13 மார்ச், 2012

கொய்யா பழத்தின் மருத்துவ பலன்கள்


கொய்யாப் பழம் சுவை மிக்கதாகவும், சத்து நிரம்பியதாகவும், வாங்குவதற்கு எளிதானதாகவும் இருக்கும் கொய்யாப்பழம் நடுத்தர வர்க்கத்தினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதில் வியப்பு எதுவுமில்லை. ஆப்பிளைப் போன்று விட்டமின் ‘சி’ நிறைந்ததாகவும் தாதுப்பொருட்கள் செறிந்ததாகவும், விலை மலிவாகவும் இருப்பதால் எளிய மக்களுக்கு ஏற்ற பழமாக இது மாறிவிட்டது. மேலும் காஷ்மீரத்திலிருந்தோ, இமாசலத்திலிருந்தோ வர வேண்டிய கட்டாயம் எதுவுமின்றி உள்ளூரிலேயே பயிரிடப்படும் இப்பழம் ஏறக்குறைய ஆண்டு முழுவதும் கிடைக்கிறது.


கொய்யா மரத்தின் தாயகம் என்று எடுத்துக் கொண்டால் அது தென்அமெரிக்கா என்று தான் கூற வேண்டும். தென் அமெரிக்காவிலிருந்து 1526 ல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் பிலிப்பைன்ஸ்க்கு சென்று அங்கிருந்து போர்த்துகீசியரால் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது. இந்தியா முழுதும் சுமார் 41/2 லட்சம் ஏக்கரில் ஆண்டொன்றிற்கு 15 லட்சம் டன் பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்நாட்டில் பயிராகும் அனைத்து பழ வகைகளில் மொத்த எடையில் இது 9 சதவிகிதமாகும்.
கொய்யப்பழத்தில் பல வகைகள் இருந்தாலும் அவற்றின் உட்புற நிறத்தைக் கொண்டு அதை சிவப்புக் கொய்யா என்றும் வெள்ளைக் கொய்யா என்றும் இரு வகையாகப் பிரிக்கின்றனர். உட்புறம் சிவப்பாக இருந்தாலும் வெண்மையாக இருந்தாலும் சத்தைப் பொறுத்தவரை இரண்டுமே ஒன்று தான்.


கொய்யாப் பழங்களிலும், கொட்டையிலும் புரோட்டீன் கொழுப்பு மற்றும் மாவுச் சத்துக்கள் சிறிதளவே இருந்தாலும் நார்ச்சத்தும், கால்ஷியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற கனிமங்களும் நிறைந்த அளவில் உள்ளன. 100 கிராம் கொய்யாப்பழத்தில் சுமார் 210 மில்லி கிராம் விட்டமின் ‘சி’ இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நன்கு பழுத்த பழத்தைக் காட்டிலும் முக்கால் பழமாக உள்ள பழத்தின் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.


100 கிராம் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்
ஈரப்பதம்-81.7%, புரதம்-0.9%., கொழுப்பு-0.3%., மணிச்சத்து-0.7%., நார்ச்சத்து-5.2%., மாவுச்சத்து-11.2%., கலோரி அளவு-51.
மணிச்சத்துக்களும், வைட்டமின்களும்
கால்சியம்-10மி.கி., பாஸ்பரஸ்-28மி.கி., இரும்புச்சத்து-0.27மி.கி., வைட்டமின்’சி’-210மி.கி., வைட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ்-சிறிதளவு.
இயற்கையிலேயே கொய்யாப்பழம் ஒரு சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது. நாள்தோறும் ஒரு நடுத்தர அளவுள்ள கொய்யாப்பழம் சாப்பிட்டு வர மலச்சிக்கல் நிவர்த்தியாகும். கொய்யாப்பழத்தின் தோல் பகுதியிலுள்ள விட்டமின் ‘சி’ பல் மற்றும் ஈறு தொடர்புடைய நோய்களைப் போக்க வல்லது. பழுக்காத கொய்யாக்காய் வயிற்றுக் கடுப்பையும், வயிற்றோட்டத்தையும் தடுக்கும்.


கொய்யா மரத்தின் பட்டை மற்றும் வேர் ஆகியவற்றைக் கொண்டு தயாரித்த கஷாயம் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கைத் தடை செய்யும். இலையைக் கஷாயமிட்டு அதை வாயிலிட்டுக் கொப்பளிக்க ஈறு வீக்கம் கட்டுப்படும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மலக்குடல் பிதுக்கத்திற்கு கொய்யா இலையை அரைத்துப் பற்றுப் போட நல்ல குணம் தெரியும்.
by: இன்று ஒரு தகவல்

12 மார்ச், 2012

ஒப்பிலானில் முப்பெரும் விழா



இன்ஷாஅல்லாஹ் வரும் 17,18,19-3-2012 சனி,ஞாயிறு,திங்கள் ஆகிய தேதிகளில் இராமநாதபுரம் மாவட்டம் ஒப்பிலானில் முப்பெரும் விழா மிக சிறப்பாக நடைபெறவுள்ளது.


அதில் மதரசா மாணவ மாணவியர் பங்கேற்கும் பரபரப்பான பட்டிமன்றம், விறுவிறுப்பான நாடகம் மற்றும் பல்சுவைப் போட்டிகள் நடைபெறவுள்ளன.


ஆலிம்கள் பங்குபெறும் நகைச்சுவைப் பட்டிமன்றமும் உண்டு۔


 தலைப்பு:
இன்றைய சமுதாயம் பெரிதும் பின்பற்றுவது அனாச்சாரமா? கலாச்சாரமா? 
கோவை மற்றும் சேலத்திலிருந்து அறிஞர் பெருமக்கள் அதில் பல நல்ல கருத்துக்களை நகைச்சுவையுடன் வழங்கவுள்ளனர்.


இதற்கான ஏற்பாடுகளை ஒப்பிலான் முஸ்லிம் ஜமாஅத்தினரும் இஸ்லாமிய வாலிபர் சங்கத்தினரும் இலவச சுன்னத் (விருத்தன சேதன) வைபவ ஏற்பாடுகளை அல்முபீன் தப்ஸ் குழுவினரும் மிக சிறப்பாக செய்து வருகின்றனர் விழா சிறக்க அனைவரும் துஆ செய்ய அன்புடன் வேண்டுகிறோம்.

07 மார்ச், 2012

தீராத விளையாட்டுப் பிள்ளை (பாம்புடன்)


ஒப்பிலான் மையவாடியில் பாம்புடன் ஒரு செல்ல விளையாட்டு.
விளையாடுபவர்: பள்ளியின் துணை இமாம் புரோஸ்கான்.


ஒடிய பாம்பை இவர் பிடிக்கப் போக அது ஒரு பொந்துக்குள் ஓடி மறைந்துகொள்ள முயற்சித்தது. விடுவாரா புரோஸ்கான்? பிடித்து இழுத்து மரத்தில் இரண்டு சாத்து.


பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். அந்த பாம்பே நடுங்கும் என்றால் இவரைப் பார்த்துத்தான்.


ஒரு சுவாரஸ்யம் என்ன தெரியுமா?
ஒப்பிலான் பள்ளிக்கு பணிபுரிய வரும் ஒவ்வொருவருமே விலங்கியல் நிபுணராகவே அமைந்துவிடுவதுண்டு. இதற்கு முன்பு இந்த பள்ளியில் பணிபுரிந்த ஹாஃபிழ் நூருல் முஸ்தகீம் பல்லிக்கு கொல்லி வைத்த புள்ளியாக விளங்கினார். ஆமாம். நமது பள்ளியில் குடிகொண்டிருந்த அத்தனைப் பல்லிகளும் இவர் வந்த இரண்டே நாட்களில் எமலோகம் சென்றுவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அதற்கு பிறகு பல்லிகளின் வாடையே நமது பள்ளியில் இல்லை.
இப்பொழுது புரோஸ்கானின் இந்த விளையாட்டால் இனி பாம்புகளும் இந்த பக்கம் தலைவைத்துக்கூடப் படுக்காது என்று ஒப்பிலான் மக்கள் நம்புகிறோம்.

04 மார்ச், 2012

எங்கள் திருமணத்தின் துன்பச் சுமை தீராதா






யா அல்லாஹு.. அருட்கொடையாளனே..
துன்பங்கள் போக்கும் பேருபகாரனே
எங்கள் திருமணத்தின் துன்பச் சுமை தீராதா -அதனால் 
விளைந்த கொடுமைகளோ மாறாதா.. யா அல்லாஹ்!

பள்ளிவாசல் தோறும் தொடரும் குமருக்கான பிச்சைகள்
தன்மானம் இழந்தழுகும் பெண்ணைப் பெற்ற நெஞ்சங்கள்
திருமண சந்தையிலே மாப்பிள்ளைக்குப் பேரங்கள் 
கருவே கல்லறையாய் பெண்குழந்தை சிசுவுகள்
புதிதாய் மார்க்கம் வந்த புது முஸ்லிம் குடும்பங்கள் 
திருமணச் சுமையாலே மதம் மாறும் அவலங்கள் 
கருணை தயாளனே இது என்ன கொடுமைகள்
பரக்கத்தை தடை செய்யும் முசீபத்தின் அவலங்கள்

                                                     (எங்கள் திருமணத்தின்)

கஞ்சனும் காசை அள்ளி வீச வைக்கும் கல்யாணம்
வட்டிக் கடன் பட்டு சொத்தை விற்க வைக்கும் கல்யாணம் 
சமூகத்தின் பொருள்வளத்தை நாசமாக்கும் கல்யாணம்
தீமைக்கு தீமையாகி விளைந்து நிற்கும் கல்யாணம் 
வீண்விரைய செலவில் இறை சாபம் தேடும் கல்யாணம்
கவுரவம் தற்பெருமை காட்ட நடக்கும் கல்யாணம் 
என்றுதான் தீருமோ இந்தபெரும் அலங்கோலம் 
என்றுதான் தீருமோ இந்தபெரும் அலங்கோலம் 

                                                    (எங்கள் திருமணத்தின்)

சொர்க்கத்து பந்தமாகும் திருமணத்தின் உறவுக்கு
நரகத்து வேதனையாய் சுட்டெரிக்கும் செலவுகள்
மருந்துண்ண வைக்குகின்ற விருந்து முறைகேடுகள்
கைக்கூலிக்கு கமிஷன் வாங்கும் கல்யாணத்து தரகர்கள்
எளிமைத் திருமணங்கள் 'மஹர்' கொடுத்து நடக்கணும்
இது ஒரு வணக்கம் என்ற உண்மைதனை உணரணும் 
வேதனைத் தீயில் வாடும் பெண்ணினத்தைக் காக்கணும் மார்க்கமும் மனசாட்சியும் இனியாவது ஜெயிக்கணும்
                                                    (எங்கள் திருமணத்தின்)

இந்த பாடலை ஆடியோவாக கேட்டு மகிழ இங்கே அழுத்தவும்:


http://www.ziddu.com/download/18763821/திருமணத்தின் துன்பச்
சுமை தீராதா.mp3.html



01 மார்ச், 2012

இரவில் சீக்கிரம் படுத்து...




உணவைப்போல் தூக்கமும் உடலுக்கு ஊட்டம் தரும் விஷயம் ஆகும்.
தூக்கம் என்பது..சொகுசான விஷயமாகக் கருதப்பட்டு..இப்போது சமூக வாழ்க்கையில் அதன் முக்கியத்துவம் குறைந்துவிட்டது..இரவு முழுதும் வேலை..காலையில் தான் தூக்கம்..அப்படி ஆகிவிட்டது இன்றைய பெரும்பாலான இளைஞர்களுக்கு.
ஒருவனுடைய..சுகம்,துக்கம்,இளைக்கும் தன்மை,பலம், பலவீனம் எல்லாவற்றையும் தூக்கமே தீர்மானிக்கிறது.
மனதிற்கும்..உணர்வுகளுக்கும்..தொடர்பு இல்லாத போது..நாள் முழுக்க உழைத்து மூளை களைப்புறும்போது..நம் கண்கள் பார்ப்பது..மனதில் பதிவதில்லை.காதுகள் கேட்பது மூளைக்கு செல்வதில்லை.நாள் முழுதும் நாம் சேகரித்த விஷயங்களை செரிக்க மூளைக்கு ஓய்வு வேண்டும்.அது தூக்கத்தால் மட்டுமே முடியும்.
இரவில் சீக்கிரம் படுத்து..காலையில் சீக்கிரம் எழுவது நல்லது.சராசரியாக ஏழு மணி முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.



குழந்தைகள் 9 மணி நேரம் தூங்க வேண்டும்:

இரவில் சுமார் 9 மணி நேரம் தூங்காத குழந்தைகள் பள்ளியில் பாடங்களை கவனிக்க சிரமப்படுவார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

இரவில் நன்றாக நிம்மதியான உறக்கத்தைப் பெறும் பிள்ளைகள் காலையில் உற்சாகமாக பள்ளிக்குக் கிளம்புகின்றன. அதேப்போல பள்ளியிலும் பாடங்களை உடனுக்குடன் புரிந்து கொள்கின்றன.

அதே சமயம், சரியான தூக்கம் இல்லாத குழந்தைகள் பள்ளியில் சக தோழர்களுடன் சரியாக பழக முடியாமலும், ஆசிரியர் நடத்தும் சிறிய கணக்குகளைக் கூட புரிந்து கொள்ள முடியாமலும் அவதிப்படுவார்கள்.

ஒவ்வொரு நாளும் அதிக பாடங்களைப் படித்துவிட்டு இரவில் தாமதமாகத் தூங்கி அதிகாலையில் சீக்கிரம் எழுந்து பள்ளிக்குச் செல்லும் நிலை தற்போது உள்ளது. ஆனால் அது பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை.

நல்ல உறக்கமே மாணவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு இன்றியமையாததாகிறது. அது சீராக கிடைக்கும்பட்சத்தில் மாணவர்கள் படிப்பில் மிளிர்வார்கள்.

தற்போதெல்லாம் மாணவர்கள் பல மணி நேரங்களை டிவி பார்ப்பதிலும், கணினி விளையாட்டுகளிலும் செலவிட்டு உறக்கத்தை கெடுத்துக் கொள்கின்றனர். இதனால் தூக்கம் கெடுவது மட்டுமல்லாமல் அவர்களது அறிவு வளர்ச்சியும் குறைகிறது என்பது கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு மாணவர் படிப்பில் கவனக்குறைவுடன் செயல்படுகிறார் என்றால் உடனடியாக டியூஷன் அனுப்புவது, சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்வது போன்றவற்றோடு, பெற்றோர் மாணவரின் தூக்க நேரத்தை அதிகப்படுத்தி, டிவி பார்ப்பதையும், கணினி விளையாட்டை குறைப்பதற்கும் முயற்சி மேற்கொள்வதுதான் நல்ல மாற்றத்தை கொடுக்கும்.

காலைத் தூக்கம் கவலையின் தொடக்கம்:

சூரிய உதயம் ஆகியும் கூட, யார் ஒருவர் எழவில்லையோ, அவரது வீட்டில் வறுமை தாண்டவமாடும் என்கிறார் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். சூரியன் உதித்து விட்டால், நபிகள் நாயகம் அவர்கள் எழுந்து விடுவார்கள். ""காலை பஜ்ரு (தொழுகை) நேரம் தூங்கிக் கொண்டிருப்பது வாழ்க்கையில் தரித்திரியத்தை (ஏழ்மையை) உண்டாக்கும்,'' என்று கூறும் அவர்கள் காலை நேரத்தின் சிறப்பையும் எடுத்துச் சொல்கிறார்கள்.
ஒரு சமயம் அவர்கள் ""எனது உம்மத்தினருக்கு (பின்பற்றுவோர்) பரக்கத்தான (சிறப்பான) ஒரு நேரம் உள்ளது. இந்த நேரத்தில் அபிவிருத்தி ஏற்படுகின்றது,'' என்றார்கள். இதுகுறித்து அண்ணலாரிடம் ஒருவர், ""அது எந்த நேரம்?'' என்றார்கள். ""காலை பஜ்ர் நேரம் தொழுகை தொடக்கத்தில் இருந்து கதிரவன் உதிக்கும் நேரம் வரை,'' என அவர்கள் பதிலளித்தார்கள்.

அதிகாலையில் மகிழ்ச்சியுடன் எழுவதற்கு என்ன வழி: 
 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும் யோசனையைக் கேளுங்கள்.

 நரகத்திற்கு பயப்படக் கூடியவர்களும் சுவர்க்கத்திற்கு ஆசைப்படுபவர்களும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
 (மரணம் உண்டு என்பதை அறிந்த) மனிதர்கள் தூங்கிக் கொண்டேயிருக்கிறார்கள். மரணம் வரும் பொழுது விழித்துக் கொள்கிறார்கள்.
இஷா தொழுகைக்கு முன்பு தூங்குவதும், இஷாவிற்கு பின்பு வீண் பேச்சு பேசுவதும் கூடாது.
உங்களில் எவரேனும் தூங்கிவிட்டால் ஷைத்தான் அவருடைய பிடரியின் மீது மூன்று முடிச்சுகளை போட்டு ஒவ்வொரு முடிச்சிலும் (அவருடைய உள்ளத்தில்) இன்னும் நீண்ட இரவு மீதமிருக்கிறது. நீ நன்றாக தூங்கு என்று ஊதிவிடுகிறான். ஆனால் அம்மனிதர் விழித்து அல்லாஹ்வை திக்ரு செய்வாரானால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு அவர் ஒளு செய்வாரானால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. மேலும் அவர் தொழுதால் மூன்றாம் முடிச்சும் அவிழ்ந்து விடுகிறது. அவர் அதிகாலையில் தெளிவான உள்ளத்துடன் மகிழ்ச்சியுடன் எழும்பிவிடுகின்றார். அவ்வாறல்லாமல் அவர் விழிக்கவுமில்லை, ஒளு செய்யவுமில்லை, தொழவுமில்லையானால் அன்றைய காலைப் பொழுதில் சோம்பலுடையவராக கெட்ட மனமுடையவராக விழித்தெழுகின்றார்.

விடியும் வரை தொழாமல் தூங்குகிறவரின் செவியில் ஷைத்தான் சிறுநீர் கழிக்கின்றான். 


பிளாஸ்டிக் எமன்


சுற்றுச்சூழல் மாசுபடுவதே பூமி வெப்பமடைய முக்கிய காரணம். மனித செயல்பாடுகளால் வெளியிடப்படும் கார்பன் டைஆக்சைடு, மீதேன் போன்ற வாயுக்களே சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. பூமி வெப்பமடைதவதால் மனிதகுலத்தின் வாழ்வுரிமை கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. இதைத் தடுத்து சுற்றுச்சூழலை காக்க நாம் வாழும் இடத்தில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.


பூமியின் பாதுகாப்புக்கும் சுற்றுச்சூழலுக்கும் முக்கிய அச்சுறுத்தலாக இருப்பது பல்கிப் பெருகி வரும் குப்பைகளே. தெருவில் அனைவரது கண்களில் தென்படும் குப்பை பிளாஸ்டிக் கேரி பேக் மற்றும் பிளாஸ்டிக் கவர். எளிதாகவும், கையாளுவதற்கு வசதியாகவும் இருப்பதால் இன்றைய தலைமுறையினரது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே பிளாஸ்டிக் கேரி பேக் மாறிவிட்டது.


இப்படி பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை நாம் முறையாக அப்புறப்படுத்துகிறோமா? இல்லை. மாறாக, பூமிக்கு கேடுவிளைவிக்கும் வகையில் தெருவில் வீசுகிறோம்.


பாலிதீன் எனப்படும் வேதிப்பொருளால் உருவாக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் குப்பைகளுடன் சேர்த்து எரிக்கப்படும்போது, பைகளில் உள்ள சாயத்தால் காற்று மண்டலம் மாசுபடுகிறது. பல்வேறு சுவாச நோய்களை தோற்றுவிக்கிறது.


பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவுப் பொருட்களை வாங்கிச் செல்லும்போது, பிளாஸ்டிக் சூடாகி வேதியியல் மாற்றங்களால் ஹைட்ரோகார்பன் மற்றும் பியூரான் போன்ற நச்சு வாயுக்கள் உணவில் கலந்து விடுகின்றன. அந்த உணவை உண்பவர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படுகிறது.


குப்பை கழிவுகளுடன் மண்ணில் பிளாஸ்டிக் பைகளை புதைப்பதால், அவை நெடுங்காலத்துக்கு மண்ணில் மக்கிப்போகாமல் தாவரங்களின் வேர்கள் ஊடுருவ முடியாமலும், மழைநீர் மண்ணுக்குள் செல்வதைத் தடுக்கவும் செய்வதால் நிலத்தடி நீர்மட்டம் குறைய காரணமாக அமைகின்றன.


பிளாஸ்டிக் பைகளில் உள்ள உணவுப் பொருட்களை கால்நடைகள் உட்கொள்ளும்போது, கால்நடைகளின் உணவுக்குழல் அடைபட்டு அவை இறந்து போகின்றன. சில உயிரினங்கள் பேப்பர் என்று நினைத்துக் கொண்டு தவறுதலாக பிளாஸ்டிக் பைகளை உண்டுவிடுகின்றன. யானைகள், மாடுகள் இப்படி இறந்து போகும் நிகழ்வுகள் நிறைய பதிவு செய்யப்பட்டுள்ளன.


எனவே பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கப் பழகுவோம். மற்ற நண்பர்கள், உறவினர்களுக்கும் இச்செய்தியை எடுத்துச் சொல்வோம். அவசரத் தேவைக்கு ஒன்றிரண்டு முறை பிளாஸ்டிக் பையை பயன்படுத்தினால், அந்த பிளாஸ்டிக் பொருட்களை குப்பையோடு குப்பையாகப் போடாமல், சேமித்து மறுசுழற்சிக்கு அனுப்புவோம்.


துணிப்பைகள், சணல்பைகள், பழைய துணிகளால் தைக்கப்பட்ட பைகள், விழாக்களில் கொடுக்கப்படும் மஞ்சள் பைகளை பயன்படுத்துவோம்.


http://www.poovulagu.net/2008/11/blog-post_12.html