரம்ப புற்று நோய் இருப்பின் கேரட் மற்றும் உருளை கிழங்கு சேர்த்து புற்றுநோயை தடுக்கலாம்
by: Jamaludeen Jamal

25 மார்ச், 2012

மண்ணின் மைந்தனே..




மண்ணின் மைந்தனே மண்ணின் மைந்தனே மறவாதே!
நீ செய்த சரித்திர சாதனை தன்னை மறவாதே!
தியாகத்தின் பரம்பரையே! தூய வீரத்தின் விளை நிலமே!
நாம் சிந்திய ரத்தத்தில் தியாகத்தில் வந்தது இந்திய சுதந்திரமே..
தாய்நாட்டின் விடுதலையே.. நம் நாட்டின் விடுதலையே!
                                               (மண்ணின் மைந்தனே)
ஜாலியன்வாலா படுகொலை

ஜாலியன்வாலா படுகொலை சோகக் காட்சிகளே
அந்த மஸ்ஜிது கூனெனும் பள்ளியின் ரத்த சாட்சிகளே
பூட்டிய ரயிலில் திணறிய மூச்சுக் காற்றுகளே
அங்கு சிதைந்து விழுந்த கேரள முஸ்லிம் சடலங்களே
சிப்பாய் கலகத்தில் வீரம் சொறிந்த சிங்கங்களே
அங்கு சீரிய தோட்டா சுமந்து மடிந்த நெஞ்சங்களே
ஆங்கில தர்பார் நடுங்கிடச் செய்த வீரர்களே
என்றும் மறக்க முடியா நாட்டின் சொக்கத் தங்கங்களே!
)                            தியாகத்தின் பரம்பரையே(
திப்பு சுல்தான்
திப்பு சுல்தானின் வீரமரணத் துணிவுகளே
வங்கத்து வேங்கை சிராஜுத் தவ்லா எழுச்சிகளே
சிறையின் சிங்கம் பகதூர்ஷாவின் உணர்வுகளே
யூசுஃப்கானெனும் மருதநாயகத்து மறவர்களே
எண்ணிலடங்கா தியாகச் சுடர்களின் வெளிச்சங்களே
தன்னலம் மறந்து மண்ணகம் காத்த உண்மைகளே
தேசியக் கொடியின் பச்சை நிறத்து சின்னங்களே
''ஹுப்புல் வதனி மினல் ஈமான்'' எனும் உணர்வுகளே
                              ( தியாகத்தின் பரம்பரையே)

சுதந்திரப் போரில் முன்னிலை வகித்த சமுதாயம்
அதில் அரை நூற்றாண்டுகள் கல்வியை இழந்த சமுதாயம்
எண்ணூறு ஆண்டுகள் நாட்டை ஆண்ட சமுதாயம்
இன்று உரிமை இழந்து போராடுகின்ற சமுதாயம்
உடல் பொருள் ஆவி அனைத்தையும் இழந்த சமுதாயம்
என்றும் நாட்டுக்காகவே உழைத்து நிற்கும் சமுதாயம்
                             ( தியாகத்தின் பரம்பரையே ) 

அல்லாஹ்வின் தூதே அருள் தீபமே..







அல்லாஹ்வின் தூதே அருள் தீபமே 
எங்கள் யா நபி எங்கள் யா ஹபீப்
எல்லோரும் போற்றும் இறைத்தூதரே
 எங்கள் யா நபி எங்கள் யா ஹபீப்
                                                       (அல்லாஹ்வின் தூதே)


அந்நாளிலே மாந்தர் திசை மாறினார்
எந்நாளுமே தீய வழி தன்னிலே
பாவங்களில் மூழ்கி தடுமாறினார்
ஏனென்று கேட்க எவர் நாடினார்
அருளாக வந்தீரே அண்ணல் நபி
கண்கள் தேடுதே எங்கள் யா நபி -2
                                                  (அல்லாஹ்வின் தூதே)

தாயிஃப் நகரத்து வீதியிலே
தர்க்கர்கள் உம் மேனியைத் தாக்கினார்
செங்குருதி உங்கள் செம்மேனியில்
வழிந்திட நீர் மயங்கி விழுந்தீர்களே
நினைத்தாலே நெஞ்சம் அழுகின்றதே
எங்கள் யா நபி எங்கள் யா ஹபீப் -2
                                                        (அல்லாஹ்வின் தூதே)

ஷுஃபே அபீதாலிபில் வாடினீர்
சருகுகளைக் கொண்டு பசியாறினீர்
பாலின்றி பதறிய குழந்தைகளின்
வேதனை கண்டு நீர் கண்ணீர் சொறிந்தீர்
கண்கள் கலங்குது கருணை நபி 
எங்கள் யா நபி எங்கள் யா ஹபீப் -2
                                                     (அல்லாஹ்வின் தூதே)

சுடுபாலை மணல் மீது நான் ஓடவா
சுந்தரப் பூங்காவை நான் தேடவா
புதர் நிறைந்த மலை மீது நான் பார்க்கவா
பாய்கின்ற கண்ணீரை அணை போடவா
நினைத்தாலே நெஞ்சம் அழுகின்றதே
எங்கள் யா நபி எங்கள் யா ஹபீப் -2
                                                    (அல்லாஹ்வின் தூதே)



23 மார்ச், 2012

ஆதி ஏகன் தூதரே





ஆதி ஏகன் தூதரே
ஜோதியாம் நபி தாஹாவே
நானும் காண, நாளும் காண
ஆசையாய் அழைக்கின்றேனே!

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யாரஸூலல்லாஹ்!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஹபீபல்லாஹ்!

இருள் படிந்த இதயம் யாவும்
உங்கள் வரவால் ஒளிர்ந்ததே
அன்பே அருளே அழகே அமுதே
அஹ்மது யா நபி ஸலாம்-2       (ஆதி)