27 ஜூன், 2012

நடுவர் தீர்ப்பு


சரி.. இப்பொழுது 4 நண்பர்களும் அருமையாக பேசிமுடித்துவிட்டார்கள். தீர்ப்பு சொல்லவேண்டும் என்ன தீர்ப்பு சொல்வது? கல்வியும்தான் செல்வமும்தான். இரண்டுமே சிறப்புதான் என்று சொன்னால் என்னையை சும்மா விட்டுவைக்கமாட்டீங்க. ஏம்பா. இதுக்கா இத்தனை மணிநேரம் பொறுமையா உட்கார்ந்திருந்தோம் என்று பொங்கிவிடுவீர்கள். யாருப்பா இப்படி ஒரு தீர்ப்பு எழுதித் தந்தது என்று எங்கள் ஆசிரியருக்கும் திட்டு விழும். அதனால் நல்ல தீர்ப்பைத் தராமல் நழுவ முடியாது.
செல்வம் என்பதை பொதுவாகப் பார்த்தால் அதில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு உயர்வும் உண்டு தாழ்வும் உண்டு. அதை நாம் பயன்படுத்துகிற விதத்தைப் பொருத்தது. இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் அற்புதமாக சொல்வார்கள்: செல்வம் என்பது நல்ல பாம்பைப் போன்றது. அதில் நஞ்சும் உண்டு; நல்ல மருந்தும் உண்டு. அதைப் பிரித்து அறியாவிட்டால் நம்மைக் கொன்றுவிடும். அதாவது செல்வம் தானதருமங்களுக்கு பயன்பட்டால் பள்ளிகள் கட்டுவதற்கும் மதரஸா நடத்துவதற்கு மார்க்கப் போட்டிகள் நடத்துவதற்கு.. ஏழைக்குமர்களின் ஏற்றமான வாழ்விற்குப் பயன்பட்டால் அந்த செல்வம் உயர்ந்ததுதான். அதேசமயம் குடிப்பதற்கும் கூத்தடிப்பதற்கும் கும்மாளம் போடுவதற்கும் ஆடல் பாடல் நடத்துவதற்கும் செலவழித்தால் அந்த செல்வம் தரங்கெட்ட செல்வமாகும்.
அதுபோல கல்வியும் அப்படித்தான்.
கற்க கசடற கற்பவை; கற்றபின் நிற்க அதற்கு தக.
கற்ற கல்வியின்படி தானும் அமல்செய்து மற்றவரையும் அமல் செய்யவைத்தால் அது சிறந்த கல்விதான். அதே சமயம் கற்ற கல்வியை மற்றவருக்கு போதிக்காமல் மறைத்தால் அல்லது அதன்படி அமல் செய்ய மறுத்தால் அந்த கல்வி எப்படி சிறப்பானதாக இருக்க முடியும்?
கல்வியோ செல்வமோ பகட்டுக்காகவும் பெருமைக்காகவும் பயன்படுத்தப் படுமானால் அது உயர்வைத் தராது என்பது மட்டுமல்ல நரகத்திற்குத்தான் நம்மை இழுத்துச் செல்லும்
மறுமை நாளில் மூன்றுபேர் விசாரிக்கப் படுவார்கள். அதில் ஒருவர் செல்வந்தர். அல்லாஹ் கேட்பான்: உனக்கு செல்வத்தைத் தந்தேனே எனக்காக என்ன செய்தாய்?
அவர் அள்ளிவிடுவார்:
''யாஅல்லாஹ் உன்பாதையில் செலவழித்தேன். பள்ளிக்கு கொடுத்தேன்; அதுக்கு கொடுத்தேன்; இதுக்கு கொடுத்தேன்''
அல்லாஹ் கூறுவான்: இல்லை நீ பொய் சொல்கிறாய்  உன்னை கொடைவள்ளல் என்று எல்லோறும் பாராட்டுவதற்காக கொடுத்தாய் யாரங்கே இவனை நரகத்தில் தள்ளுங்கள்
அடுத்து கல்வி கற்ற ஒரு அறிஞர். உனக்கு அறிவைக் கொடுத்தேனே எனக்காக என்ன செய்தாய்''  ''யா அல்லாஹ் நான் பிறருக்கு கற்றுக் கொடுத்தேன் உபதேசம் செய்தேன் பல பேரைத் திருத்தினேன்''. ''இல்லை நீ பொய் சொல்கிறாய் ۔ உன்னை பெரிய மேதை என்று எல்லோரும் பாராட்டுவதற்காக இதை செய்தாய் யாரங்கே இவனையும் நரகத்தில் தள்ளுங்கள்''
பர்த்தீர்களா? இப்படிப்பட்ட கல்வி உயர்வானதா இப்படிப்பட்ட செல்வம் சிறந்ததா?
எந்த கல்வி கண்ணியம் கட்டுப்பாடு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கிறதோ அந்த கல்வி சிறந்தது. எந்த செல்வம் பண்பாட்டை மீறாமல் பலருக்கும் பயனாக உள்ளதோ அந்த செல்வம் உயர்ந்தது இந்த வகையில் இரண்டுமே சரிசமமாக இருந்தாலும் அல்லாஹ் கேட்கிற ஒரே கேள்வியில் கல்வி ஒரு படி மேலே உயர்ந்துவிடுகிறது. அது என்ன கேள்வி?
قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون
கற்றவர்களும் கல்வி அற்றவர்களும் சமமானவர்களா? என்று மற்றவர்களைப் பார்த்து மாமறை கேட்கிறது. எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும் அது கல்வி என்ற செல்வத்திற்கு ஒருபோதும் ஈடாகாது என்பது இறைவனின் தீர்ப்பு. அறிவின் தலைவாசல் அலி ரலி அவர்களின் தீர்ப்பும் இதுதான். அவர்களிடம் பத்து யூதர்கள் கேட்ட கேள்வி: எது சிறந்தது? கல்வியா செல்வமா/?
அதற்கு அவர்கள் கல்வியே சிறந்தது என்பதற்கு 10 காரணங்களை அடுக்கினார்கள். அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். ஆகவே உயர்ந்த வாழ்வுக்கு உறுதுணையாக இருப்பதில் செல்வத்தை விட முன்னணியில் இருக்கிறது என்று கூறி இந்த பட்டிமன்றத்தை நிறைவு செய்கிறேன்.

2 கருத்துகள்:

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

நபிமார்களின் அறிவுக் கூர்மை

   இப்ராஹீம் அலை மற்றும் இஸ்மாயீல் அலை ஆகியோரின் அறிவுக் கூர்மை : قَالَ ابْن عَبَّاس لما شب إِسْمَاعِيل تزوج امْرَأَة من جرهم فجَاء إِبْرَاه...