16 நவம்பர், 2011

வரதட்சனை ஒரு தொற்றுநோய்




நோக்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் ஏக இறைவனின் எழில் நாமம் போற்றி என்னுரையைத் துவங்குகிறேன்.
 என்னருமை சமுதாயமே!
 திருமணத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளை வழங்க வேண்டிய கட்டாய மணக்கொடைதான் மஹர் என்பது. 
அவசியம் பேண வேண்டிய இந்த அன்பளிப்பு இன்று வெறுமனே சடங்காக்கப்பட்டு  சந்தி சிரிக்கிறது


பெண் வீட்டிலிருந்து ரகசியமாக பல லட்சங்களை வாங்கிக் கொண்டு வெளிப்படையில் வெறும் 1001, 501 மட்டும் மஹராக கொடுக்கிறார்கள். வாங்கும் வரதட்சனையை வக்கனையாக வைத்துக்கொண்டு கொடுக்கும் மஹரை மட்டும் நிக்காஹ் பதிவேட்டில் பதிவுசெய்து அதை ஒலிபெருக்கியிலும் பெருமையோடு பீற்றிக் கொள்வார்கள். இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை
அருமையானவர்களே! அல்லாஹ் அருள்மறையிலே அள்ளித் தருகிறான் ; மஹரைப் பற்றி சொல்லித் தருகிறான் :
 4:4 And give women their dowries as a free gift, but if they of themselves be pleased to give up to you a portion of it, then eat it with enjoyment and with wholesome result.

''ஆண்களே! மணப்பெண்ணுக்கு மனமுவந்து மஹர்த் தொகையை அள்ளிக் கொடுங்கள்'' 
         என்று அல்லாஹ் சொல்லியிருக்க ,  இன்று என்ன நடக்கிறது ?
'மஹர் கொடுத்து மணம் புரியுங்கள்' என்ற மறைமொழி இன்று வரதட்சனை வாங்கி வாழ்க்கை நடத்துங்கள் என்று மாறிவிட்டது .
வனப்பும் வாஞ்சையும் மிக்க எத்தனையோ மாப்பிள்ளைகள் பணத்திற்கும் பவுனுக்கும் ஆசைப்பட்டு பண்பற்ற பெண்களை மனைவியாகப் பெற்று அடிமைத் தனத்தில் ஆட்பட்டுஅல்லல் படுகின்ற அவல நிலையை அன்றாடம் பார்க்கின்றோம்.

இதுபோல அறிவும் அழகும் பண்பும் பரிவும் மிக்க எத்தனையோ பெண் குமர்கள் பதவி' பட்டம், செல்வம், செல்வாக்கு இவைகளுக்கு ஆசைப்பட்டு இதயமற்ற மூர்க்கர்களை கனவர்களாக அடைந்து சிறைக்கைதிகளாக சிக்குண்டு தவிக்கும் சீரழிவையும் பார்க்கிறோம். 
இளைஞன் ஒருவன் கைக்கூலி வாங்கி கல்யாணம் செய்து கொள்கிறான் என்றால் கல்யாணச் சந்தையிலே தன்மானத்தை விலை பேசிவிட்டான் என்றுதானே அர்த்தம்?  யாசிப்பதே இழிகுணம் அதிலும் மாமியார் வீட்டில் யாசிப்பது மிக மோசமான அற்பக் குணம் அல்லவா

நொண்டி மூக்கரை கூண் குருடு போன்ற உடல் ஊனமுற்றவர்கள் யாசகம் கேட்பதில் நியாயம் உண்டு. ஆனால் நான் ஒரு ஆண்மகன் ; எனக்கு பெண்ணும் வேண்டும் பொன்னும்வேண்டும்  என்று கேட்பது பகற்கொள்ளை அல்லவா?
கொடுக்கும் கரம் உயர்ந்த கரம் ; வாங்கும் கரம் தாழ்ந்த கரம் என்பது நபிமொழி. நீங்கள் ஒருபெண்ணிடம் கைநீட்டி வாங்கி விட்டபிறகு அவள் உங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

என்னருமை வாலிப சமுதாயமே!
நீங்கள் கேட்கும் வரதட்சனையால் வாழ வழியின்றி வாடி வதங்கும் ஏழைக் குமர்கள் எத்தனை தெரியுமா?
தீக்குளித்து மடிகின்ற மங்கையர் எத்தனை தெரியுமா?
தாலிக்கயிறு ஏறவேண்டிய எத்தனையோ கழுத்துகளில் தூக்குக் கயிறு ஏறுகிறதே.. என்ன சொல்லப் போகிறீர்கள்

ஒரு பத்து நிமிட சுகத்திற்காக பரத்தை விபச்சாரியிடம் பல லட்சம் கொடுக்கும் மனிதன் ஊர் மெச்சிய பச்சைக் கிளியிடம் பிச்சை வாங்குவது முறைதானா?

உழைத்து கழைத்து வரும் கணவனை அன்போடு அழைத்து அன்பைக் குழைத்து ஊட்டி ஆறுதல் தரும் மனைவியாக
வாய்க்கு ருசியாய் வகைவகையாய் சமைத்துப் போடும் சமையல்காரியாக ' தூசி படிந்த துணிகளை எல்லாம் துவைத்து தூய்மையாக்கும் வண்ணாத்தியாக 'உங்கள் சுகதுக்கங்களில் பங்கெடுக்கின்ற பாசமான தோழியாக '
இப்படி எல்லா வகையிலும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் உத்தமியிடம் கைநீட்டி காசுவாங்குகிறீர்களே...
இது உங்கள் மனசாட்சியைப் பிடித்து உலுக்கவில்லையா?

பெண்களுக்கு அனைத்து உரிமைகளையும் முறையோடு வழங்கி பெண்ணினத்தை பெருமைப் படுத்திய பெருமானார் (ஸல்) அவர்களின் வழிமுறையில் வந்த வாலிப சமுதாயமே!                                                                         நீதானா கன்னியரின்  கண்ணீருக்கு  காரணமாகி விட்டாய்?

 திருமணத்திற்கு வழியின்றி திணறிக் கொண்டிருக்கும் ஏழைக் குமர்களின் ஏக்கப் பெருமூச்சுக்கு என்ன பதில் சொல்லப் போகிறாய்?
                    அந்தோ பரிதாபம்! 
சத்திய சீலர்களான  நம்  சமுதாயத்தில்  இந்த  மூர்க்கத்தனமான  பழக்கங்கள் முடிவுக்கு வருவது  எப்போது?

தீனை மறந்து  தீனிக்கு வித்திடும்  தீய பழக்கங்கள்  தீர்வது  எப்போது
ஊரான் பணத்திலே உணவுவகை சமைத்து உறவினர்களை அழைத்து   உண்டு களிக்கும் உணர்விழந்த செயல்கள் உறங்குவது எப்போது?

ஆயிரம் சொன்னாலும் அரைக்காசு குறைக்கமாட்டேன் ; அத்தனையும் மொத்தமாக வேண்டும் என்று பெண் வீட்டில் பேரம் பேசும் பேதமைகள் நீங்குவது எப்போது?
வஞ்சியரை வாட்டி வதைக்கும் வரதட்சனை எனும்                    தொற்றுநோய் இத்தோடு தொலைந்து போகட்டும்.!
கரைசேர முடியாமல் கதறியழும் கன்னியரின் கண்ணீரில் அவை கரைந்து போகட்டும்.!
கண்மூடிப் பழக்கங்களெல்லாம் இன்றோடு மண்மூடிப் போகட்டும்.! 
 வல்லவன் அல்லாஹ் அதற்கு வழிவகை செய்யட்டும்.! ஆமீன்.
(இது ஒப்பிலானைத் தொடர்ந்து நரிப்பையூரிலும் அரங்கேற்றப்பட்டது.)

சில கவிதை வரிகள்
விபச்சாரத்தை விட கொடிது வரதட்சணை,
பெண் ஜென்மத்தை ஆட்டி வைக்கும் பிரச்சினை.
மாட்டுச் சந்தையிலும் நடக்காத கொடுரம்,
மணப்பந்தலில் நடத்தப்படும் அவலம்.---
http://www.koodal.com/

2 கருத்துகள்:

  1. kavithayaai sonna karuthukkal bale bale...enge ungal arumayana puthiya katturaikalai ippothu kaana mudivathillaye..neengal velli medaikku kidaitha asaa.vaaram muluvathu oyvaka irunthalum vellimedaiyil kandippaka midukkudan kaatchi alikka vendum kaatchi alippeerakala...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்ஷா அல்லாஹ்
      விரைவில் ....

      துஆ செய்யுங்கள் !

      நீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...