இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் (சென்ற காலத்தில்) இருந்தவர்களில் மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, (திடீரென) மழை பிடித்தது. எனவே, அவர்கள்
ஒரு குகையில் தஞ்சம் புகுந்தார்கள். உடனே, அந்தக் குகை (வாசலை
மலையிலிருந்து உருண்டு வந்த ஒரு பாறை மூடி) அவர்களை அடைத்தது. அவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நம்மை (நம்முடைய) வாய்மையான செயல் தான் காப்பாற்ற
முடியும். எனவே, நம்மில் ஒவ்வொருவரும், தான் வாய்மையுடன் நடந்ததாக நம்புகிற விஷயத்தைக் கொண்டு (அல்லாஹ்விடம்) பிரார்த்திக்கட்டும்"
என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.
எனவே, அவர்களில் ஒருவர் பின் வருமாறு பிரார்த்தித்தார்:
"இறைவா! என்னிடம் ஒரு கூலியாள் எனக்காக ஒரு ஃபரக் (அளவு) நெல்(லை) கூலிக்கு(ப்
பேசி) வேலை செய்தார். பிறகு கூலியை (வாங்கிக் கொள்ளாமல்)விட்டுவிட்டுச் சென்றார். நான்
அந்த ஃபரக் அளவு நெல்லை எடுத்து வேளாண்மை செய்தேன். அதன் வருவாயிலிருந்து பல மாடுகளை
வாங்கினேன். பிறகு (ஒரு நாள்) அவர் என்னிடம் தன் கூலியைக் கேட்டு வந்தார். நான் அவரிடம்
'அங்கு சென்று, அந்த மாடுகளை
ஓட்டிச்செல்" என்றேன். அதற்கவர், 'உங்களிடம் எனக்குரியது
ஒரு ஃபரக் அளவு நெல்தானே!" என்று கேட்டார். நான் அவரிடம், 'அந்த மாடுகளை எடுத்துக் கொள். ஏனெனில் அவை (நீவிட்டுச் சென்ற) அந்த ஒரு ஃபரக்
நெல்லிலிருந்து கிடைத்தவை தாம்" என்று சொன்னேன். அவர் அவற்றை ஓட்டிச் சென்றார்.
(அதை நீ அறிவாய்) நான் அதை உன் அச்சத்தின் காரணமாகவே செய்ததாக நீ அறிந்திருந்தால் எங்களைவிட்டு
(இந்தப் பாறையை) நீக்குவாயாக!" அந்தப் பாறை அவர்களைவிட்டு சற்றே விலகியது.
மற்றொருவர் பின்வருமாறு பிரார்த்தித்தார்:
"இறைவா! எனக்கு வயது முதிர்ந்த தாய் தந்தையர் இருந்தனர். நான் ஒவ்வோர் இரவிலும்
அவர்களுக்கு என் ஆடு ஒன்றின் பாலைக் கொண்டு செல்வேன். ஓர் இரவு அவர்களிடம் செல்லத்
தாமதமாகிவிட்டது. அவர்கள் தூங்கிவிட்ட பின்பு சென்றேன். என் மனைவியும் என் குழந்தைகளும்
பசியால் கூக்குரலெழுப்பி அரற்றிக் கொண்டிருந்தனர். என் தாய் தந்தையர் பருகுகிற வரை
அவர்களுக்குப் புகட்ட மனமில்லாதவனாக நான் இருந்தேன். அதே வேளையில், அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்பிடவும் நான் விரும்பவில்லை.
நான் அவர்களை (பால் தராமல்)விட்டுவிட, அவர்கள் அதைக் குடிப்பதற்காக
எதிர்பார்த்துக் காத்திருப்பதை நான் விரும்பவுமில்லை. எனவே, அதிகாலை
நேரம் உதயமாகும் வரை நான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். (இதை நீ அறிவாய்.) இதை நான்
உன் அச்சத்தின் காரணத்தால் தான் செய்தேன் என்று நீ கருதினால் எங்களைவிட்டு (இந்த அடைப்பை
இன்னும் சற்று) நீக்குவாயாக!" அவ்வாறே, அந்தப் பாறை அவர்கள்
வானத்தைப் பார்க்கும் அளவிற்கு (இன்னும் சற்று) விலகியது.
மற்றொருவர் இப்படிப் பிரார்த்தித்தார்:
'இறைவா! என் தந்தையின் சகோதரர் மகள் ஒருத்தி எனக்கு இருந்தாள்.
அவள் மக்களிலேயே எனக்கு அதிகப் பிரியமானவளாக இருந்தாள். நான் அவளை எனக்கு 'இணங்குமாறு' அழைத்தேன். நான் அவளிடம் நூறு தீனார்களைக்
கொண்டு வந்தாலே தவிர எனக்கு இணங்க முடியாதென்று மறுத்துவிட்டாள். நான் அதனைத் தேடி
அடைந்தபின் அவளிடம் எடுத்துக்கொண்டு சென்று அதைக் கொடுத்தேன். அவள் தன்னை என் வசம்
ஒப்படைத்தாள். நான் அவளிடம் உடலுறவிற்காக அமர்ந்த பொழுது அவள், 'அல்லாஹ்வுக்கு அஞ்சு. முத்திரையை அதற்குரிய (சட்டப்பூர்வமான) உரிமையின்றி
(திருமணம் முடிக்காமல்) திறக்காதே" என்று சொன்னாள். உடனே நான் (உடலுறவு கொள்ளாமல்)
எழுந்து விட்டேன். நூறு தீனார்களை (அவளிடமே)விட்டுவிட்டேன். நான் இதை உன் அச்சத்தின்
காரணத்தால் செய்ததாக நீ கருதினால் (மீதிமிருக்கும் அடைப்பையும்) எங்களைவிட்டு நீக்குவாயாக!"
எனவே, அல்லாஹ் அவர்களைவிட்டு (முழுமையாக) நீக்கிவிட்டான். அவர்களும்
அதிலிருந்து வெளியேறினார்கள்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (புகாரி : 3465)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்