05 ஏப்ரல், 2012

உண்மையான மூமினின் இரண்டாவது அடையாளம்


    அல்லாஹ்வின் அத்தாட்சிகள் காண்பிக்கப்பட்டால் வசனங்கள் ஓதிக் கான்பிக்கப்பட்டால் ஈமான் அதிகரிக்கும் உள்ளத்தில் மாற்றம் உண்டாகும்
ஜைனுல் ஆபிதீன் (ரஹ்) அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் அடிமைப் பெண் பரிமாறிகொண்டிருந்தாள். கையில் வைத்திருந்த சால்னா தவறி விழுந்து அன்னாரின் ஆடையில் பட்டு அசிங்கப்படுத்திவிட்டது. அவர்களின் கோபம் அதிகரித்து முகம் சிவந்தபோது அவள் உடனே சுதாரித்துக்கொண்டு ஆயத்தை ஓதினாள் நல்லவர்கள் கோபத்தை மென்று விழுங்குவார்கள் இந்த வசனத்தைக் கேட்டவுடனே கோபம் மாறியது அடுத்த வாசகத்தை ஓதினாள் மக்களை மன்னித்துவிடுவார்கள் நான் உன்னை மன்னித்துவிட்டேன் என்றார்கள் அவள் தொடர்ந்து ஓதினாள் அல்லாஹ் உபகாரம் செய்வோரை விரும்புகிறான் அப்படியா நான் உன்னை உரிமையிட்டுவிட்டேன் என்றார்கள்.

இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) மன்னராக இருந்த சமயம் காட்டுக்கு வேட்டைக்கு சென்றிருந்தார்கள். அரன்மனையின் பணிப்பெண் அறையைப் பெருக்கி சுத்தம் செய்துவிட்டு அங்கிருடந்த மன்னரின் பஞ்சணையில் படுத்துப் பார்க்கலாமே என்று சற்றுப் படுத்தாள். அது கொடுத்த சொகுசில் சுகமாக தன்னை மறந்து தூங்கிவிட்டாள். மன்னர் வந்து பார்த்து கோபம் கொண்டு சாட்டையடி கொடுக்க உத்தரவிட்டார். அவள்சிரித்தாள். ஏன் சிரிக்கிறாய்?'' என்று கேட்டார். மன்னா. உங்களை நினைத்துத்தான் சிரிக்கிறேன் என்றாள். என்னை நினைத்தா? ஆமாம் மன்னா. ஒரு தடவை இந்த மஞ்சத்தில் படுத்ததற்காக எனக்கு சாட்டையடி என்றால் பல வருடங்களாக இதில் நீங்கள் படுத்திருக்கிறீர்களே அல்லாஹ் உங்களை எத்தனை முறை சாட்டையால் அடிப்பானோ என்று நினைத்தேன் என்றாள் இதைக் கேட்ட மன்னர் அதிர்ந்தார் உன்னை மன்னித்தேன் என்றார். சிந்திக்க ஆரம்பித்தார். இதுதான் அவர் அரண்மனை வாழ்க்கையை உள்ளத்திலிருந்து உதறுவதற்கு முதல் தூண்டுகோலாய் அமைந்தது.

ஃபுழைல் இப்னு இயாழ் ரலி ஆரம்பத்தில் ஒரு திருடர். ஒரு நாள் இரவு ஒரு வீட்டில் திருடுவதற்காக கூரையில் ஏறி கூரையைப் பிரித்து உள்ளே இறங்க முனைந்த பொழுது உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. குர்ஆன் ஓதும் குரல். அல்லாஹ்வின் நினைவால் உள்ளங்கள் நடுங்கும் நேரம் இன்னும் வரவில்லையா?'' அவ்வளவுதான் பதறினார் இறங்கி கதறினார். ஓடினார் பாவமன்னிப்பு தேடினார். அதன்பிறகு ஒரு பெரும் இறைநேசராக வாழ்ந்து மறைந்தார் என்பது வரலாறு.

மக்காவில் இஸ்லாம் பரவிக்கொண்டிருந்த ஆரம்பக் காலக் கட்டம். மக்காவுக்கு ஒரு வியாபாரி வந்தார். மக்கத்து குரைஷிகள் அவரைத் தடுத்து சொன்னார்கள்: நீங்கள் மக்காவுக்குள்ளே செல்லவேண்டாம். காரணம், அங்கே முஹம்மது என்பவர் புதிய மார்க்கத்தைப் பரப்புகிறார். அவர் ஓதுகிற குர்ஆனிய வசனங்களை நீங்கள் கேட்டால் உடனே மதம் மாறிவிடுவீர்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம்’’
அவர் மக்காவுக்குள் செல்லவில்லை. ஆனாலும் ஊருக்குத் திரும்புகிறபோது ஒருமுறையாவது கஃபாவை தவாஃப் செய்துவிட்டுச் செல்லலாமே என்று நினைத்தார். அதனாலே அவர் உள்ளே செல்லும்போது குர்ஆனின் வசனங்கள் காதுக்குள் விழுந்துவிடக்கூடாது என்று காதுகளில் பஞ்சை வைத்து அடைத்துக்கொண்டு மக்காவிற்குள் சென்றார். செல்லும் வழியில் கால் தடுக்கி தடுமாறியபொழுது காதிலிருந்த பஞ்சு கீழே விழுந்த சில வினாடிகள் நபியவர்கள் ஓதிய குர்ஆனின் வசனங்கள் அவர் காதுகளில் விழ அந்த வினாடியே உள்ளம் நடுங்கி ''சத்தியமாக இது இறைவனின் வார்த்தைகளே'' என்று கூறி இஸ்லாமைத் தழுவுகிறார்.
முஹம்மதின் தலையை தரையில் வீழ்த்தாதவரை என் வாள் உரையில் போகாது'' என்று வீரமுழக்கம் செய்து புறப்படுகிறார்கள் உமர்.
ஒரு மந்திர மாற்றம் நடக்கிறது. அவர்களின் சகோதரி ஓதிய ஒரு வசனத்தைக் கேட்டதின் விளைவால் அந்த மாற்றம் ஏற்பட்டு நபியிடம் சென்று கலிமா சொல்லி நபியின் பெரும் ஆதரவாளராக திரும்புகிறார்கள். 
மாநபி (சல்) மறைந்துவிட்ட செய்தி அறிந்து மதீனமாநகரமே அல்லோல கல்லோலப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த நேரம் அதிர்ச்சி தாங்க முடியாமல் மயக்கமாகி விழுந்தவர்கள் பலர். பைத்தியமாகி பரிதவித்தவர் பலர்;
ஏன்.. மதம் மாறி மீண்டும் பழைய மதத்திற்கே ஓடியவரும் உண்டு. உமர் (ரலி) கையில் வாளை உயர்த்திப் பிடித்துக்கொண்டு நபி இறந்துவிட்டதாக யாராவது சொன்னால் தலை இருக்காது என்று உணர்ச்சியின் உச்சியில் இருந்த உச்சக்கட்டமான நேரம் அது. யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? யார் யாரைத் தேற்றுவது? என்று யாருக்குமே புரிபடாத சூழலில் ஒரே ஒரு வசனம் அபூபக்கர் (ரலி) அவர்களால் ஓதிக்காண்பிக்கப்பட்ட மறுவிநாடி உமரின் கையில் ஓங்கிப் பிடித்திருந்த வாள் தானாகவே கீழே விழுந்தது; துயரத்தின் உச்சத்தில் இருந்த மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினார்கள். அல்லோலகல்லோலப்பட்ட மதீனா அமைதியானது; பல உயிர்கள் பலியாவதிலிருந்து தடுக்கப்பட்டது

உமர்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் மஹர்த் தொகை அளவுகடந்து போனதால் பல ஏழைத் தோழர்கள் மஹர் கொடுக்கமுடியாமல் திணறியபொழுது, ஜனாதிபதி அவர்கள் மஹருக்கான ஒரு வரம்பை நிர்ணயித்து அறிவித்தார்கள். சபையில் இருந்த ஒரு பெண் இதை ஆட்சேபித்தார். பெண்களுக்கான மஹரை குவியல் குவியலாக கொடுக்க அல்லாஹ் கூறியிருக்கும்போது அதற்கு அளவு நிர்ணயம் செய்யலாமா?'' இந்த வசனத்தைக் கேட்ட மாத்திரத்தில் நல்லவேளை தக்க சமயத்தில் இந்த வசனத்தை நினைவூட்டினீர். இல்லையெனில் இந்த உமர் நாசமாகியிருப்பேன்'' என்று தன் சட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டார்கள். பொதுவாக அருமைத் தோழர்கள் எல்லோருமே இப்படித்தான். அவர்கள் எந்நிலையிலிருந்தாலும் கோபத்தின் கொந்தளிப்பிலிருந்தாலும் உணர்ச்சியின் உச்சியிலிருந்தாலும் பாசத்தின் பரிதவிப்பிலிருந்தாலும் வெறுப்பின் வேதனையிலிருந்தாலும் குர்ஆனின் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களின் உள்ளங்களில் பெரும் மாற்றமும் ஈமானில் பிரகாசமும் உண்டானதை வரலாற்று நெடுகிலும் பார்க்கிறோம்.

 
சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இட்டுச் செல்லலாமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...