மனித முயற்சியில் ஆகாதது ஒன்றுமில்லை என்பார்கள். டாக்டராக இஞ்சீனியராக ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆகலாம். ஏன் சந்திரனில்கூட கால்தடம் பதிக்கலாம். ஆனால் மனித முயற்சியால் முடியாத ஒன்று உள்ளதென்றால் அது நபியாகுவது. ஏனெனில் நபிமார்களை அல்லாஹ் தேர்ந்தெடுக்கிறான். 124000 நபிமார்களைத் தேர்ந்தெடுத்து அதில் சிறந்த உயர்ந்த நபியாக உத்தமத் திருநபியை உலகிற்குத் தந்திருக்கிறான்.
எல்லா நபிமார்களையும் பிறந்ததற்கு பிறகு புகழ்ந்துப் போற்றுகின்ற அல்லாஹ் முத்தான முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களை மட்டும் பிறப்பதற்கு முன்பே போற்றியிருக்கிறான்.
ஈசா நபியைப் பிறந்ததற்கு பிறகு போற்றுகிறான்۔ அவர்களின் அன்னையை ஊரார் தூற்றியபோது அன்னையின் பரிசுத்த தன்மையை நிரூபிக்கும் வகையில் அவர்கள் தொட்டிலில் பேசியதை அற்புதமாக குறிப்பிடுகிறான்:
قال اني عبد الله آتاني الكتاب وجعلني نبيا
மூசா நபியை பிறந்ததற்கு பிறகு போற்றுகிறான்۔ அவர்களின் அன்னை அந்த குழந்தையை ஒரு மரப் பேழையில் வைத்து நைல் நதியில் விட்டபோது அதைப் பத்திரமாகப் பாதுகாத்து கரைசேர்த்த அற்புதத்தைச் சொல்லி புளகாங்கிதம் அடைகிறான்۔நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களை மட்டும் பிறப்பதற்கு முன்பே போற்றியிருக்கிறான்۔ நம்மை உலகில் உருவாக்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன் அனைத்து உயிர்களையும் ஆலமுல் அர்வாஹில் ஒன்றுகூட்டி அதிலும் குறிப்பாக நபிமார்களின் உயிர்களிடம் இறைவன் ஒரு ஒப்பந்தம் செய்தான்:
واذ اخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتومنن به ولتنصرنه۔۔۔(3:81)
பின்னால் ஒரு நபி வருவார். அவரை நீங்கள் நம்பவேண்டும்; அவருக்கு உதவியாக இருக்கவேண்டும்; என்று கேட்டதோடு மட்டுமின்றி இதில் நீங்கள் கையெழுத்திடுகிறீர்களா?என்றான். அனைவரும் இதை ஆமோதிக்கிறோம் என்றனர். அப்படியா இதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் நானும் உங்களுடன் சாட்சியாக இருக்கிறேன்.இதை மிஃராஜ் இரவில் நடத்திக்காட்டினான். பைத்துல் முகத்தஸில் அனைத்து நபிமார்களும் கூடியிருக்க ஜிப்ரீல் அலை பாங்கு சொல்ல அதில் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொன்னபோது அனைவரும் அதை ஆமோதித்தனர்.
- ஆதம் நபி முதல் அனைத்து நபிமாருக்கும் நமது நபியின் வருகை குறித்து அல்லாஹ் முன்னறிவிப்பு செய்திருக்கிறான்.
ஆதம் அலைஹிஸ் ஸலாம் : தன் தவறுக்கு வருந்தி பல வருடம் அழுதுகொண்டிருக்கும்பொழுது ஒருநாள் நினைவு வந்தது சொர்கத்தின் வாசலில் அல்லாஹ்வின் பெயெரோடு இன்னொரு பெயரையும் பார்த்தோமே அந்த முஹம்மதின் பொருட்டால் பாவமன்னிப்பு கேட்டால் என்ன? உடனே அவ்வாறு கேட்டார்கள்.
அல்லாஹ் வினவினான்:'' இதுவரை வராத அந்த முஹம்மதை உமக்கு எப்படி தெரியும்?''
''யா அல்லாஹ்..உன் பெயருடன் அவரின் பெயரை இணைத்திருக்கிறாயென்றால் நிச்சயம் உனக்கு நெருக்கமானவராக பிரியமானவராகத்தான் இருக்கவேண்டும்' என்று புரிந்துகொண்டேன்.'' ''ஆமாம், ஆதமே! அவர் அவர் இருதியாக வரவிருக்கும் இறைத்தூதர். அவர் பொருட்டால் உம்மை மன்னித்தேன்'' என்றான்.
நூஹ் அலை:
950 வருடம் பிரச்சாரம் செய்தும் 80 பேரைத் தவிர யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பிரச்சாரத்தின்போது அந்த மக்கள் நூஹ் நபியை நோக்கி கல் வீசி தொல்லை கொடுத்தனர்.'' யா அல்லாஹ்! எனது பணி தொய்வின்றித் தொடரவேண்டும். எனது சொல் மக்களைத் தொடவேண்டும்; ஆனால் அவர்களின் கல் என்னைத் தொடக்கூடாது. ஆகவே என்னை அவர்களின் கண்களை விட்டும் மறைத்துவிடு''
அல்லாஹ் ஏற்றுக்கொண்டான். அன்றிலிருந்து அவர்கள் பிரச்சாரம் செய்தால் குரல் கேட்கும்; ஆள் தெரியாது. அப்படியும் அவர்கள் விடவில்லை. குரல் கேட்ட திசையை நோக்கி கல் வீசினர். மனம் நொந்த நபி அல்லாஹ்விடம் அழுதனர்:
رب لا تذر علي الارض من الكافرين ديارا
''இறைவா! காஃபிர்களில் யாரையும் பூமியில் விட்டுவைக்காதே''அல்லாஹ் அதை ஏற்று சுனாமியை அனுப்பி காஃபிர்கள் அனைவரையும் அழித்தான். விசுவாசிகள் மட்டும் கப்பலில் காப்பாற்றப்பட்டனர். அதன் பிறகு அல்லாஹ் கூறினான்: நூஹே! களிமண் கொண்டு மண்பாண்டங்கள் செய்வீராக! பல நாள் பாடுபட்டு பல மண்பாண்டங்கள் செய்தார்கள்.'' நூஹே! இப்பொழுது நீரே அவற்றை உம் கையால் உடைத்துவிடுவீராக''.
''யா அல்லாஹ்.. என்ன இது? எத்தனை நாட்கள் ஈடுபட்டு எவ்வளவு பாடுபட்டு இவற்றை உருவாக்கினேன். அவற்றை எனது கையினாலே அழிக்குமாறு கூறுகிறாயே?''
''நூஹே! இந்த மக்களை எவ்வளவு பாடுபட்டு படைத்தேன். அத்தனைபேரையும் அழிக்குமாறு இறைஞ்சிவிட்டீரே? நூஹே! பின்னால் ஒரு நபி வருவார். அவரது மக்களும் அவருக்கு எத்தனையோ தொல்லைகள் தருவர். ஆனாலும் ஒரு தடவைகூட அவர் 'யா அல்லாஹ் இந்த மக்களை அழித்துவிடு' என்று இறைஞ்சமாட்டார்.' இந்த மக்களை மன்னித்துவிடு; இவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இவர்களின் சந்ததிகளாவது ஏற்றுக்கொள்வர்' என்றுதான் கூறுவார்.''
நமது நபி வருவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவர்களின் வருகை குறித்து நூஹ் அலைஹிஸ் சலாமுக்கு அல்லாஹ் அறிவித்துவிட்டான்.
இப்ராஹீம் அலை:
நமது நபி வருவதற்கு சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பே இப்ராஹீம்( அலை) இப்படி துஆ செய்தார்கள்:
ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك۔۔۔۔
எப்படிப்பட்ட இப்ராஹீம் நபி தெரியுமா?அல்லாஹ் அவர்களுக்கு வைத்த அனைத்து சோதனைகளிலும் பரீட்சைகளிலும் 100/100 மார்க் வாங்கியவர்கள். அவர்கள் கூறுகிறார்கள்: யா அல்லாஹ் நான் போதாது; என்னைவிட சிறந்த நபியை இறுதி காலத்தில் அனுப்பு.
மூசா அலை:
மூசா (அலை) ஒருமுறை இறைஞ்சினார்கள்: யா அல்லாஹ்! மஃது இப்னு அத்னான் என்ற கிளையாரில் நாற்பது பேர் இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் அழித்துவிடு''
''மூசா! நபிமாரின் துஆவை நான் ஏற்பது வழக்கம்தான். ஆனால் உமது இந்த வேண்டுகோளை மட்டும் நான் ஏற்பதாக இல்லை. ஏனெனில் அந்த கிளையாரிலிருந்துதான் எனது ஹபீப் (ஸல்) பிறக்கப் போகிறார். மூஸா! உமக்கு எதைப் பிரியப்படுவீரோ அதை எனது ஹபீபுக்கும் விரும்புவீராக! ஏனெனில் அவரது உம்மத்தின் சிபாரிசுகொண்டுதான் உமது உம்மத் சொர்க்கம் நுழையும்.''
''யா அல்லாஹ்! அப்படியானால் இந்த கலீமுக்கும் (அல்லாஹ்விடம் வசனித்தவர்) அந்த ஹபீபுக்கும் என்னதான் வித்தியாசம்?''
''மூசா! தூர்சினாய் மலையிலே நின்று அல்லாஹ்வின் பேரொளியைப் பார்க்க ஆவலாய்க் காத்துக் கிடந்து கடைசியில் காணமுடியாமல் எழுபதாயிரம் திரைகளுக்கப்பாலிலிருந்தும் பார்க்கமுடியாமல்(فخر موسي صعقا) மயங்கி விழுந்தவர்தான் இந்த கலீம்.
ஹபீப் என்றால் யார் தெரியுமா? தூங்கிக் கிடந்த தூதுவரை துயிலெழுப்பி ஏழு வானம் வரை உபசரிப்போடு அழைத்து வந்து நேருக்கு நேராய் சந்தித்து உரையாடி மகிழ்ந்தவர்தான் அந்த ஹபீப்'' என்று அல்லாஹ் விளக்கம் சொன்னான். அதனால்தான் மூசா அலை இந்த உம்மத்தில் பிறக்கவேண்டுமென்று ஆசைப்பட்டனர்.
''எனக்குப் பின்னால் ஒரு தூதர் வருவார். அவரது பெயர் அஹ்மது.''
ஒரு முக்கியமான விஷயம். மற்ற நபிமார்களுக்கு பிறக்கும் முன்பும் பின்பும் மறுமையிலும் ஒரே பெயர்தான். ஆனால் நமது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் மூன்று நிலைகளிலும் வெவ்வேறு சிறப்பு பெயர்கள். மூசா.. பிறக்கும் முன்பும் மூசாதான்; பின்பும் மூசாதான்; மறுமையிலும் மூசாதான். அதேபோல எல்லா நபிமார்களும்.. ஆனால் நமது நபி பிறக்கும் முன்பு அஹ்மது. பிறந்த பின்பு முஹம்மது. மறுமையில் மஹ்மூது. இது ஏன்?
தோழர்கள் கேட்டனர்: யாரசூலல்லாஹ்! நீங்கள் எப்படி அஹ்மது (அதிகம் புகழக்கூடியவர்) ஆவீர்கள்? உங்களுக்கு முன் வழ்ந்த சமுதாயம் 1000, 500 வருடங்கள் வாழ்ந்து அதிகம் இறைவனைப் புகழ்ந்திருக்கலாம். நாமோ 60 -70 க்கும் இடைப்பட்ட வாழ்க்கை. நாம் எப்படி அதிகம் அதிகம் இறைவனைப் புகழ்ந்தவர்களாக ஆகமுடியும்? ''அல்லாஹ் எனக்கு சில வார்த்தைகளைக் கற்றுத் தந்திருக்கிறான். அவற்றை ஓதினால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஓதியதற்கு சமம்'' என்றார்கள்.
இதற்கு உதாரணமாக ஒரு நிகழ்ச்சி. நபியவர்கள் ஒரு நாள் சுப்ஹுக்கு செல்லும்போது அன்னை ஜூவைரிய்யா (ரலி) தஸ்பீஹ் ஓதிக்கொண்டிருந்தார்கள். நபியவர்கள் மதிய வேளையில் வீடு திரும்பியபொழுது அன்னை அதே இடத்தில் அமர்ந்து ஓதிக்கொண்டிருந்தனர். நபி கூறினார்கள்: நீ இத்தனை மணி நேரம் ஓதினாலும் நான் மூன்றுமுறை ஓதிய கலிமாக்களின் நன்மைக்கு அது ஈடாகாது. அவை :
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ (ابوداود)
நாம் இதேபோலத்தான் விரும்புகிறோம். திக்ரு சின்னதாக இருக்கவேண்டும், நனமை அதிகமாக கிடைக்கவேண்டும். அதற்கு நபி எத்தனையோ திக்ருகளை கற்றுத்தந்திருக்கிறார்கள். உதாரணமாக:
'' இரண்டு வார்த்தைகள் உள்ளன. சொல்வதற்கு சுலபமானது; ரஹ்மானுக்கு விருப்பமானது; மீசானில் எடை கனமானது. அவை: சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அளீம்.''இதையெல்லாம் விட்டுவிட்டு நம் தாய்மார்கள் என்னென்னமோ ஓதுறாங்க. சேலத்துல ஒரு பெண்ணின் தகவலை அவரோட கணவர் சொன்னார்:
அஜரத்.. என் மனைவி ஒரு திக்ரு ஓதுறாங்க. நாலே வார்த்தைதான். ஆனால் நானூறு நன்மையாம்.''
''அப்படியா?''
''ஆமா அஜரத்.. ஞாயிறுதோறும் என் மனைவி வீட்டின் சுவற்றில் ஒரு ஆணி அறைந்து அதில் தஸ்பீஹ் மணியைக் கொழுவிவிடுவாள். அதன் பிறகு அந்த திக்ரை சொல்வாள். உடனே ஃபாத்துமா நாச்சியார் மேல இருந்து இறங்கிவந்து(?) அதில் உட்கார்ந்துக்குவாங்களாம்.''
''என்னது? பாத்துமா நாச்சியாரையே கொண்டுவாற திக்ரா? அப்படி என்ன திக்ருய்யா? கொஞ்சம் சொல்லேன்.''
''அல்லாஹும்ம சல்லி நூறு.. சலவாத்து நூறு.. சொல்லி நூறு.. சொல்லாம நூறு.
இந்த மாதிரி இல்லாமல் நல்ல தரமான வார்த்தைகளால் அல்லாஹ்வை அதிகம் புகழ்ந்தார்கள் நபி. அதனால் அவர்கள் அஹ்மது.
ஏந்தல் நபி குறித்து இந்து வேதங்கள்:
ஏதஸ்ஸ மின்னந்தரே மிலேச்ச ஆச்சார்யண ஸமன்வித மஹாமத் இதுக்கியாத சிஷ்ய சாகா சமன்வித...ஓர் அன்னிய நாட்டில் ஓர் சீர்த்திருத்தவாதி தன் சீடர்களுடன் வருவார். அவர் பெயர் மஹாமத். அவர் பாலைவனத்தைச் சார்ந்தவராக இருப்பார். (பவிஷ்ய புராணம்: பாகம் 3, சூத்திரம் 3, சுலோகம் 5-8)
அந்த சீர்திருத்தவாதி மற்றும் அவரைப் பின்பற்றுவோரின் தன்மை குறித்து இவ்வாறு உள்ளது:
லிங்க சேதி சிகா ஹீன சமச்சுருதாரி சதா ஷக உச்சலாபி ஸாவ பட்ஷீ பவிஷ்யதி ஜனோமம...அவர்கள் லிங்க சேதம் சுன்னத் செய்திருப்பார்கள்; தலையில் குடுமி இருக்காது; தாடி வைத்திருப்பார்கள்; சப்தம் போட்டு (பாங்கு சொல்லி) அழைப்பார்கள். முஸ்லிம் என்று அறியப்படுவார்கள். (பவிஷ்ய புராணம்: பாகம் 3, சூத்திரம் 3, சுலோகம் 25)
பைபிளில் பெருமானார்:
ஏசுனாதர் தன் சீடர்களுக்கு சொன்னதாக பைபிளில் (யோவான் அதிகாரம் 16 வசனம் 7-13 வரை) வந்துள்ளது:
''நான் உங்களுக்கு சொல்வது உண்மை. நான் போவதே உங்களுக்கு நல்லது. போகாவிடில் தேற்றரவாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால்தான் அவரை உங்களிடம் அனுப்புவேன்..''.
''நான் உங்களுக்கு சொல்லவேண்டியவை இன்னும் பல உண்டு.ஆனால் அவற்றை உங்களால் தாங்க முடியாது. உண்மையின் ஆவியானவர் வந்தபின் உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் பேசுவதை தாமாக பேசுவதில்லை; கேட்பதையே பேசுவார். வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.''பைபிளின் இந்த வசனத்திலுள்ள கருத்து குர்ஆனுடனும் ஒத்துப்போகிறது.
وما ينطق عن الهوٰي ان هو الا وحي يوحٰي
'' அவர் தன் மனோ இச்சைப்படி பேசவில்லை; எது அவருக்கு வஹியாக அறிவிக்கப்படுகிறதோ அதையே பேசுகிறார்''மூஸா (அலை) கூறியதாக ஒரு வசனம் பைபிளில் உண்டு. (உபாகமம் 18 அதிகாரம் 18 வசனம் 15):
''உன் தேவனாகிய கர்த்தர் உன் மக்களில் நின்றும் என்னைப்போல் ஒரு தீர்க்கதரிசியை உனக்காக ஏற்படுத்துவார். அவருக்கு செவிமடுப்பாயாக''
இவ்வாறு தங்களின் வேதங்களில் முன்னறிவிப்பு செய்யப்பட்டிருப்பதை வேதக்காரர்கள் நன்கு அறிவார்கள்
الذين آتينهم الكتاب يعرفونه كما يعرفون ابنائهم
''ஒரு தந்தை தன் பிள்ளையை நன்கு அறிவதைப்போல வேதக்காரர்கள் நபியை நன்கு அறிவார்கள்.''இது உண்மைதானா? இதுவரை எத்தனை வேதக்காரர்கள் நபிக்கு சான்று பகர்ந்திருக்கின்றனர்? இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் பார்க்கலாம்
Alhamdulillah
பதிலளிநீக்குjazakallah moulana,
நீக்கு