- வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!
- கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!
- பிரமாண்ட சொர்க்கம்
- அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன்பம்!
- சிந்தை அள்ளும் சந்தை!
- மொத்தமும் சுத்தம் !
- பழமை ஆகாது ! இளமை மாறாது!!
- சொர்க்கவாசிகளின் உயரம்
- சுன்னத்தில் தடம் பதிப்போம்! ஜன்னத்தில் இடம் பிடிப்போம் !!
- பிரமாண்ட நரகம்!
- நரகம் எப்போது வயிறு நிரம்பும்?
- அகங்காரமும் அதிக அலங்காரமும் நரகம் சேர்க்கும் !
- நரகிலிருந்து மீண்டு சொர்க்கம் நுழையும் இறுதி மனிதர் !
விரிவாக வாசிக்க :
வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!
எந்த வினைக்கும் எதிர் வினை உண்டு என்ற நியதிக்கு ஏற்ப இந்த உலகத்தில் நாம் விதைக்கின்ற எந்த விதையாக இருந்தாலும் அதை மறுமையில் அறுவடை செய்தே ஆக வேண்டும்.
நன்மையை விதைத்தால் அதன் அறுவடை சொர்க்கம்.
தீமையை விதைத்தால் அதன் அறுவடை நரகம்.
இது இவ்வுலகில் இறையச்சத்தை உண்டாக்கி மனிதனுக்கு மகத்தான நன்னெறியை போதிக்கிறது.
அந்த சொர்க்கமும் நரகமும் நாம் நினைத்துப் பார்க்க இயலாத அளவில் இருக்கும் என திருமறையும் நபி மொழியும் எடுத்துரைக்கின்றன.
கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை (சொர்க்கத்தில்) நான் தயார்படுத்தி வைத்துள்ளேன்" என்று கூறினான்.
இதைக் குர்ஆனிலுள்ள "அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாக அவர்களுக்காக மறைத்துவைக்கப்பட்டுள்ள கண்குளிர்ச்சியை எவரும் அறியமாட்டார்" (32:17) எனும் வசனம் உறுதிப்படுத்துகிறது. (முஸ்லிம் 5439)
பிரமாண்ட சொர்க்கம்
وَسَارِعُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ
عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ
இன்னும், நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவர்க்கத்தின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவர்க்கத்தின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது. அது இறையச்சமுடையோருக்காகவே தயார் செய்யப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் : 3:133)
“சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் நிழலில் பயணிப்பவர் நூறு வருடங்கள் பயணித்தாலும் அதைக் கடந்து செல்ல முடியாது. (முஸ்லிம் 5442)
அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன்பம்!
அல்லாஹ் (மறுமையில்) சொர்க்கவாசிகளை நோக்கி, "சொர்க்கவாசிகளே!" என்று அழைப்பான். அதற்கு அவர்கள், "எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம். நன்மைகள் அனைத்தும் உன் கரங்களிலேயே உள்ளன" என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ், "திருப்தி அடைந்தீர்களா?" என்று கேட்பான். அதற்கு சொர்க்கவாசிகள், "உன் படைப்புகளில் யாருக்கும் நீ வழங்கியிராத கொடைகள், இன்பங்கள் ஆகியவற்றை எங்களுக்கு நீ வழங்கியிருக்க, நாங்கள் திருப்தியடையாமல் இருப்போமா?" என்று கூறுவார்கள்.
அப்போது அல்லாஹ், "இதைவிடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கட்டுமா?" என்பான். அவர்கள், "அதிபதியே! இதை விடச் சிறந்தது எது?" என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ், "உங்கள்மீது என் உவப்பை அருள்கிறேன்; இனி ஒருபோதும் உங்கள்மீது நான் கோபப்படமாட்டேன்" என்று கூறுவான். (முஸ்லிம் 5444)
சிந்தை அள்ளும் சந்தை!
சொர்க்கத்தில் சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக் காற்று வீசி அவர்களுடைய முகங்களிலும் ஆடையிலும் (கஸ்தூரி மண்ணை) வாரிப்போடும். உடனே அவர்கள் மேன்மேலும் அழகும் பொலிவும் பெறுவார்கள். பிறகு அழகும் பொலிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார்கள்.
அப்போது அவர்களிடம் அவர்களுடைய துணைவியர், "எங்களிடமிருந்து சென்ற பின்னர் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றுவிட்டீர்களே!" என்று கூறுவர். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தான் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றிருக்கிறீர்கள்" என்று கூறுவர். (முஸ்லிம் 5448)
மொத்தமும் சுத்தம் !
சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் ஒளிரும் சந்திரனைப் போன்று (அழகாகத்) தோற்றமளிப்பார்கள். பிறகு அவர்களுக்கு அடுத்து நுழைபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று காட்சியளிப்பார்கள். சொர்க்கத்தில் அவர்கள் மலஜலம் கழிக்கமாட்டார்கள். மூக்குச் சிந்தவுமாட்டார்கள். எச்சில் துப்பவுமாட்டார்கள்.
அவர்களின் சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களது வியர்வையில் கஸ்தூரி மணம் கமழும். அவர்களுடைய (நறுமணப் புகையிடும்) தூபக் கலசங்கள் அகிலால் எரிக்கப்படும். அவர்களுடைய துணைவியர் கண்ணழகுக் கன்னியர் (அல்ஹூருல் ஈன்) ஆவர். அவர்கள் அனைவரது குணமும் ஒரே மனிதரின் குணமாகவே அமைந்திருக்கும். (முஸ்லிம் 5450)
பழமை ஆகாது ! இளமை மாறாது!!
சொர்க்கத்தில் நுழைபவர் இன்பத்திலேயே இருப்பார்; துன்பம் காணமாட்டார். அவரது ஆடை இற்றுப்போகாது. அவரது இளமை அழிந்துபோகாது.
(சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்த பின்னர்) பொது அறிவிப்பாளர் ஒருவர், "(இனி) நீங்கள் ஆரோக்கியத்துடனேயே இருப்பீர்கள்; ஒருபோதும் நோய் காணமாட்டீர்கள். நீங்கள் உயிருடன் தான் இருப்பீர்கள்;ஒருபோதும் இறக்கமாட்டீர்கள். இளமையோடுதான் இருப்பீர்கள்; ஒருபோதும் முதுமையடையமாட்டீர்கள். நீங்கள் இன்பத்தோடுதான் இருப்பீர்கள்; ஒருபோதும் துன்பம் காணமாட்டீர்கள்" என்று அறிவிப்புச் செய்வார். (முஸ்லிம் 5457)
இதையே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "இதுதான் சொர்க்கம்; நீங்கள் (உலகில்) நற்செயல் புரிந்துகொண்டிருந்ததற்காக இது உங்களுக்கு உடைமையாக்கப்பட்டுள்ளது என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லப்படும்" (அல்குர்ஆன் 7:43) என்று கூறுகின்றான்.
சொர்க்கவாசிகளின் உயரம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (ஆதிமனிதர்) ஆதமை அவரது (அழகான) உருவத்தில் படைத்தான்.அவரது உயரம் அறுபது முழங்களாகும். அவரைப் படைத்தபோது, "நீர் சென்று, அங்கு அமர்ந்திருக்கும் வானவர்கள் குழுவுக்கு முகமன் (சலாம்) கூறுவீராக; அவர்கள் உமக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக்கொள்வீராக. ஏனெனில், அதுதான் உங்களது முகமனும் உங்களுடைய சந்ததிகளின் முகமனும் ஆகும்" என்று இறைவன் சொன்னான்.
அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் வானவர்களிடம் சென்று, "அஸ்ஸலாமு அலைக்கும்" (உங்களுக்குச் சாந்தி உண்டாகட்டும்) என்று முகமன் சொன்னார்கள்.
அதற்கு வானவர்கள், "அஸ்ஸலாமு அலைக்க வ ரஹ்மத்துல்லாஹ்" (சாந்தியும் இறைவனின் பேரருளும் உங்கள்மீதும் பொழியட்டும்) என்று பதில் முகமன் கூறினர். அவர்கள் (தமது பதிலில்) "இறைவனின் பேரருளும்" (வ ரஹ்மத்துல்லாஹ்) என்பதைக் கூடுதலாகச் சொன்னார்கள்.
ஆகவே, மறுமை நாளில் சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் அறுபது முழம் உயரம் கொண்ட ஆதம் (அலை) அவர்களின் உருவத்தில்தான் நுழைவார்கள். அவருக்குப் பிறகு இன்று வரை அவருடைய சந்ததிகள் உயரத்தில் குறைந்துகொண்டே வருகின்றனர். (முஸ்லிம் 5463)
சுன்னத்தில் தடம் பதிப்போம்! ஜன்னத்தில் இடம் பிடிப்போம் !!
நபிகளாரை நேசித்து, அவர்கள் வழிமுறையைப் பின்பற்றினால் சொர்க்கத்தில் உயர்ந்த இடம் உண்டு.
كُلُّ أُمَّتي يَدْخُلُونَ الجَنَّةَ إِلَّا مَن أَبَى، قالوا: يا رَسُولَ اللَّهِ، وَمَن يَأْبَى؟ قالَ: مَن أَطَاعَنِي دَخَلَ الجَنَّةَ، وَمَن عَصَانِي فقَدْ أَبَى
ஒரு முறை இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர’ என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! ஏற்க மறுத்தவர் யார்?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவராவார்’ என்று பதிலளித்தார்கள். (புகாரி: 7280)
பிரமாண்ட நரகம்!
அன்றைய நாளில் நரகம் எழுபதாயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு சங்கிலியுடனும் எழுபதாயிரம் வானவர்கள் இருந்து, இழுத்து வருவார்கள்.இதை
நபி (ஸல்) அவர்கள், "ஆதமின் மகன் பற்றவைக்கும் (பூமியிலுள்ள) இந்த நெருப்பானது, நரக நெருப்பிலுள்ள வெப்பத்தின் எழுபது பாகங்களில் ஒரு பாகமாகும்" என்று சொன்னார்கள்.
அதற்கு மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நரகவாசிகளைத் தண்டிக்க பூமியிலுள்ள இந்த நெருப்பே போதுமானதாய் இருக்கிறதே?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அந்த நெருப்பு (பூமியிலுள்ள) இந்த நெருப்பைவிட அறுபத்தொன்பது பாகம் கூடுதலாக வெப்பமேற்றப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு பாகமும் இந்த நெருப்பின் வெப்பம் கொண்டதாயிருக்கும்" என்று சொன்னார்கள். (முஸ்லிம் 5465)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
ஒரு முறை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது, ஏதோ விழுந்த சப்தத்தை அவர்கள் கேட்டார்கள். நாங்களும் கேட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது என்ன (சப்தம்) என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள்.
நாங்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று சொன்னோம். நபி (ஸல்) அவர்கள், "இது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் நரகத்திற்குள் தூக்கியெறியப்பட்ட ஒரு கல்லாகும். அது இந்த நேரம்வரை நரகத்திற்குள் சென்று இப்போதுதான் அதன் ஆழத்தை எட்டியது" என்று சொன்னார்கள். (முஸ்லிம் 5466)
நரகம் எப்போது வயிறு நிரம்பும்?
நரகமும் சொர்க்கமும் வாக்குவாதம் செய்துகொண்டன. நரகம், "பெருமையடிப்பவர் களுக்காகவும் அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்" என்று சொன்னது. சொர்க்கம், "எனக்கு என்ன நேர்ந்ததோ! மக்களில் பலவீனர்களும் அவர்களில் கீழ்நிலையினரும் இயலாதவர்களுமே (அதிகமாக) என்னுள் நுழைவார்கள்" என்று கூறியது.
அப்போது அல்லாஹ் சொர்க்கத்திடம், "நீ எனது பேரருள். உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு அருள் புரிகிறேன்" என்று கூறினான். நரகத்திடம், "நீ எனது வேதனை. உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு வேதனை கொடுக்கிறேன்" என்று கூறினான். பிறகு (அவ்விரண்டையும் நோக்கி), "உங்களில் ஒவ்வொருவருக்கும் நிரம்பத் தரப்படும்" என்று சொன்னான்.
ஆனால், நரகமோ இறைவன் தனது பாதத்தை அதன் மீது வைக்காத வரை (வயிறு) நிரம்பாது. இறைவன் தனது பாதத்தை வைக்கும்போது, நரகம் "போதும்; போதும்" என்று கூறும். அப்போதுதான் அதற்கு வயிறு நிரம்பும். மேலும், நரகத்தின் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். (முஸ்லிம் 5470)
அகங்காரமும் அதிக அலங்காரமும் நரகம் சேர்க்கும் !
இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர்.
நீண்ட சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு மக்களை அடித்து இம்சிக்கும் கூட்டத்தார்.
மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்தபடி (தளுக்கி குலுக்கி கர்வத்துடன்) நடந்து அந்நிய ஆடவர்களின் கவனத்தை தம் பக்கம் ஈர்க்கக்கூடிய பெண்கள். அவர்களின் தலைமுடி சரிந்து கழுத்து நீண்ட ஒட்டகத்தைப் போன்றிருக்கும். இவ்விரு குழுவும் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) அதன் வாடையைக்கூட நுகரமாட்டார்கள். (முஸ்லிம் 5487)
நரகிலிருந்து மீண்டு சொர்க்கம் நுழையும் இறுதி மனிதர் !
சொர்க்கத்தின் பிரம்மாண்டம், நரகத்தின் பயங்கரம் சில கண்டோம். சுவனம் நுழையவும் நரகம் நுழையாதிருக்கவும் சில வழிகள் கண்டோம்.
இறுதியாக, தன் பாவங்களினால் நரகத்தில் நுழைந்த சில அடியார்களையும் கூட அல்லாஹ் தன் கருணையால் அதிலிருந்து மீட்டு சொர்க்கத்தில் சேர்ப்பதோடு அவர்கள் நினைத்துப் பார்க்காத இன்பங்களை வழங்குவான் என்கிற வியப்பான தகவலும் வருகிறது.
“இறைவன், அடியார்களிடையே தீர்ப்பு வழங்கி முடித்த பின், நரகவாசிகளில் தான் நாடிய சிலரைத் தனது கருணையினால் (நரகத்திலிருந்து) வெளியேற்ற விரும்புவான். அதன்படி அல்லாஹ்விற்கு எதையும் இணைகற்பிக்காமல் இருந்து, "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை" என்று உறுதிகூறியவர்களில், தான் கருணைகாட்ட நாடிய சிலரை நரகத்திலிருந்து வெளியேற்றுமாறு வானவர்களுக்கு இறைவன் ஆணையிடுவான். வானவர்கள் நரகத்திலிருக்கும் அவர்களை சஜ்தாவின் அடையாளங்களை வைத்து இனம் கண்டுகொள்வார்கள். மனிதனி(ன் உடலி)ல் உள்ள சஜ்தாவின் அடையாளத்தைத் தவிர மற்றப் பகுதிகளை நரகம் தீண்டுகிறது. சஜ்தா அடையாளத்தைத் தீண்டக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துள்ளான். ஆகவே, அவர்கள் அங்கமெல்லாம் கரிந்துவிட்ட நிலையில் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
அப்போது அவர்கள்மீது "மாஉல் ஹயாத்" எனப்படும் (ஜீவ) நீர் ஊற்றப்படும். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று புதுப் பொலிவுடன் நிறம் மாறிவிடுவார்கள்.
பிறகு இறைவன் (தன்) அடியார்களிடையே தீர்ப்பு வழங்கி முடிப்பான். அப்போது நரகத்தை முன்னோக்கியபடி ஒரு மனிதர் மட்டும் எஞ்சியிருப்பார். அந்த மனிதர்தாம் சொர்க்கத்தில் நுழையும் இறுதி மனிதராவார்.
அவர் "என் இறைவா! நரகத்தின் (வெப்பக்) காற்றால் எனக்கு மூச்சடைக்கிறது. அதன் ஜுவாலை என்னைக் கரிக்கிறது. ஆகவே, நரகத்தைவிட்டு என் முகத்தை வேறு பக்கம் திருப்பிடுவாயாக!" என்று கூறி, அல்லாஹ் நாடிய சில பிரார்த்தனைகளைச் சொல்லி அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார். பிறகு அல்லாஹ், "இ(ப்போது நீ கோரிய)தை உனக்கு நான் செய்(து கொடுத்)தால் வேறொரு கோரிக்கையையும் நீ முன்வைக்கலாம் அல்லவா?" என்று கேட்பான். அதற்கு அந்த மனிதர், "(இல்லை;) வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்" என்று சொல்லிவிட்டு, சில வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் அவர் தம் இறைவனிடம் வழங்குவார். ஆகவே, இறைவன் அவரது முகத்தை நரகத்தைவிட்டு (வேறு பக்கம்) திருப்பிவிடுவான்.
இதையடுத்து அவர் சொர்க்கத்தை முன்னோக்கி, அ(திலுள்ள)தைக் காணும்போது சற்று நேரம்வரை அமைதியாக இருப்பார்.
பிறகு, "என் இறைவா! சொர்க்கத்தின் வாசல்வரை என்னைக் கொண்டுசெல்வாயாக!" என்பார். அதற்கு இறைவன் அவரிடம், "இப்போது உனக்கு நான் வழங்கியதைத் தவிர வேறெதையும் என்னிடம் கேட்கமாட்டேன் என நீ வாக்குறுதியும் உறுதிமொழியும் வழங்கவில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான். உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன!" என்பான். ஆனால், அவர் தொடர்ந்து "என் இறைவா..." என்று கூறி அல்லாஹ்வைப் பிரார்த்தித்துக்கொண்டே இருப்பார். அவரிடம் இறைவன், "(உனது இந்தக் கோரிக்கையை ஏற்று) இதை நான் உனக்கு வழங்கிவிட்டால் வேறொரு கோரிக்கையையும் நீ முன்வைக்கலாம் அல்லவா?" என்று கேட்பான்.
அதற்கு அவர், "இல்லை; உன் கண்ணியத்தின் மீதாணையாக! (வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்)" என்று கூறுவார் . அல்லாஹ் அவரைச் சொர்க்கத்தின் வாசல்வரை கொண்டு செல்வான். அவர் சொர்க்கத்தின் வாசலில் நிற்கும்போது அவருக்காகச் சொர்க்கம் திறந்துகொள்ளும். உடனே அவர் அதிலுள்ள உல்லாசமான சுகங்களைக் காணும்போது சற்று நேரம்வரை மௌனமாக இருப்பார். பிறகு, "என் இறைவா! என்னைச் சொர்க்கத்திற்குள் அனுப்புவாயாக!" என்று கூறுவார். அப்போது அவரிடம் இறைவன், "இப்போது உனக்கு வழங்கப்பெற்றதைத் தவிர வேறெதையும் என்னிடம் கேட்கமாட்டாய் என்று கூறி என்னிடம் வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் நீ வழங்கவில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான். உனது ஏமாற்று வேலைதான் என்ன!" என்று கேட்பான். அதற்கு அவர், "என் இறைவா! நான் உன் படைப்புகளிலேயே நற்கதியற்றவனாக ஆகிவிடக்கூடாது" என்று கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக்கொண்டேயிருப்பார். இறுதியில் அவரைக் கண்டு இறைவன் சிரித்துவிடுவான். அவரைக் கண்டு இறைவன் சிரித்ததும் "சொர்க்கத்திற்குள் நுழைந்துகொள்!" என்று கூறிவிடுவான். சொர்க்கத்திற்குள் அவர் நுழைந்த பின், "நீ விரும்பியதையெல்லாம் ஆசைப்படலாம்" என்று அவரிடம் இறைவன் கூறுவான். அவ்வாறே அவர் ஆசைப்பட்டுத் தம் இறைவனிடம் கோருவார். அப்போது இறைவன் இன்னின்னதை ஆசைப்படு என்று அவருக்கு நினைவு படுத்துவான். இறுதியில் அவருடைய ஆசைகள் அனைத்தும் அடங்கிவிடும்போது, "இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்" என்று இறைவன் கூறுவான்.
சுப்ஹானல்லாஹ் ! அல்லாஹ்வின் கருணையே கருணை ! சொர்க்க நரகத்தின் பிரம்மாண்டத்தையும் அதன் காட்சிகளையும் ஆய்வு செய்வது என்பது கடல் நீரை முழுவதும் கையில் அள்ளுவதற்கு சமம். அல்லாஹ் நரகத்தின் புகை கூட நம்மைத் தொட்டு விடாமல் பாதுகாத்து சொர்க்கத்தில் உயர்ந்த பதவிகளை சொந்தமாக்குவானாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்