23 ஜூலை, 2014

நடுவர் தீர்ப்பு (மனிதநேயம்)

மாஷா அல்லாஹ். மனிதநேயத்தைப் பத்தி விலாவாரியா விளாசித் தள்ளிட்டாங்க இரண்டுபேரும். இப்ப தீர்ப்பு சொல்லணும். 
பொதுவாப் பார்த்தீங்கன்னா இன்னைக்கு மனிதநேயம் முற்றிலும் மாய்ந்துவிட்டதா என்றால் இல்லை. சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.
ஹைதராபாத்தில் ஒருவிளையாட்டு மைதானம். அங்கு சிறுவர்களுக்கான ஒரு ஓட்டப்பந்தயம். எட்டு சிறுவர் சிறுமியர் ரெடி சொன்னதும் ஓடத் துவங்கினர். அதுல ஒரு சிறுமி கால் தவறிக் கீழே விழ, என்ன ஒரு ஆச்சரியம்! ஓடிக்கொண்டிருந்த அத்தனை பெரும் அப்படி அப்படியே திரும்பி வந்து அந்த சிறுமியைத் தூக்கிவிட்டு கைகாலை உதறிவிட்டு அடிபட்டிருச்சாம்மா? ரொம்ப வலிக்குதாம்மா? என்று அன்போடு தடவிக் கொடுத்து அப்புறம் எல்லோரும் சேர்ந்து ஓடினார்கள். பந்தயத்தில் இதுமாதிரி எல்லாம் நடக்குமா என்று நீங்கள் நினைக்கவேண்டாம். ஏனெனில் அவர்கள் அத்தனை பெரும் மனம் நலம் குன்றியவர்கள். அவர்களுக்கு மனநலம் குன்றியிருக்கலாம்; மனிதநேயம் குன்றவில்லையே.

அதேபோல் இன்னொரு நிகழ்ச்சி. ஒரு கரடுமுரடான மலைப்பாதையில் பஸ் ஒன்று போய்க்கொண்டிருந்தது. சுமார் 50 பயணிகள் உள்ளே இருந்தார்கள். திடீரென ஒரு பயணிக்கு சிறுநீர் கழிக்க வேண்டிய அவசரம். அடக்கமுடியவில்லை. எனவே அவர் டிரைவரிடம் சென்று பஸ்ஸை கொஞ்சம் நிறுத்தச் சொன்னார். பஸ் நின்றது. அவர் மட்டும் இறங்கி ஒரு ஓரமாக சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார். அந்த நேரம் திடீரென மலை உச்சியிலிருந்து உருண்டு ஒரு பாறாங்கல் பஸ்மீது பலமாக மோத, அந்த பஸ் அப்படியே உருண்டு அதள பாதாளத்தில் விழுந்து நொறுங்கியது. அத்தனை பேரும் காலி. இதை அவர் அதிர்ச்சியோடு  பார்த்துக்கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த இன்னொருத்தர் வந்து சொன்னார். சார். நல்லவேளை நீங்க தப்பிச்சீங்க. நீங்க மட்டும் அந்த பஸ்ஸை விட்டு இறங்காம இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும்.? அப்ப..இவர் சொன்னாராம்: சே..நான் மட்டும் இறங்காமல் இருந்திருந்தால் 50 பேரும் தப்பித்திருக்கலாமே.. என்றார். சார் என்ன சொல்றீங்க? “ஆமா! எனக்காகத்தான் வண்டி நிறுத்தப்பட்டது. நான் மட்டும் இறங்காதிருந்தால் பஸ் போய்க்கொண்டே இருந்திருக்கும். அந்த பாறை உருண்டு விழுகிற வினாடியை பஸ் கடந்திருக்கும். எல்லோரும் பிழைத்திருக்கலாமே..என்று கைசேதப்பட்டார். இந்தக் காலத்தில் இப்படியும் யோசிக்கிறார்களா என்று நாம் யோசிக்கிறோம்.

ஆனால் இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடந்துகொண்டிருக்கிற ஒரு சில நிகழ்ச்சிகளை வைத்து மனிதநேயம் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்றும் சொல்வதற்கில்லை.

இந்தக் காலம் கலிகாலம் என்கிறார்கள். கொலை கொள்ளை அதிகமாகும்; விபச்சாரமும் அனாச்சாரமும் பெருகும் என்றெல்லாம் நபிமார்களால்  முன்னறிவிப்பு செய்யப்பட்டு அது நிதர்சனமாய் நடந்துகொண்டிருக்கிற காலம். கொத்துக் கொத்தாய்க் குழந்தைகள் கொல்லப்படுகிற கொடூரம், கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து, சிசுவை வெளியில் எடுத்து எரியும் நெருப்பில் போட்டு எள்ளி நகையாடும் எத்தர்கள் கூட்டம்.

குழந்தைத் திருடர்கள், கிட்னி திருடர்கள், ஆதாயம் கிடைக்கும் என்றால், உயிருக்கே ஊறு விளைவிக்கக்கூடிய, போலி மருந்துகளை மக்கள் தலையில் கட்டும் கயவர்கள், பலபேர் தற்கொலை செய்து கொள்வார்களே என்ற பாவத்தின் பயமில்லாத, பொதுப்பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடும் ஃபைனான்சியர்கள் இவர்களெல்லாம் இன்றைக்கு இல்லை என்று கூற முடியமா?
இன்றைக்கு எத்தனையோ நாடுகளில் வாழும் மக்கள் உணவுக்கு வழியில்லாமல் வாடிக் கொண்டு இருக்கிறார்கள் பசிக்கொடுமையினால். சாகவிருக்கும் ஒரு சிறுவனைத் திண்பதற்குக் கழுகு காத்திருந்த சம்பவம் கல் நெஞ்சம் படைத்தவர்களின் கல்பைக் கூட கரையச் செய்து விடும். ஒரு தனிமனிதனுக்கு உணவில்லையேல் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி.. இன்று எத்தனைபேர் அதைக் கவனத்தில் கொள்கிறோம்?

செல்வாக்கில் உயர்ந்து நிற்கின்ற மேலை நாடுகள் தங்களுடைய தேவைக்குப் போக டன் கணக்கில் பாலையும் மாவையும் கடலில் சென்று கொட்டுகிறார்கள். லாரி லாரியாக தக்காளிகளையும் திராட்சைகளையும் கொண்டு வந்து கொண்டாட்டம் என்ற பெயரில் எறிந்து விளையாடுகிறார்கள்
உலகத்தில் கிடைக்கின்ற எல்லாப் பழங்களையும் ஓரிடத்தில் ஒன்று சேர்த்து, அதில் குரங்குகளை விட்டு அவை அவற்றை நாசப்படுத்துவதைப் பார்த்து பூரிப்படைகிறார்கள்
உண்மையில் மனிதநேயம் இருந்தால் இது போன்று இவர்கள் செய்வார்களா? அரும்பாடு பட்டாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவாமல் இருப்பார்களா?
எனவே இன்றைய சூழலில் மனிதநேயம் என்பது ஒரு பெரியக் கேள்விக் குறிதான். அதனால்தான் அன்றைக்கே டயோஜினஸ் என்ற ஒரு ஞானி மக்கள் ஒன்றுகூடி இருக்கிற ஒரு சந்தையிலே பட்டப்பகலிலே கையிலே லாந்தர் விளக்கை ஏந்திக் கொண்டு எதையோ தேடிக்கொண்டு அலைந்தார். அவரிடத்தில் கேட்டார்கள். எதைத் தேடுகிறீர்கள்? என்று. அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? மனிதனைத் தேடுகிறேன் என்றார்.

மனிதத்தன்மையும் மனித நேயமும் உள்ளவர்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள் என்பதுதானே இதன் பொருள்? இறுதியாக நாம் சொல்வது இதுதான். மனிதநேயம் மடிந்துவிட்டது என்று நான் கூறவில்லை. ஆனால் ஒடிந்துவிட்டது என்பது உண்மை. ஒடிந்த அந்த மனிதநேயத்தை செப்பனிட்டு செம்மையாக்குவது காலத்தின் கட்டாயம் என்று கூறி இந்த பட்டிமன்றத்தை நிறைவு செய்கிறோம். வபில்லாஹித் தவ்பீக் வல்ஹிதாயா வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

இஸ்லாமிய கீதங்கள்

 இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF  தொகுப்பு : ஆலிமா சாஜிதா பின்த் இஸ்மாயீல் இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF :  Download