12 மே, 2013

இதுவரை வந்த இஸ்லாமிய இதழ்கள் (Islamic Magazines)

        --- ஆளூர் ஷா நவாஸ் (எழுச்சிமிக்க எழுத்தாளர்)


இஸ்லாமிய இதழியல்' என்பது, ஒரு நீண்ட நெடிய மரபையும், பாரம்பரியத்தையும் கொண்டது. இலங்கையில் தொடங்கி, கிழக்காசிய நாடுகளில் தொடர்ந்து, தமிழ்நாட்டில் படர்ந்து, வளைகுடா மண்ணிலும் வேர்பரப்பி, தம் ஆளுமையை அவை நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றன. ஒரு நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றை தன்னகத்தே கொண்டு தடம் பதித்திருக்கின்றன.

19 ஆம் நூற்றாண்டில் தொடங்கிய இஸ்லாமிய இதழ்களின் பயணம், 20 ஆம் நூற்றாண்டைக் கடந்து, தற்போது 21 ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தமிழில் வெளியான முதல் இஸ்லாமிய இதழின் பெயர் 'அலாமத் லங்காபுரி'. சலாவுத்தீன் என்பவரை ஆசிரியராகக் கொண்ட அவ்விதழ், 1869 ஆம் ஆண்டு கொழும்பில் வெளியிடப்பட்டது. துவான் பாபா யூனூஸ் எனும் வணிகர், கையெழுத்து இதழாக அரபுத்தமிழில் அதைத் தொடங்கினார்.

இலங்கையைத் தொடர்ந்து சிங்கப்பூரில் 1875 இல், 'சிங்கை வர்த்தமானி' என்ற இதழ் தொடங்கப்பட்டது. சி.கு.மகுதூம் சாயபுவை ஆசிரியராகக் கொண்டு அவ்விதழ் வெளியானது. 1876 இல் ’புதினாலங்காரி’ என்ற இதழ் கொழும்பிலிருந்தும், 1878 இல் ’தங்கை நேசன்’ என்ற இதழ் சிங்கப்பூரிலிருந்தும் வெளியாயின. ‘அசன்பே சரித்திரம்’ எனும் புகழ்பெற்ற நூலை எழுதிய சித்தி லெவ்வை முகம்மது காசிம் மரைக்காயரை ஆசிரியராகக் கொண்டு, 1882 இல் இலங்கையில் ‘முஸ்லிம் நேசன்’ என்ற இதழ் தொடங்கப்பட்டது.

1883 இல் நாகூர் குலாம் காதிறு நாவலர் மலாயா நாட்டின் பினாங்கு நகரில் 'வித்தியா விசாரிணி' என்ற இதழை தொடங்கியுள்ளார். அதே காலக்கட்டத்தில் பினாங்கிலிருந்து ‘உலக நேசன்’ என்ற இதழும் வெளிவந்துள்ளது. 1886 இல் கொழும்பிலிருந்து ‘சர்வ ஜன நேசன்’ என்ற இதழும், 1887 இல் சி.கு.மகுதூம் சாயபுவை ஆசிரியராகக் கொண்டு சிங்கப்பூரிலிருந்து ‘சிங்கை நேசன்’ என்ற இதழும் வெளிவந்துள்ளன.

குலாம் காதிறு நாவலரால் பினாங்கில் தொடங்கப்பட்ட ‘வித்தியா விசாரிணி’ பின்னர் 1888 இல் நாகூரிலிருந்து வெளியானது. அதே ஆண்டில் சென்னையில் முகம்மது யூசுபை ஆசிரியராகக் கொண்டு 'சம்சுல் ஈமான்' என்ற இதழும், காரைக்காலில் காசிம் முகைதீன் இராவுத்தரை ஆசிரியராகக் கொண்டு 'முகம்மது சமதானி' என்ற இதழும் தொடங்கப்பட்டுள்ளன. 1889 இல் நாகூரிலிருந்து ‘சீரிய சூரியன்’ என்ற இதழ் வெளியாகியுள்ளது.

சதாவதானி செய்குத்தம்பி பாவலர் அவர்களால் 1898 இல் ’யதார்த்தவாதி’ ‘இஸ்லாமிய மித்திரன்’ ஆகிய இதழ்கள் நடத்தப்பட்டுள்ளன.

1905 இல் சென்னையிலிருந்து ‘அஜாயிபுல் அக்பாற்’ [அதிசய செய்திகள்] என்ற இதழும், 1906 இல் ‘லிவாவுல் இஸ்லாம்’ [இஸ்லாமின் கோடி] என்ற இதழும் வெளியாகியுள்ளன.

1907 இல் முஸ்லிம் தூதன், 1909 இல் இஸ்லாம் நேசன், 1910 இல் அஜாயிபுல் ஆலம், இஷாஅத், சைபுல் இஸ்லாம் ஆகிய இதழ்கள் வெளியாயின. இதில் 'சைபுல் இஸ்லாம்' நாளிதழாக வெளிவந்தது. தமிழ்நாட்டில் வெளியான முதல் முஸ்லிம் தமிழ் நாளிதழ் என்ற சிறப்பையும் அவ்விதழ் பெற்றது.

1919 இல் பா.தாவூத் ஷா அவர்களால் தொடங்கப்பட்ட 'தத்துவ இஸ்லாம்' என்ற இதழ், 1923 இல் 'தாருல் இஸ்லாம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மார்க்க சிந்தனைகளைத் தாண்டி தமிழ் ஆர்வம், கல்வி விழிப்புணர்வு, அரசியல் கருத்துக்கள் என கலவையாக அவ்விதழ் வெளியானது. 'திருவாரூர் வீதிகளில் ஒருகையில் பச்சைப் பிறைக்கொடியையும், மறுகையில் தாருல் இஸ்லாம் இதழையும் ஏந்தியவாறு என் பொதுவாழ்வை தொடங்கினேன்' என்று கலைஞரால் இப்போதும் நினைவு கூரப்படும் சிறப்புக்குரிய இதழ் அது.

1923 இல் முஸல்மான், இஸ்லாம், தாஜுல் இஸ்லாம், 1924 இல் அல்கலாம், பத்ஹுல் இஸ்லாம், வஜுருல் இஸ்லாம், 1925 இல் அல்-இஸ்லாம், அல்-ஹிதாயா, 1926 இல் அல்-ஹக், கமருஸ்ஸமான், 1927 இல் இஸ்லாம், மத்ஹுல் இஸ்லாம், 1928 இல் சம்சுல் இஸ்லாம், ஜவ்ஹருல் இஸ்லாம், 1929 இல் ஹிபாஜத்துல் இஸ்லாம், 1930 இல் ஹக்குல் இஸ்லாம், 1931 இல் ஷம்ஸுல் ஹுதா, விடுதலை, 1932 இல் காலச்சந்திரன், 1933 இல் ஜன்மத், 1935 இல் சத்திய இஸ்லாம், சாந்தி, ஞானச்சுடர், 1936 இல் சாந்தி உலகம், முஸ்லிம், 1937 இல் சமரசம், மஸ்னவி ஷரீப், முஸ்லிம் லீக், 1938 இல் முஸ்லிம், 1939 இல் நூருல் இஸ்லாம், 1940 இல் கதிர், 1942 இல் முன்னேற்றம், றபீக்குல் இஸ்லாம், 1943 இல் இளம்பிறை, பாக்கிஸ்தான், 1944 இல் பால்யன், 1945 இல் முஸ்லிம் இந்தியா, வெள்ளி, 1946 இல் சமாதானம், சன்மார்க்கச் சங்கு, மணிமொழி, மின்னொழி, நூருல் ஹக், 1947 இல் மார்க்க வினா விடை, மிலாப், லீக் முஸல்மான், 1948 இல் அருள்ஜோதி, ஆஸாத், நூருல் ஹக், வளர்பிறை, 1949 இல் இஷா அத்துல் இஸ்லாம், உத்தம மித்திரன், புகாரி, 1950 இல் செம்பிறை என தமிழ்நாட்டில் வெளிவந்த முஸ்லிம் இதழ்களின் பட்டியல் நீண்டு செல்கின்றது.

கவிக்கோ அப்துல் ரகுமானின் தந்தை எழுத்தாளர் 'மஹதி' 1933 ஆம் ஆண்டு மதுரையில் ‘வெடிகுண்டு’ என்ற இதழை நடத்தினார். அப்போது தமிழகமெங்கும் தந்தைப் பெரியார் இஸ்லாத்தை ஆதரித்து தீவிர பரப்புரை செய்து வந்ததனால், வெடிகுண்டு பத்திரிகையில் பெரியாரையும், திராவிடர் கழகத்தையும் ஆதரித்து தீவிரமாக எழுதி வந்தார் மஹதி. அப்பத்திரிகையின் அதிதீவிரப் போக்கைக் கண்ட அன்றைய ஆட்சியாளர்கள், 5000 ரூபாய் அபராதம் விதித்ததனால் பத்திரிகை நிறுத்தப்பட்டது. பின்னர் சிட்டி கெஜட், நவயுகம் ஆகிய இதழ்களைத் தொடங்கி நடத்தியுள்ளார் மஹதி.

கலைமாமணி கவி.கா.மு.ஷெரீப், 1948 ஆம் ஆண்டு ‘ஒளி’ என்ற இதழைத் தொடங்கினார். அவரே ‘சாட்டை' 'தமிழ்முழக்கம்’ ஆகிய இதழ்களையும் 1952 முதல் 1969 வரை நடத்தினார்.

பன்மொழி அறிஞர் எம்.அப்துல் வஹ்ஹாப் பாக்கவி 1956 இல் தொடங்கிய ‘பிறை’, இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர் தொடங்கிய ‘மதிநா’, திருச்சி குலாம் ரசூல் தொடங்கிய ’ஷாஜஹான்’ ஆகிய இதழ்கள் குறிப்பிடத்தக்கவை.

1948 ஆம் ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்டு, சுமார் 65 ஆண்டுகளாக தொய்வில்லாமல் தொடர்ந்து வெளிவரும் ஒரே இதழாக 'முஸ்லிம் முரசு' விளங்குகின்றது. 1948 முதல் 1966 செப்டம்பர் வரை, திருவிடைச்சேரி எஸ்.அப்துல் ரஹீம் அவர்களும், 1966 அக்டோபர் முதல் 1980 வரை, நாவலாசிரியர் செய்யிது முஹம்மது ’ஹசன்’ அவர்களும் முரசின் ஆசிரியராக இருந்து வழிநடத்தினர். 1981 இல் ஆளூர் ஜலால் ஆசிரியர் பொறுப்பேற்ற பின் முஸ்லிம் முரசின் எல்லைகள் விரிந்தன. முஸ்லிம் சமூகத்தில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் இதழாக முரசு பரிணாமம் பெற்றது. 1995 இல் ஜலால் மறைந்து விட்டாலும், அவரது குடும்பத்தினர் இன்றுவரை இதழை நடத்தி வருகின்றனர்.

நாவலர் ஏ.எம்.யூசுப் சாகிப் 1943 இல் தமது இளம் வயதிலேயே காரைக்காலில் ‘கதம்பம்’ எனும் கையெழுத்துப் பிரதியைத் தொடங்கி நடத்தினார். பின்னர் 1947 இல் ‘முஸ்லிம் லீக்’ இதழைத் தொடங்கினார். 1952 இல் திருச்சி சென்ற அவர் அங்கு ‘மறுமலர்ச்சி’ எனும் வார இதழை வெளியிட்டார். சமூக அவலங்களுக்கு எதிரான விமர்சனங்களையும், கூர்மையான அரசியல் கருத்துக்களையும் தாங்கிய இதழாக மறுமலர்ச்சி வெளிவந்தது. 1993 இல் மறையும் வரை ஏ.எம்.யூசுப் சாகிப் அதன் ஆசிரியராக திறம்பட செயலாற்றினார். அவருக்குப் பின் அவரது மகன் 'ரிஸ்வி' சிலகாலம் மறுமலர்ச்சியை நடத்தினார்.

காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாகிப், 1947 இல் ‘முஸ்லிம்’ என்ற நாளிதழையும், 1961 இல் ‘உரிமைக்குரல்’ என்ற வார இதழையும் தொடங்கி நடத்தினார். முஸ்லிம் லீக்கின் அதிகாரப்பூர்வ இதழ்களாக அவை வெளிவந்தன. முஸ்லிம் இதழின் ஆசிரியராக அஹமது இப்றாஹிம் சாகிபும், உரிமைக்குரல் ஆசிரியராக அ.க.ரிபாயி சாகிப் அவர்களும் செயலாற்றினர்.

சிராஜுல் மில்லத் அப்துல் சமது சாகிப் 1954 இல் ‘மணிவிளக்கு’ மாத இதழையும், 1987 இல் ‘மணிச்சுடர்’ நாளிதழையும் தொடங்கினார். மணிவிளக்கு இஸ்லாமிய இலக்கியத் தளத்திலும், மணிச்சுடர் முஸ்லிம் அரசியல் களத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. மணிச்சுடர் அண்மையில் வெள்ளி விழா கண்டது. பேராசிரியர்.கே.எம்.காதர் மொகிதீன் அதை சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார். அவர் ஏற்கெனவே 1981 இல் ‘தாருல் குர்ஆன்’ எனும் இதழைத் தொடங்கி நடத்தியவர். தற்போது முஸ்லிம் லீக் பதிப்பகத்தின் சார்பில் ‘பிறை மேடை’ எனும் மாதமிருமுறை இதழ் வெளிவருகின்றது. வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் அவ்விதழின் ஆசிரியராக உள்ளார்.

1950 களிலிருந்து கடந்த 60 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான இஸ்லாமிய இதழ்கள் வெளிவந்துள்ளன.

1951 இல் தாரகை, தாஜ்மஹால், 1952 இல் கர்ஜனை, பத்ஹுல் இஸ்லாம், பறக்கும் பால்யன், 1953 இல் உதயம், சமரன், பாகவி, புத்துலகம், 1955 இல் சன்மார்க்க சங்கு, வெள்ளி மலர், 1956 இல் இஸ்லாமியச் சோலை, 1957 இல் இன்சாப், பிறைக்கொடி, 1958 இல் குர்ஆனின் குரல், 1959 இல் நேர்வழி, முபல்லிக், 1960 இல் அல் இஸ்லாம், சாந்தி விகடன், 1961 இல் அல் இன்ஸாப், மணிக்குரல், 1962 இல் ஒளிவிளக்கு, ரஹ்மத், 1963 இல் இந்திய தூதன், ஒளிச்சுடர், மறைக்கதிர், 1964 இல் அல் ஹிதாயா, 1965 இல் சுதந்திரக் கதிர், 1966 இல் அல் இஸ்லாம், கலாச்சாரம், 1968 இல் இளைய சமுதாயம், ஜிஹாத், 1970 இல் அல் ஹிதாயா, குவ்வத், றபீக்குல் இஸ்லாம், ஜன்னத், 1971 இல் அறமுரசு, நறுமணம், ஜமாஅத்துல் உலமா, 1972 இல் அக்பர், அறவிளக்கு, சரவிளக்கு, திப்பு, நற்சிந்தனை, பசுங்கதிர், மறைவழி, 1973 இல் பரீதா, சிராஜ், 1974 இல் தெளலத், மறைச்செய்திகள், 1975 இல் முஸ்லிம் குரல், முஸ்லிம் சுடர், முஸ்லிம் நேசன் ஆகிய இதழ்கள் வெளியாயின.

1976 இல் ஆன்மீக இன்பம், தாவூஸ், முபாரக், ஹாஜா, ஹுஜ்ஜத், 1977 இல் தர்பியத்துல் இஸ்லாம், 1978 இல் அல் ஃபுர்கான், இஸ்லாமியர் உலகம், காயிதே மில்லத், கத்தரிக்கோல், சமுதாயக் குரல், ஞானரதம், முத்துச்சுடர், 1979 இல் இலட்டு, இஸ்மி, 1980 இல் அல்-அமீன், புரட்சி மின்னல், 1981 இல் இந்தியன் முஸ்லிம் ஹெரால்டு, 1982 இல் றப்பானி, அன்வாருல் குர்ஆன், சிராஜுல் மில்லத், முஸ்லிம் நேஷனல் ஹெரால்டு, முஸ்லிம் மறுமலர்ச்சி, 1983 இல் இளைய நிலா, நம்குரல், பைத்துல்மால், 1984 இல் இதயக்குரல், உண்மை ஒளி, தவ்ஹீத், தீன்குரல், நுஸ்ரத், நூருல் ஜுமான், 1985 இல் அல்-மிம்பர், அஷ்ஷரீஅத்துல் இஸ்லாமியா, அஹ்லெ சுன்னத், சமுதாய முழக்கம், செப்பம், தீன்குலம், 1986 இல் அந்-நஜாத், அல்-முபாரக், அல்-ஜன்னத், இறை அமுதம், இஸ்லாமியர் இதயக்குரல், உண்மைக்குரல், ஞானப்பூங்கா, மலர்மதி, ஷரீஅத், ஹிலால், 1987 இல் அல்-முஜாஹித், இந்தியன் மைனாரிட்டீஸ், கனியமுதம், சுவனப்பூங்கா, தீன்தமிழ், பள்ளிவாசல், மக்காச்சுடர், மறைஞானப் பேழை, மும்தாஜ், வஸீலா, வான்சுடர், ஷரீஅத் பேசுகிறது, 1988 இல் அல்முபீன், எழுச்சிக்குரல், கந்தூரி, தீன்மணி, பாலைவன ரோஜா, 1989 இல் அல்-ஜன்னத், கருவூலம், 1990 இல் அல்-பரகத், அல்-பைஜுல் இஸ்லாம், புஷ்ராச்சுடர், முஸ்லிம் மெயில் ஆகிய இதழ்கள் வெளியாயின.

1991 இல் அல்-ஜிஹாத், இஸ்லாமியத் தென்றல், நேர்வழி, ஹுதா, 1992 இல் அல்-இர்ஷாத், அல்-இஸ்லாம், இதயவாசல், இளைய நிலா, உம்மத், புதுமலர்ச்சி, முஸ்லிம் வீக்லி, மெய் ஒளி, 1993 இல் அல்-ஹுதா, மறைச்சுடர், மனாருல் ஹுதா, ஃபீஸஃபீல், 1994 இல் அல்லாஹ்வின் ஆலயம், அல்-ஹக், அல்-ஹிக்மத், இஸ்லாமிய சகோதரத்துவக் குரல், தமிழ் அருவி, தீன் துன்யா, நமது இளைய நிலா, மஹாராணி, லீக் டைம்ஸ், 1995 இல் சாந்தி வளாகம், நுக்தா, 1996 இல் அந்நிஃமத், இஸ்லாமிய வளர்பிறை, திருமதினா அரசு, 1998 இல் சிந்தனைச் சரம், 1999 இல் முஸ்லிம் டைம்ஸ், 2001 இல் அந்நிஸா, அஸ்ஸிராத், மறைச்சுடர், ஜமாஅத் முரசு, 2002 இல் புதிய காற்று, அல்-ஹரம், நமது முற்றம், புதிய பயணம், மனித நேயத் தொண்டன், மனிதன், சென்னை நண்பன், 2003 இல் இனிய திசைகள், இனிய தென்றல், ஏகத்துவம், சொர்க்கத் தோழி, தர்மத்தின் குரல், புதிய சுவடி, 2005 இல் சமுதாயத் தொண்டன், 2006 இல் இளம்பிறை, திங்கள் தூது, மெய்யெழுத்து, உலக வெற்றி முரசு, ஹைர உம்மத், 2008 இல் சமூகநீதி முரசு, சமஉரிமை, 2009 இல் தங்கம், 2011 இல் பீஸ் வாய்ஸ், அஹ்லுஸ் சுன்னா என ஏராளமான இதழ்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், பச்சைரோஜா, இளையான்குடியான் மடல், தீன்குலப் பெண்மணி, பள்ளிவாசல் டுடே, அன்னை கதீஜா, அல்-ஹிந்த், சமுதாய உரிமை, ஆகிய இதழ்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இவற்றில் நிறைய இதழ்கள் பாதியிலேயே நின்றுவிட்டாலும், பல இதழ்கள் இன்றும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

1972 இல் திருச்சியில் தூத்துக்குடி எம்.முஸ்தபா ஹுசைன் தொடங்கிய ‘நர்கிஸ்’ மாத இதழ் 40 ஆண்டுகளைக் கடந்து இன்றும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய இதழ்களிலேயே பெண்களுக்காக நடத்தப்படும் இதழ் என்ற சிறப்பை நர்கிஸ் பெற்றுள்ளது. எம்.அனீஸ் பாத்திமா எனும் பெண்மணி ஆசிரியராக இருந்து திறம்பட நடத்திக் கொண்டிருக்கிறார்.

1980 இல் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினால் தொடங்கப்பட்ட மாதம் இருமுறை இதழான ‘சமரசம்’ இன்றுவரை தொய்வில்லாமல் வெளிவருகின்றது. எழுத்தாளர் சிராஜுல் ஹசன் இவ்விதழின் பொறுப்பாசிரியராக செயலாற்றி வருகிறார்.

1991 இல் பழனிபாபா தொடங்கிய இதழின் பெயர் ‘புனிதப் போராளி’. அதில் அனல் பறக்கும் கட்டுரைகளை எழுதிய பாபா, நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளையும், அரச அடக்குமுறைகளையும் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தினார். 'அல்-முஜாஹித்', 'முக்குல முரசு' போன்ற பத்திரிகைகளையும் பாபா நடத்தியுள்ளார்.

1992 இல் நடைபெற்ற பாபர் மஸ்ஜித் இடிப்பிற்குப் பின் முஸ்லிம்களிடம் ஏற்பட்ட அரசியல் எழுச்சியை அடைகாக்கும் வகையில் நிறைய இதழ்கள் தோன்றின. அவற்றில் மிக முக்கியமான இதழாக கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் தொடங்கிய ‘உங்கள் தூதுவன்’ இதழ் விளங்குகின்றது. அரசியல் விழிப்புணர்வூட்டும் ஆங்கங்களும், முஸ்லிம்களின் மறைக்கப்பட்ட வரலாறுகளும் அவ்விதழில் வெளியிடப்பட்டன.

இந்துத்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய ஒழிப்பு, மூடநம்பிக்கை அழிப்பு, ஒடுக்கப்பட்டோர் சார்பு ஆகிய கொள்கைகளுடன் 1982 இல் வெளியான ‘SIM செய்தி மடல்’ எனும் மாத இதழை, இன்று வெளியாகிக் கொண்டிருக்கும் பல இதழ்களின் தாய்மடி என்று சொல்லலாம். 1996 இல் தொடங்கப்பட்ட ‘உணர்வு’, வார இதழ், 2001 இல் தொடங்கப்பட்ட ‘ஒற்றுமை’ மாதம் இருமுறை இதழ், 2004 இல் தொடங்கப்பட்ட ‘மக்கள் உரிமை’ வார இதழ் ஆகியவை த.மு.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடுகள். 2004 லிருந்து ததஜவின் இதழாக உணர்வு மாறிவிட்டது.

1996 இல் தொடங்கப்பட்ட ‘விடியல் வெள்ளி’, 2011 இல் தொடங்கப்பட்ட ‘புதிய பாதை’ ஆகியவை பாப்புலர் பிரண்ட் மற்றும் எஸ்.டி.பி.ஐ.யின் இதழ்கள். 2009 இல் ‘வைகறை வெளிச்சம்’ என்ற இதழை மூத்த பத்திரிகையாளர் மு.குலாம் முஹம்மது தொடங்கினார். இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் 2009 இல் ‘சமுதாய மக்கள் ரிப்போர்ட்’ எனும் வார இதழ் தொடங்கப்பட்டது.

இவ்வாறு எண்ணிக்கையில் அடங்காத வகையில் ஏராளம் இதழ்கள் தோன்றியிருந்தாலும், 2003 இல் தொடங்கப்பட்ட ‘சமநிலைச் சமுதாயம்’ மாதஇதழ், பல்வேறு அம்சங்களில் தனித்துவத்துடன் மிளிர்கிறது. சமநிலையின் சிறப்பே, அது எந்த இயக்கச் சார்புடனும் வெளிவருவதில்லை என்பதுதான். எல்லா இயக்கங்களைப் பற்றியும் அதில் விமர்சனக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. சமூகத்தில் நடக்கும் எந்தஒரு அநீதியையும் கண்டு சமநிலை வாய்மூடி இருந்ததில்லை. தனக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற அளவுகோலுடன் எதையும் அணுகுவதில்லை. விருப்பு வெறுப்புக்கு இடமளிப்பதில்லை. அச்சுறுத்தலுக்கோ, மிரட்டலுக்கோ அது என்றுமே அடிபணிந்ததில்லை.

'அதிகாரத்தை நோக்கிய உண்மையின் குரலா'கவே சமநிலை இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

1998 இல் நிகழ்ந்த கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்டு சுமார் ஒன்பதரை ஆண்டுகள் விசாரணைக் கைதியாகவே சிறையில் பூட்டப்பட்டிருந்த அப்துல் நாசர் மதானி பற்றி, 2004 இல் சமநிலை வெளியிட்ட அட்டைப்படக் கட்டுரை அதன் துணிவையும், துயருறும் மனிதர்கள் மீதான அதன் கனிவையும் பறைசாற்றியது. அக்கட்டுரை, தமிழகத்தில் மனித உரிமைத் தளத்தில் பங்காற்றி வரும் சமூக செயல்பாட்டாளர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது.

மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் பணியை செம்மையாகச் செய்து வருகிறது சமநிலை. காயிதே மில்லத், அபுல் கலாம் ஆசாத், நாகூர் ஹனிபா, பஹதூர் ஷா ஜாபர் ஆகிய ஆளுமைகளின் வாழ்க்கையை மீளாய்வு செய்ததன் மூலம், அன்றைய தலைவர்களை இன்றைய தலைமுறைக்கு கொண்டு சேர்த்தது சமநிலை.

மூத்த எழுத்தாளர் ஜே.எம்.சாலி எழுதிய ‘இலக்கிய இதழியல் முன்னோடிகள்’, கடையநல்லூர் எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் எழுதிவரும் ‘முதல் தலைமுறை மனிதர்கள்’ ஆகிய தொடர்கள் நமது கடந்த காலத்தை நம் கண்முன்னே நிறுத்தின.

அருந்ததிராய், ஏ.ஜி.நூரானி, ஏ.பி.ஜே.அப்துல் கலாம், ஏ.ஆர்.ரஹ்மான், சல்மா, தொல்.திருமாவளவன், வைகோ, கி.வீரமணி, விஜயகாந்த் என ஏராளமான முகங்களைத் தாங்கிய அட்டைப்படக் கட்டுரைகளையும், நேர்காணல்களையும் சமநிலை வெளியிட்டுள்ளது. அ.முத்துகிருஷ்ணன் எழுதிய பாலஸ்தீன் பயணக் கட்டுரை தமிழுலகிற்கு ஓர் புதிய அனுபவமாகவே அமைந்தது.

பரமக்குடி, கூடங்குளம், தர்மபுரி போன்ற பிரச்சனைகளை அலசும் முகப்போவியங்களும், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாவின் ஆவேச வெளிப்பாடுகளும் அதிர்வுகளை ஏற்படுத்திய பதிவுகளாகும்.

புதிய பொருளாதாரக் கொள்கை, அன்னிய நேரடி முதலீடு, பசுமை வேட்டை என மத்திய அரசு செய்யும் மக்கள் விரோத செயல்கள் அனைத்தையும் சினம் கொண்டு எதிர்த்துள்ளது சமநிலை.

அ.மார்க்ஸ் எனும் எழுத்துப் போராளி சமநிலையில் தொடர்ச்சியாக எழுதிய அனைத்துக் கட்டுரைகளும் காலத்தால் அழியாதவை. இந்துத்துவமும், ஏகாதிபத்தியமும், அதிகார வர்க்கமும் முஸ்லிம்களுக்கு எதிராக செய்யும் அத்தனை சூழ்ச்சிகளையும் அம்பலப்படுத்தினார் மார்க்ஸ்.

நபிகளார், நபித்தோழர்கள், அரபு நாடுகள், மத்திய கிழக்காசிய நாடுகளில் நிலவும் அரசியல் சூழல்கள், இஸ்லாமிய அரசுகள், மதரசாக்கள், மார்க்க அறிஞர்கள் பற்றியெல்லாம் கோவை அப்துல் அஜீஸ் பாக்கவி தொடர்ந்து எழுதிவரும் கட்டுரைகள் புதிய சிந்தனைகளை விதைத்தன.

தரமான மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மற்றும் ஆழமான நேர்காணல்கள் இதழை மேலும் கனப்படுத்தின. பேராசிரியர் தி.மு.அப்துல் காதர், நிகழ் அய்க்கண், டாக்டர்.மு.அப்துல் ரசாக் ஆகியோரது கட்டுரைகளும் குறிப்பிடத்தக்கவை.

மற்ற அனைத்து இதழ்களிலிருந்தும் சமநிலை வேறுபட்ட ஒரு இடம் உண்டென்றால், அது வடிவமைப்பு தான். அட்டை முதல் உள்ளடக்கம் வரை அத்தனைப் பக்கங்களும் நேர்த்தியுடன் அமைந்துள்ளன.

2 கருத்துகள்:

  1. ----------------------------------------------------

    வாதீடு: 087
    "கப்பல் ஓட்டிய மரக்காயர் யாவரோ?"

    பொருல்:
    "தம்புல்ல என்ப, தம்முடய்ய பில்லய்யே."
    "வாப்பா என்ப, வாருங்கோ அப்பாவே."
    "உம்மா என்ப, உயிர் கொடுத்த அம்மாவே."

    கப்பல் மனி:
    னியூசிலாந்து தேசத்தின் தலய்மய்யிடமான வெலிங்டன் அருங்காட்சியகத்தில், கப்பலுக்குரிய, தமிலு எலுத்துடன் கூடிய, ஒடய்ந்த வென்கல மனி ஒன்ரு பேனிக் காக்கப்பட்டு வருது. அந்த ஒடய்ந்த வென்கல மனியின் விலிம்பில், "முகய்யதீன் வக்குசுடய்ய கப்பல் உடய்ய மனி" என்ரு எலுதப்பட்டு உல்லதாகச் சொல்லப்படுது. அந்த ஒடய்ந்த வென்கல மனியய், 1836ஆம் ஆன்டில் வில்லியம் கோல்ன்சோ (William Colenso) என்னும் இங்கிலாந்து தேசத்தின் மதப் போதகர், னியூசிலாந்து தேசத்தின் வெங்கேரி (Whangarei) என்னும் இடத்தின் அருகில் வசித்த ஆதிமக்கலிடம் இருந்து, கன்டெடுத்ததாகச் சொல்லப்படுது. இதன்மூலம் பல னூட்ரான்டுக்கு முன்பே, இலம்பிரய்போட்ரியார் ஒருவர், கடல் வனிகத்தில் ஈடுபட்டு இருந்ததும், அவர் னியூசிலாந்து தேசத்துக்கே சென்ரு சேர்ந்த விபரமும் தெரியவருது.

    ----------------------------------------------------

    பதிலளிநீக்கு
  2. கீழக்கரை மெளலானா அவர்களை ஆசிரியராக கொண்டு "பசுங்கதிர்"மாத இதழ் மண்ணடியில் இருந்து வெளியிடப்பட்டது.ஆசிரியரின் நூல் வெளியீடுகள் பற்றி அறிய வேண்டும்.

    பதிலளிநீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...