24 மே, 2012

பெரியோரைப் பேணுவோம்

பெரியோரை மதிப்போம்

நல்லோர்கள் வாழ்வை நாம் புரட்டிப் பார்த்தால் அவர்கள் பெற்றோர் நலன் பேணுவதில்பெரும் அக்கறை எடுத்துக்கொண்ட விதத்தைப் படித்து மெய்சிலிர்த்துப் போகிறோம்.
பின்வரும் நிகழ்வுகளை வாசியுங்கள் சுப்ஹானல்லாஹ் இந்தளவு பேற்றோரைப் பேண முடியுமா என்று மூக்கில் விரல் வைத்து வியப்பின் விளிம்பைத் தொடுவீர்கள்.
ஹ்மஸ் இப்னு ஹஸன் ரஹ் அவர்கள் வீட்டில் ஒரு தேளைக் கண்டார்கள். அதை அடிக்க முனைந்தார்கள். அது விருட்டென்று ஓடி ஒரு குழிக்குள் மறைந்தது. அவர்கள் விடவில்லை. குழிக்குள் கையை விட்டு அதைப் பிடிக்க முயன்றார்கள். அது வசமாக தீண்டிவிட்டது. 
''ஏன் இந்தளவு சிரத்தை எடுத்துக்கொள்ளவேண்டும்? அதுதான் குழிக்குள் போய்விட்டதே..'' என்று வினவப்பட்டபோது, ''ஒரு வேளை அது வெளியே வந்து என் தாயாரைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சினேன். அப்படி எதுவும் நடப்பதற்குள் நாமே அதைக் கொன்றுவிடலாம் என எண்ணினேன்.'' என்றார்கள். இதைப் படிக்கும்பொழுது அபூபக்கர் ரலி அவர்களின் நினைவு நம் நெஞ்சில் நிழலாடுகிறது.
தவ்ரு குகையில் தாஹா நபியை மடியில் தாங்கி அருமை அபூபக்கர் (ரலி) அவர்கள் அமர்ந்திருக்கும்பொழுது அரவம் ஒன்று அவர்களின் பாதத்தைப் பதம் பார்க்க, 'தன் உயிர் போனாலும் பரவாயில்லை... களைப்புடன் கண்ணயர்ந்திருக்கும் கண்மணி அவர்களின் துயில் களைந்துவிடக் கூடாது என்று அந்த விஷத்தையும் வேதனையையும் சகித்துக்கொண்ட அபூபக்கர் (ரலி) அவர்களின் தியாகத்தைப் போன்ற நிகழ்வு இது.


மாம் ஜைனுல் ஆபிதீன்( ரஹ்) சிறந்த ஒரு 'தாபிஈ'. 
அவர்களிடம் கேட்கபட்டது: ''நீங்கள் தாயைக் கவனிப்பதில் கண்ணுங்கருத்துமாய் உள்ளவர்கள். ஆனாலும் ஒருமுறை கூட தாயாருடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டதில்லையே. ஏன்?''
அவர்கள் கூறிய பதில்: என் தாயின் பார்வையில் பட்டு அவர்கள் மனம் விரும்பிய ஏதேனும் ஒரு உணவுப் பகுதியை நான் கவனிக்காமல் அள்ளி உண்டுவிடுவேனோ அதன் காரணமாக அவர்களைப் புண்படுத்திய குற்றத்திற்கு ஆளாகிவிடுவேனோ'' என்று அஞ்சுகிறேன்.


முஹம்மது இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் தாயாரிடம் உரையாடும்பொழுது குரலைத் தாழ்த்தி தனிந்த குரலில் பேசுவார்கள். பார்க்கிறவர்கள் ''என்ன இப்னு சீரீனுக்கு ஏதாவது உடம்புக்கு முடியலையா?'' அடங்கி ஒடுங்கி அமைதியாக பேசுகிறாரே'' என்று கேட்பார்களாம்.


ப்னு அவ்னில் முஸ்னீ ரஹ் அவர்களும் அப்படித்தானாம். ஆனால் ஒருமுறை அவர்களை அவரது தாயார் சற்று தூரத்தில் நின்றிருந்ததால் சப்தமிட்டு அழைக்க இவர்களும் சப்தமிட்டு குரல் கொடுத்தார்களாம். நம்மைப் பொருத்தவரை இதுவெல்லாம் நம் வாழ்வில் அன்றாட நிகழ்வு. ஆனால் அவர்களோ அதைப் பெருங்குற்றமாக நினைத்து இரண்டு அடிமைகளை உரிமையிட்டு அதற்கு பரிகாரம் தேடினார்கள்.


ல்க் இப்னு ஹபீப் (ரஹ்) அவர்களின் வாழ்வு மிக மிக ஆச்சரியம். அவர்கள் தன் தாயின் தலையைத் தடவி முத்தமிடுவார்கள்; தாய் கீழிருக்கும்போது மாடிக்கு இவர்கள் ஏறியதே இல்லை. தாயின் பாதத்தின் கீழ்தான் சுவனம் உள்ளது அந்த தாயின் தலைக்கு மேல் நம் பாதம் இருப்பதா? அவர்கள் மனம் அதற்கு இடம் தரவே இல்லை.


விவேகானந்தர் ஒருமுறை அமெரிக்காவிற்கு பிரச்சாரம் செய்யக் கிளம்பினார். அம்மாவிடம் பயணம் சொன்னார். அப்போது அம்மா மகனே அதோ அந்த கத்தியை எடுத்து என்னிடம் தந்துவிட்டுப் போ என்றார். அந்த அவசர நேரத்திலும் கத்தியை எடுத்துக் கொடுத்தார் என்பது ஆச்சரியமல்ல. கத்திமுனையை தன் பக்கமாக பிடித்துகொண்டு பிடியை தாயாரிடம் நீட்டினார். கொடுக்கும் அவசரத்தில் கத்தி குத்தினால் அது என் கையாக வேண்டுமானால் இருக்கட்டும் என் தாயின் கையில் ஒரு கீறல் விழுவதைக்கூட சம்மதியேன். ''மகனே நீ மக்களுக்கு உபதேசம் செய்ய தகுதியானவன். போய்விட்டு வெற்றியோடு திரும்பி வா'' என்று அந்த தாய் வாழ்த்தி வழியனுப்பினாள்.


குர்ஆன் நெடுகிலும் நாம் காண்கிறோம். இறைவனுக்கு செய்யும் கடமைக்கு அடுத்தபடியாக பெற்றோருக்கு செய்யவேண்டிய கடமையே பிரதானப்படுத்துகிறான் இறைவன். 
وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا [ النساء: 36.
قُلْ تَعَالَوْا أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ أَلَّا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا [ الأنعام:151)

 وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَأَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّي ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا [ الإسراء: 23، 24.
وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ [ لقمان: 14




தாய் தந்தையர் பொழியும் பாசத்தை பிள்ளைகளில் எத்தனை பேர் அவர்களுக்கு திருப்பித் தருகிறார்கள்?
தான் உண்டு தன் வேலை உண்டு தன் குழந்தைகளுண்டு என்று வருடக் கணக்கில் பெற்றோரை திரும்பிக் கூடப் பார்க்காத பலர் உண்டு
காரணம் கேட்டால் ''நான் சிறுவனாக இருந்தபோது என் தந்தை என்னைக் கான்வெண்டில் படிக்கவைக்கவில்லைஎன்னைவிட மூத்தவன் மீதுதான் அவருக்கு பிரியம்அம்மா எனக்கு எண்ணெய் ஏறிய கன்னங்கரேல் என்ற ஒற்றை மூக்குத்திதான் கொடுத்தார்ஆனால் நேற்று வந்த மருமகளுக்கோ இரட்டைவடம் சங்கிலியைக் கொடுத்தார்'' என்று ஏதேதோ காரணம் சொல்வார்கள்
இன்னும் சிலரோ, ''இந்த இரண்டு கிழங்கட்டைகளுக்குமே மாத்தி மாத்தி வைத்தியம் பார்த்துக்கிட்டு இருந்தா நான் எப்போ நாலு காசு சேர்த்து வைக்கிறது?'' என்று அங்கலாய்ப்பார்கள்.
பொருள் ஈட்டுவதும் சிக்கனமாக செலவழிப்பதும் நல்ல பழக்கம்தான்ஆனால் அதற்கு எதை விலையாகக் கொடுப்பது என்று இல்லையா?
வெளிநாட்டை பின்னனியாகக் கொண்ட ஒரு கற்பனைக் கதை..
அது ஒரு கிராமம்அந்த ஊர் பண்ணையாரிடம் ஒரு ஹெலிகாப்டர் இருந்ததுதான் சாவதற்குள் ஒரு முறையாவது அந்த ஹெலிகாப்டரில் பறந்து பார்க்கவேண்டும் என்று அந்த ஊரிலிருந்த வயதான மாது ஒருத்தி தன் மகனிடம் ஆசைப்பட்டுக் கேட்டாள்அவனுக்கு இதில் சிறிதும் விருப்பமில்லைசாவப்போகிற நேரத்தில் கிழத்துக்கு என்னல்லாம் ஆசை வருகிறது பார்'' என்று புலம்பிக்கொண்டே பண்ணையாரிடம் சென்று விஷயத்தைக் கூறினான்அதற்கு பண்ணையார்நான் யாரையுமே பணம் வாங்காமல் ஹெலிகாப்டரில் ஏற்றிச் செல்வதில்லைஇருந்தாலும் உனக்காக ஒரு சலுகை தருகிறேன்ஹெலிகாப்டரை கன்னாபின்னாவென்று ஓட்டிப் பழகிவிட்டேன்தவிர நான் ஹெலிகாப்டர் ஓட்டும்போது பக்கத்தில்யாராவது பயத்தில் கத்தினால் நான் டென்ஷனாகி விடுவேன்அதனால் பயணம் செய்யும்போது நீங்கள் ஒரு துளி சப்தம்கூட எழுப்பக்கூடாதுஇதை மீறி யாராவது கத்தினால் தரை இறங்கியது நூறு டாலர் அபராதம் கட்டவேண்டும் என்றார்மகனும் இதற்கு ஒப்புக்கொண்டார்.
பயணம் துவங்கியதுபண்ணையார் தான் சொன்னமாதிரியே ஹெலிகாப்டரை தாறுமாறாக ஓட்டினார்வானத்தில் கரணம் அடித்தார்கடைசியில் தரை இறங்கியதும் பண்ணையார்பரவாயில்லையே நாம் ஆகாயத்தில் பறந்தபோது நீங்கள் ஒரு முனகல் சப்தம் கூட எழுப்பவில்லையே'' என்று பாராட்டினார்அதற்கு, ''ஆமாம்என் அம்மா ஹெலிகாப்டரிலிருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். ''அம்மா'' என்று கத்தினால் நூறு டாலர் அபராதம் கட்ட சொல்வீர்களே என்று எண்ணி என்னை நானே கட்டுப்படுத்திக்கொண்டேன்'' என்றானாம் அந்த அருமை(?) மகன்.
பெற்ற அம்மாவை விட இவனுக்கு பந்தயமும் பணமும் எப்படி முக்கியமாகப் போய்விட்டதோ அப்படித்தான் இப்போது பலருக்கும் பெற்றோரை விட மற்றவைகள்தான் முக்கியமாகப் போய்விட்டது.

மாம் ஸஅதி (ரஹ்) குலிஸ்தானில் சுவையான நிகழ்வு ஒன்றைக் குறிப்பிடுகிறார்கள்அவர்கள் மக்காவிற்கு ஹஜ்ஜு செய்ய சென்றிருந்தபொழுது அங்கு ஒரு இளைஞரை சந்தித்தார்கள்தம்பிஉங்களுக்கு எந்த ஊர்?'' அதற்கு அவன் தனது ஊரைக் குறிப்பிட்டான். ''அப்படியாநான் அந்த ஊருக்கு வந்துள்ளேனேநீ யாருடைய மகன்?''   ''நான் இன்னாருடைய மகன்'' அவன் தனது தந்தையின் பெயரைக் கூறினான். ''அடடா.. உனது தந்தை எனக்கு நண்பராயிற்றே அவர் முன்பு ஒரு தடவை ஹஜ்ஜுக்கு வந்திருந்தபொழுது நானும் வந்திருந்தேன்அவர் துஆ ஏற்றுக்கொள்ளப்படும் இடத்தில் நின்றுகொண்டு தனக்கு ஒரு ஆண் குழந்தை தந்தருளுமாறு இறைஞ்சினார்அதன்மூலம் பெறப்பட்ட குழந்தையா நீநல்லதுஉன்னைப் பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சிநீ ஊருக்குத் திரும்பியதும் எனது சலாமை உன் தந்தைக்கு தெரியப்படுத்து'' என்று கூறி அவனிடமிருந்து விடைபெற்றார்கள்சில அடிகள்தான் எடுத்து வைத்திருப்பார்கள்அதற்குள் அவன் அவர்களைக் கைதட்டிக் கூப்பிட்டு ''நீங்கள் துஆ ஏற்றுக்கொள்ளப்படும் இடம் என்று கூறினீர்களேஅது எங்கே உள்ளது?'' என்றான். ''ஏனப்பா அதைக் கேட்கிறாய்'?'' 
''என் தந்தையை இறைவன் சீக்கிரம் எடுத்துக்கொள்ளட்டும் என்று அவ்விடத்தில் நின்று நான் துஆ கேட்கப்போகிறேன்'' என்றானாம்இமாம் ஸஅதி அப்படியே ''ஷாக்'' ஆயிட்டாங்களாம்இந்த மாதிரி பிள்ளைகளாக நாம் இருக்கக்கூடாது.



ரு அரசன் அறிவித்தான்: மக்களே! நம் நாட்டில் 80, 90 வயதைத் தாண்டி நிறைய பெருசுக இருக்காங்க. அவங்களால எந்த பயனும் இல்லை. பூமிக்குப் பாரமாக இருக்காங்க. அதனால எல்லாப் பெரிசுகளையும் தூக்கிட்டுப் போய் மலை மேல் விட்டுவிட்டு வந்துடுங்க. கழுகோ நாய் நரியோ அவர்களைக் கடித்துக் குதறித் திங்கட்டும்'ணு உத்தரவிட்டார்.
நாட்டு மக்களும் அரசனுக்கு பயந்து அவ்வாறே செய்தனர்.
ஒரு வீட்டில் தாத்தாவை பேரன் தூக்கிட்டுப் போனான். அவர் கேட்டார்: ஏண்டா பேராண்டி.. உன்னையும் உங்கப்பனையும் நான் எப்படியெல்லாம் பாசத்தைக் கொட்டி வளர்த்தேன். ஈவிரக்கமில்லாமல் என்னை மலைக்குத் தூக்கிட்டுப் போறீயே''
''ராஜாவின் ஆணை.. வேற வழி தெரியல தாத்தா..''
''நம் வீட்டில் பூமிக்கடியில் தானியம் தவசம் போட்டு வைக்கிற நிலவறை இருக்கல்லவா? அதற்குள்ளே என்னை விட்டு மூடி வைத்துவிடு நான் அதற்குள்ளே பத்திரமாக இருந்துகொள்கிறேன் யாரும் கண்டு பிடிக்கமுடியாது''
பேரனும் அப்படியே செய்தான்.
ஊரில் ஒரு திருவிழா. மன்னர் ஒரு பந்தயம் வைத்தார். ஒரு பனை மரத்தில் நடுவில் நான்கு அடி நீளம் வெட்டிக்கொண்டு வந்து வைத்தார். ''இதில் அடிமரம் எது மேல்மரம் எது?ன்னு கண்டுபிடிக்கிறவங்களுக்கு ஆயிரம் வராகன் பரிசு'' அப்படின்னார்.
போட்டியில் நிறைய பேர் திணறினார்கள். பேரன் வீட்டுக்குப் போய் தாத்தாவிடம் போட்டியைப் பற்றி கூறினான் அவர் சொன்னார்: ''ஐந்து அடி நீளம் ஐந்து அடி ஆழத்தில் ஒரு தண்ணீர் தொட்டி கட்டி அதில் நிறைய தண்ணீர் விடச் சொல்லி தண்ணீருக்குள் பனைமரத்துண்டை தூக்கிப் போடச் சொல். அடிமரம் தண்ணீருக்கு அடியில் போயிடும்; மேல்மரம் மேலே தெரியும்''
பையன் மன்னரிடம் சென்று அப்படியே செய்துகாட்டினான். மன்னர் ஆச்சர்யப்பட்டு ஆயிரம் வராகன் பரிசு கொடுத்தார்.
அடுத்து ஒரு பந்தயம். ''ஆளே இல்லாமல் தானாக வாசிக்கிற ஒரு மிருதங்கம் காட்டமுடியுமா'' என்று மன்னர் கேட்டார். பையன் தாத்தாவிடம் வந்து யோசனை கேட்டான். அவர் சொன்னார்: ''மிருதங்கத்தின் ஒருபக்க தோலைப் பிரித்து எடுத்துவிட்டு உள்பக்கத்தில் ராணி தேனி ஒன்றை கூட்டுடன் கொண்டுவந்து வை. எல்லா தேனிகளும் பின்னாலேயே வந்து மிருதங்கத்திற்குள் புகுந்துவிடும். உடனே அந்த மிருதங்கத்தின் வாயைத் தோலை வைத்து மூடி ரெடி பண்ணிவிடு.''
அவர் கூறியது போல தேனிக்களை அடைத்த மிருதங்கத்தை பையன் தூக்கிச் சென்று மன்னரைப் பார்த்தான். ''மிருதங்கத்தில் சப்தம் வரவில்லையே'' என்று மன்னர் கேட்க, பையன் சின்னைக் கம்பியில் மிருதங்கத்தைக் கோர்த்து லேசாக தூக்கினான். உள்ளே இருந்த தேனீக்கள் அதிர்ச்சியில் உள்பக்கமாக தோலைக் கொட்ட ஆரம்பிக்க, ''ங்கொய்.. ங்கொய்''ன்னு சத்தம் வந்தது. எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். மன்னர் மகிழ்ச்சி அடைந்து இன்னொரு ஆயிரம் வராகன் பரிசு கொடுத்தார். ஆனாலும் அவருக்கு ஒரு சந்தேகம். ''ஏம்பா.. உனக்கு 16 வயது கூட இருக்காது. உண்மையைக் கூறு. இதெல்லாம் நீயே கண்டுபிடித்தாயா? அல்லது யாராவது சொல்லிக் கொடுத்தாங்களா?''
''மன்னா.. என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் உத்தரவை மீறி நான் ஒரு காரியம் பண்ணிட்டேன். என் தாத்தாவை நான் கொல்லவில்லை. அவரை என் வீட்டில் மறைத்து வைத்துள்ளேன். அவர்தான் இந்த யோசனைகளைக் கூறினார்''.
மன்னர் புரிந்துகொண்டார். அடடா.. பெரியவங்க கிட்ட எவ்வளவு அனுபவமெல்லாம் இருக்கு? அவங்க தங்கம் வைரத்தை விட உயர்ந்தவர்கள். ''இனிமேல் யாரும் பெரியவங்களைக் கொல்லவேண்டாம். யார் வீட்டில் பெரியவங்க இருந்தாலும் அவர்களைக் கடைசி வரையிலும் பராமரிக்கிற செலவை அரசாங்கமே எடுத்துக்கொள்ளும்'' என்று மன்னர் அறிவித்தார்.
 ரு மன்னர் தன் தந்தை அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தை தரிசிப்பதற்காக புறப்பட்டார். மக்களும் ஆசைப்பட்டு கிளம்பினார்கள். மன்னா தங்கள் தந்தை இந்த நாட்டுக்கு சேவைகள் பல செய்தவர். எங்கள் நெஞ்சை விட்டு நீங்காதவர். அதனால் அவர்களின் மண்ணறையை  தரிசிக்க நாங்களும் வருகிறோம்.'' மன்னர் சம்மதித்தார். ''ஆனால் ஒரு நபந்தனை. பயணத்தின் பாதை பாலைவனம். நெடுந்தூரம் செல்லவேண்டியுள்ளது. ஆகவே வயதானவர்கள் யாரும் வரக்கூடாது.''
மன்னருடன் இளைஞர்கள் பயணத்திற்கு ஆயத்தமானார்கள். பயணத்தின் இடையில் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு தாகத்தால் அவதிப்பட்டார்கள். எங்கு தண்ணீர் கிடைக்கும் என்று தெரியவில்லை. இந்நிலையில் ஒரு வாலிபன் இதோ இந்த திசையில் சிறிது தூரம் சென்றால் தண்ணீர் கிடைக்கும் என்றான் அந்த திசையில் சென்று பார்த்தபொழுது உண்மையாகவே தண்ணீர் கிடைத்தது. எல்லோரும் குடித்து தாகம் தணித்துக்கொண்டர்கள். மன்னன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். எங்களில் யாருக்கும் தெரியாத இந்த விஷயம் உனக்கு மட்டும் எப்படி தெரிந்தது?''என்றான். '' மன்னா.. நீங்கள் என்னை மன்னிப்பதாக இருந்தால் ஒரு உண்மையைக் கூறுகிறேன். ''
''கண்டிப்பாக உன்னை மன்னிக்கிறேன். காரணம் நீ எங்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளாய். சொல் அந்த உண்மையை.!''
''நாம் பயணம் புறப்பட்டபொழுது என்  வயதான தந்தையும் கிளம்பினார். வயதானவர்கள் வரக்கூடாது என்ற உங்கள் உத்தரவை எடுத்துக் கூறினேன். அதற்கு அவர், ‘’இல்லை. எனக்கு அங்கே வர மிகுந்த ஆர்வம் உள்ளது. நீ ஒரு உபாயம் செய். என்னை ஒரு முடிச்சுக்குள் வைத்து மறைத்து எடுத்துச் செல்''.
நான் அப்படியே அவரை எடுத்து வந்தேன். தண்ணீரின்றி நாம் அவதிப்படுகிறோம் என்று கேள்விப்பட்டு அவர் மெல்ல முடிச்சை விட்டு வெளியே எட்டிப் பர்த்தார். ஒரு வகைப் பறவைகள் இந்த திசையிலிருந்து பறந்து செல்வதைக் கண்டு ''மகனே இந்த பறவைகள் நீர்நிலைகள் இருக்கும் இடத்தில்தான் வாழும். எனவே இந்த திசையில் தண்ணீர் நிச்சயம் இருக்கும்'' என்றார் அதைத்தான் நான் உங்களிடம் கூறினேன்'' என்றான். மன்னரும் மக்களும் புரிந்துகொண்டனர். மூத்தோரின் ஆலோசனை அவசியம்.



நான் ஒரு பெரியவரிடம் கேட்டேன்: உங்களுக்கு மொத்தம் எத்தனை பிள்ளைகள்? அவர் சொன்னார்: ''எனக்கு 3 son.''
''அதுல உங்களுக்கு சோறு போடுறது எந்த சன்?'' அவர் சொன்னார்: ''பென்சன்''!
இன்னைக்கு பெத்த பிள்ளைங்க சோறு போடுறது இருக்கட்டும்.  பெற்றோர்களிடம் காசு இருந்தாத்தான் பெத்த பிள்ளைகளே மதிக்கிறாங்க.
அழகாய் ஒரு கவிஞன் கூறினான்: 
பானையிலே சோறு இருந்தா பூனைகளும் சொந்தமடா! பெட்டியிலே பணம் இல்லை.. பெத்த பிள்ளை சொந்தமில்லை.
ரு பையன் தந்தையிடம் சொன்னானாம்: 

''வாப்பா.. உன்னை என் கல்யாணத்துக்கு கூப்பிடமாட்டேன்''
''ஏண்டா கண்ணா?''
பின்னே... உன் கல்யாணத்துக்கு என்னை கூப்பிட்டியா?''

நபி (சல்) கூறினார்கள்: 'யாருக்கு பெற்றோர்களில் இருவருமோ அல்லது ஒருவரோ இருந்து (அவர்களுக்கு பணிவிடை செய்வதின் மூலம்) அவன் சொர்க்கம் நுழையவில்லையோ அவன் நாசமடையட்டும்'.
அல்லாஹ் நம் அனைவரையும் நரகை விட்டும் பாதுகாத்து சுவனத்தில் சுகமாக வாழவைப்பானாக!  

சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே! அல்லது கீழ்காணும் தளங்களில் பகிர்ந்து விட்டுச் செல்லலாமே!

5 கருத்துகள்:

  1. அசரத்!

    நல்ல விஷயங்கள்!

    தெரிந்திட முடியாத தகவல்கள்!
    மற்றும் உண்மைகள்!

    உங்களுக்கு மிக்க நன்றி!

    மேலும் நீங்க l எழுய்திடனும்
    பிரசங்கம் செய்திடணும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீரிய பதிவுகளைத் தரும் சீனி. உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  2. அடடா..
    பெற்றோரை இந்தளவுக்கு
    நம் முன்னோர்கள் மதித்துள்ளனர்
    என்பது புது தகவல்.
    இதைப் படித்தபிறகு
    பெற்றோர் மீது எனக்கு
    மிகுந்த ஈடுபாடு வந்துள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா..
      இனிமேலாவது பெத்தவங்களுக்கு
      ஒழுங்கா கஞ்சி ஊத்துப்பா.

      நீக்கு
  3. இறுதி காலத்தில் இப்படியும் மக்கள் மாறிவிடுவார்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்:
    ஒருவன் தன் நண்பனுக்கு தரும் முக்கியத்துவத்தை தன் தந்தைக்கு தரமாட்டான்; மனைவியை மெச்சுவான்; தாயை இம்சிப்பான் இப்படி பெரும்பாலோரின் மனநிலை மாறும் என்று மாநபி சொன்னது இன்று பொய்த்துப் போய்விடவில்லை.

    பதிலளிநீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...