மரணம் வென்றவர் யாருமில்லை
மரணத்தை கண்டு அஞ்சாதவர்
எவருமில்லை
மரணம் ஒரு ஓய்வு
நல்லவன் இறந்தால்
அது
அவனுக்கு கிடைக்கும்
ஓய்வாகுகிறது
கெட்டவன் இறந்தால்
அது
மற்றவருக்கு கிடைக்கும்
ஓய்வாகுகிறது
பயணி தன் பயணமுடிவிடம்
கண்டு
அஞ்சுவானா
பயணத்தின் முடிவில்
பயணிக்குக் கிடைக்கும்
ஓய்வு
சுகமானது
நம் வாழ்க்கைப் பயணமும்
மரணத்தில் முடிகிறது
உதித்தது முதல்
எங்கெங்கோ அலைந்து
திரியும் நதி
கடலை அடைந்ததும்
ஓய்வு பெறுவது போல
பிறந்தது முதல்
துன்பங்களை அனுபவிக்கும்
மனிதன்
மரணத்தில் ஓய்வு பெறுகிறான்
பலருக்கு மரணமே
துன்பங்களில் இருந்து
விடுதலை
அளிக்கிறது
மரணம் துன்பங்களில்
மட்டுமல்ல
பாவங்களில் இருந்தும்
விடுதலை அளிக்கிறது
வாழ்க்கை பாதை முழுவதும்
சாத்தான் வலை விரித்து
காத்துக் கொண்டிருக்கிறான்
வாழ்க்கை என்பதே
பாவம் செய்வதற்கான
வாய்ப்பு தானே
நல்லவர்கள் சீக்கிரம்
இறந்து போகிறார்கள்
நல்லவர்கள் பாவத்தில்
விழாமல் இருக்க
மரணம் அவர்களுக்கு
உதவுகிறது
- கவிக்கோ. அப்துல் ரகுமான்
nobody can escape from the iron hand of death
பதிலளிநீக்குit has been decided to one and all.