இஸ்லாமிய பார்வையில் காப்பீடு, கடன், சீட்டு
மௌலவி அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் A. சதக்கத்துல்லாஹ் மஸ்லஹி ஃபாஜில் காசிமி
இமாம், ஜாமியா பள்ளிவாசல், தூத்துக்குடி.
—------------
✨ அறிமுகம்
التأمين: هو عقدٌ يلتزم فيه المؤمِّنُ بدفع مبلغٍ معين للمؤمَّن له عند وقوع خطرٍ مخصوص، مقابلَ مبلغٍ دوريٍّ يدفعه المؤمَّنُ له
காப்பீடு (Insurance) என்பது, ஒரு நபர் (பாலிசிதாரர்) மற்றும் காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான சட்ட ஒப்பந்தமாகும்; பாலிசிதாரர் ஒரு குறிப்பிட்ட பிரீமியத்தைச் செலுத்துவதற்கு ஈடாக, எதிர்பாராத விபத்து, நோய், பொருள் இழப்பு போன்ற நிகழ்வுகளின் போது காப்பீட்டு நிறுவனம் குறிப்பிட்ட தொகை அளிப்பதாகும்.
இன்சூரன்ஸ் என்பது நவீன காலச் சட்டம் என்பதினால் கூடும் என்றோ கூடாது என்றோ குர்ஆன் மற்றும் ஹதீஸில் நேரடியான வார்த்தைகள் இல்லை.
எனவே இன்சூரன்ஸில் இருக்கின்ற பொதுவான அம்சங்கள் என்ன என்பதை கண்டறிந்து அதை குர்ஆன், ஹதீஸ் இஜ்மாஃ, கியாஸ் மூலம் ஆய்வு செய்யலாம்.
دار الإفتاء المصرية (எகிப்து ஃபத்வா மன்றம்) தரும் மார்க்கத் தீர்ப்பு :
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ﴾ المائدة: 2
“நன்மை மற்றும் இறையச்சத்தில் ஒருவருக்கொருவர் உதவுங்கள்;
பாவத்திலும் பகைமையிலும் உதவாதீர்கள்.”
(அல் குர்ஆன் -மாயிதா: 2)
«مَثَلُ الْمُؤْمِنِينَ فِي تَوَادِّهِمْ وَتَرَاحُمِهِمْ وَتَعَاطُفِهِمْ مَثَلُ الْجَسَدِ إِذَا اشْتَكَى مِنْهُ عُضْوٌ تَدَاعَى لَهُ سَائِرُ الْجَسَدِ بِالسَّهَرِ وَالْحُمَّى» رواه مسلم
நபி ﷺ கூறினார்கள்:
“முமின்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பதிலும் , இரக்கம் காட்டுவதிலும் , பரிவு கொள்வதிலும்
ஒரே உடல் போலாகும். அதில் ஒரு அங்கம் வலித்தால் மற்ற அங்கங்களும்
துயரமும் காய்ச்சலும் கொண்டு அதற்குப் பங்கெடுக்கும்.”
(முஸ்லிம்)
இதுபோன்ற பல ஆதாரங்கள் ஒத்துழைப்பு மற்றும் உபகாரத்தை ஊக்குவிக்கின்றன.
எனவே இன்சூரன்ஸில் நல்ல அம்சங்கள் மட்டும் இருந்து, மார்க்கம் தடுத்த - மனிதனுக்கு நஷ்டம் விளைவிக்கின்ற அம்சங்கள் இல்லையென்றால் ஆகும். மார்க்கம் தடுத்த வட்டி, சூது, போன்றவை இருந்தால் (ஹராம்) கூடாது. இதை எவ்வாறு கண்டறிவது?
இன்ஷூரன்ஸ் — மூன்று வகைகள்
1 . கூட்டுறவுக் காப்பீடு Mutual / Cooperative Insurance (تأمين التكافل/ التعاون )
சில நபர்கள் அல்லது சங்கங்கள் இணைந்து நன்கொடை அடிப்படையில் உறுப்பினர்களிடமிருந்து நிதி திரட்டி சேமிப்பார்கள். யாருக்கேனும் இழப்பு ஏற்பட்டால் அதிலிருந்து நிதியுதவி வழங்குவார்கள்.
இங்கு லாப நோக்கம் இல்லை; வட்டி,சூதாட்டம் இல்லை
உறுப்பினர்கள் அனைவரும் நிதியில் பங்களிக்கிறார்கள்
தேவைப்படுபவருக்கு அந்நிதியிலிருந்து உதவி கிடைக்கிறது
பெரும்பாலான உலமாக்கள் கூறுவது: இது ஹலால்.
والنوع الأول من عقود التبرعات، فلا يقصد المشتركون فيه الربح من ورائه، ولكن يقصد منه المواساة والإرفاق، وهو من قبيل التعاون على البر، وهذا النوع جائز، وقليل من يفعله. (قرار المجمع الفقهي – الفتوي ٤٧٢)
2. சமூக பாதுகாப்பு நலத் திட்டம் Government Social Scheme (التأمين الاجتماعي)
சமூக பாதுகாப்பு இன்ஷூரன்ஸ் என்பது தொழில் அல்லது வேலை செய்து வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பணியாளர்களை எதிர்பாராத அபாயங்களிலிருந்து காக்கும் வகையில் அரசு நடத்தும் சமூக பாதுகாப்பு திட்டம். உதாரணமாக, அரசு சுகாதார காப்பீடு, பென்ஷன் திட்டம், முதல்வர் மருத்துவக் காப்பீடு, பிரதமர் மருத்துவக் காப்பீடு, தொழிலாளி விபத்து நிவாரணம், ESI / PF போன்றவை.
இதுவும் அனுமதிக்கப்பட்ட காப்பீடுதான். ஏனெனில் இது ஓர் அரசு தன் குடிமக்களுக்கு வழங்கும் உரிமைகள் மற்றும் சலுகைகள். இதில் வட்டி, சூது இல்லை.
3. வணிகக் காப்பீடு - Commercial Insurance (التأمين التجاري)
இதில் பல வகையுண்டு
ஆயுள் காப்பீடு - Life Insurance (تأمين الحياة)
ஆயுள் காப்பீடு என்பது ஒரு நபர் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் செய்யும் ஒப்பந்தம். அதன்படி, அந்த நபர் மாதம் / வருடம் ஒன்று ஒரு தொகையை (Premium) கட்டுவார். அவர் இறந்தால் அல்லது ஒப்பந்த காலத்தில் விபத்து / நோய் போன்ற ஏதாவது நடந்தால் காப்பீட்டுத் தொகை (Sum Assured) அவரது குடும்பத்தினருக்கு அல்லது முன் பதிவு செய்த வாரிசுக்கு (Nominee) வழங்கப்படும்.
சொத்து, தொழில் காப்பீடு Property / Business Insurance
கடை, நிறுவனம், கம்பனி, தொழிற்சாலை, வீடு, கட்டிடம் , களஞ்சியம்
இவற்றுக்கு தீ, திருட்டு, விபத்து, இயற்கை பேரழிவு போன்ற இழப்பு ஏற்பட்டால் கிடைக்கும் காப்பீடு.
இவை இரண்டும் ஹராம். ஏனெனில் இதில் அடங்கியுள்ள அம்சங்கள் :
Interest – நாம் செலுத்தும் பிரீமியம் தொகைகளை வட்டி சார்ந்த தொழில்களில் முதலீடு செய்துதான் அதிலிருந்து நமக்கு இழப்பீடு தரப்படுகிறது.
Gambling - சூதாட்ட அமைப்பு. ஏதோ ஒரு இழப்பு நடந்தால் இவருக்கு அபரிமிதமான லாபம். அதுவும் செலுத்திய தொகையை விட அதிகம். இழப்பு இல்லையென்றால் இவர் செலுத்திய பிரீமியம் ஒன்றுமே கிடைக்காது.
Uncertainty – நிச்சயமற்ற , தெளிவில்லாத பரிவர்த்தனை
தொகை கொடுத்து வைக்கிறவர் எவ்வளவு திரும்பப் பெறுவார் என்பது தெளிவாக இல்லை.
وَاَحَلَّ اللّٰهُ الْبَیْعَ وَحَرَّمَ الرِّبٰوا
அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான். (அல்குர்ஆன் 2:275)
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَیْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّیْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன்:5:90)
نَهَى رَسُولُ اللَّهِ ﷺ عَنْ بَيْعِ الغَرَرِ)- صحيح مسلم
தெளிவில்லாத (நிச்சயமற்ற) விற்பனையை நபி ﷺ தடை செய்தார்கள். (முஸ்லிம்)
சுகாதாரம் / மருத்துவக் காப்பீடு - Health Insurance (التأمين الصحي)
மருத்தவக் காப்பீடைப் பொறுத்தவரை 2 வகை உள்ளது. ஒன்று நாம் ஏற்கனவே குறிப்பிட்ட அரசு மருத்தவக் காப்பீடு. இது அனுமதிக்கப்பட்டது.
இன்னொன்று Commercial Health Insurance. பிற நிறுவனங்கள் நடத்தும் வணிக ரீதியிலான காப்பீடு. இதில் பிரீமியம் உண்டு. இது நாம் ஏற்கனவே குறிப்பிட்ட மூன்று ஹராமான அம்சங்கள் உள்ளதால் ஹராம் ஆகும்.
إذا كان التأمين تجارياً فهو محرّم، وإن كان تعاونياً أو حكومياً فهو جائز.”
— قرار المجمع الفقهي، 140/15
சில நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து மாதம் மாதம் ஒரு சின்ன பிடித்தம் செய்து சேமித்து வருவார்கள்.
அந்த ஊழியருக்கு ஏதேனும் பாதிப்பு வரும்போது இழப்பீடு தருவார்கள். இது கூடும்.
வாகனக் காப்பீடு - Vehicle Insurance (تأمين المركبات)
இது இரண்டு வகை. 1. விரிவான காப்பீடு (Comprehensive Insurance) உங்கள் வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டால் அதற்கும் இழப்பீடு, உங்கள் வாகனத்தால் மூன்றாம் நபருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவருக்கும் இழப்பீடு உண்டு. இந்த விரிவான காப்பீடு நம் நாட்டில் கட்டாயம் இல்லை.
2. Third-Party Insurance (வாகனத்தால் மூன்றாம் நபருக்கு ஏற்படும் காயம், பொருட்சேதம், உயிரிழப்பு போன்றவைக்கான காப்பீடு மட்டும். இது சட்டரீதியான தேவையும் கூட) இந்திய மோட்டார் வாகனச் சட்டம், 1988-இன் படி, வாகனம் ஓட்ட மூன்றாம் தரப்பு காப்பீடு வைத்திருப்பது கட்டாயம்.
“الضَّرُورَاتُ تُبِيحُ المَحْظُورَاتِ
நிர்பந்தங்கள், தடுக்கப்பட்டவைகளை ஆகுமாக்கும் என்ற ஃபிக்ஹ் சட்டவிதிப்படி இது கூடும். எது கட்டாயம் இல்லையோ அந்த வாகனக்காப்பீடு கூடாது.
-“ما أُلزم به الناس قانوناً يُرخَّص فيه بقدر الضرورة”
مجمع الفقه الإسلامي
சீட்டு (CHIT)
இன்று நடைமுறையில் பல சீட்டுக் குலுக்கல் முறைகள் உள்ளன. எது ஆகும்? எது ஆகாது?
1. சமத்துவ சீட்டு (Equal Share)
அனைவரும் ஒரே அளவு பணம் தருவார்கள்
ஒவ்வொருவரும் ஒருமுறை முழுத் தொகை பெறுவார்கள்
எந்தக் கட்டணமும் / கூடுதல் தொகையும் இல்லை
சீட்டுக் குலுக்கலால் வரிசை தீர்மானிக்கப்படும்
📌 உதாரணம்
10 பேர் × ₹10,000 = ₹1,00,000
ஒவ்வொரு மாதமும் ஒருவருக்குக் கொடுப்பது
யாருக்கும் கூடுதல் தொகையும் இல்லை குறைவும் இல்லை.
இது உலகம் முழுதும் பரவலாக (ROSCA) Rotating Savings and Credit Association என்று அறியப்படுகிறது.
இதன் சட்டம் என்ன? கூடும்.
هذه الجمعية التي يشترك فيها جماعة . يدفعون كل شهرٍ مبلغاً معيناً . ثم يأخذه واحدٌ منهم، ثم في الشهر الثاني يأخذه الثاني
ليس فيها ربا ولا قمار، فهي جائزة إذا كانت بين مؤظفين موثوقين.-
2. ஏலச்சீட்டு (Bidding Chit)
மொத்த தொகையை ஏலம் போடுவார்கள்.
ஒருவர் 90,000 கேட்கிறார். இன்னொருவர் 85,000 தந்தால் போதும் எனக்கு அவசரம் என்கிறார். யார் குறைவாகப் பெறத் தயாராக இருக்கிறார்களோ அவர்களுக்கு முன்னுரிமை.
மீதித் தொகையை சில பகுதிகளில் சீட்டு நடத்துனர் எடுத்துக் கொள்வார். சில பகுதிகளில் மற்ற உறுப்பினர்களுக்கு பகிர்ந்து கொடுப்பார்.
₹1,00,000க்கு பதிலாக ₹85,000 பெறுகிறார்
மீதமுள்ள ₹15,000 — மற்றவர்களுக்கு பகிரப்படும்
இதன் சட்டம் என்ன? ஹராம்.
ஏனெனில்
🔸 ஒருவன் நஷ்டம் அனுபவிக்கிறான்
🔸 மற்றவர்கள் அவன் நஷ்டத்தில் லாபம் பெறுகிறார்கள்
🔸 வட்டி / சூதாட்டம் போன்ற தன்மை
3. நிர்வாகக் கட்டணச் சீட்டு commission Chit
மாதாமாதம் ஒரு தொகையை சர்வீஸ் சார்ஜ் ஆக எடுத்துக்கொண்டு மீதியைத்தான் நிர்வாகி வழங்குவார்.
அந்த தொகையை நிர்வாகி வைத்துக்கொள்வார்.
பெரும்பாலான உலமாக்கள் இதை ஹராம் என்கின்றனர்.
சாதாரண சேவைக் கட்டணம் மட்டும் (உண்மையான செலவு அளவு) என்றால்
சில உலமாக்கள் கூடும் எனக் கூறுகிறார்கள். ஆனால் முன்பே அது ஷரத்தில் இருக்க வேண்டும்.
أما إذا كان ما يأخذه مقابل عملٍ يقوم به فلا بأس به.”
(ஒருவர் செய்யும் வேலையின் பேரில் சம்பளம் வாங்கினால் — அதில் பிரச்சனை இல்லை)
4. Lucky Prize Chit அதிர்ஷ்ட குலுக்கல்
லாட்டரி, ஆன்லைன் ரம்மி போன்றவை.
மக்கள் பணம் செலுத்துகிறார்கள். சிலருக்கு மட்டும் பரிசு. மற்றவர்கள் இழக்கிறார்கள்
இது சூதாட்டம். எனவே ஹராம் என்பதில் எள்ளவும் ஐயமில்லை.
5. வட்டி இணைந்த Finance Chit
நிறுவனம் உங்களுக்கு கடன் தருகிறது.அதன் மீது வட்டி / profit rate வசூல் செய்கிறது.
இதுவும் ஹராம்தான்.
கடன் (LOAN)
1. வங்கிக் கடன் (Bank Loan)
வங்கி கடன் தரும் — திருப்பிச் செலுத்தும் போது வட்டி சேர்த்து தர வேண்டும்.
தீர்ப்பு: வட்டி அடங்கிய கடன் → ஹராம்.
﴿وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا﴾
அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கி, வட்டியைத் தடை செய்துள்ளான். (அல்குர்ஆன்-2:275)
لعن رسول الله آكل الربا ومؤكله وكاتبه وشاهديه - (مسلم)
வட்டி வாங்குபவர், கொடுப்பவர், அதை எழுதுபவர், அதற்கு சாட்சியாக இருப்பவர் அனைவரையும் நபி (ஸல்) சபித்தார்கள். (நூல்: முஸ்லிம்)
எனவே வங்கிக் கடன் அது எந்தப் பெயரில் இருந்தாலும் வட்டி கலந்திருப்பதால் ஹராம்.
2. தங்க நகைக் கடன் (Gold Loan)
தங்கம் அடகு வைக்கப்படுகிறது — பணம் பெறப்படுகிறது —
ஆனால் வட்டி வசூலிக்கப்படுகிறது. வட்டி இருந்தால் — ஹராம்
ஏன்?
«كل قرض جر منفعة فهو ربا»
(கடன் மூலம் கூடுதல் பயன் பெறும் ஒவ்வொன்றும் வட்டியாகும் )
மாற்று வழி :
Islamic Banking System இஸ்லாமிய வங்கி முறை இது பல இஸ்லாமிய நாடுகளில் உள்ளது. நகை வைத்துக் கடன் பெறலாம். குறிப்பிட்ட தவணையில் அதே தொகை செலுத்தி நகையை மீட்கலாம். துளியளவு கூட வட்டி இல்லை.
அல்லது பைத்துல் மால் அமைப்புகளை மார்க்க அறிஞர்களின் வழிகாட்டுதலில் நிறுவலாம்.
3. வீடு – கார் லோன் (EMI with Interest)
வங்கி / ஃபைனான்ஸ் நிறுவனம் வட்டி சேர்த்து கொடுக்கும். வட்டி இருப்பதால் — ஹராம்
من زاد أو استزاد فقد أربى - سنن النسائي
(கடனில் கூடுதல் தொகை கேட்டாலோ கொடுத்தாலோ வட்டிதான்)
இதற்கு ஹலாலான மாற்று வழி உண்டா?
المرابحة Murabaha என்ற பெயர்களில் சில இஸ்லாமிய நாடுகளில் உள்ளது.
அதாவது வாடிக்கையாளர் ஒரு பொருள் வாங்க விரும்புகிறார்
(உதா: கார், வீட்டு உபகரணங்கள், பொருட்கள், மூலதன பொருட்கள்). வங்கி அந்தப் பொருளை நேரடியாகக் கொள்முதல் செய்கிறது. வங்கி அதை வாடிக்கையாளருக்கு அசல் விலை + முன்பே ஒப்பந்தமான லாபம் சேர்த்து தவணைகளில் விற்பனை செய்கிறது. வாடிக்கையாளர் அந்த மொத்த தொகையை பல தவணைகளில் செலுத்தலாம். அதுதான் முராபஹா .
முராபஹா ஹலால் ஆக இருக்க வேண்டுமானால் முக்கிய நிபந்தனைகள்:
✔ வங்கி உண்மையில் பொருளின் உரிமையாளராக வேண்டும்
✔ வாங்கிய விலை வெளிப்படையாக சொல்லப்பட வேண்டும்
✔ லாபம் முன்பே அறிவிக்கப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட வேண்டும்
✔ ஒப்பந்தம் விற்பனை ஒப்பந்தமாக இருக்க வேண்டும்
❌ செட்டில்மெண்ட் தாமதம் ஏற்பட்டாலும் லாப விகிதம் அதிகரிக்கக் கூடாது
வங்கிக் கடன் என்பது வங்கி பணமாக தரும். வட்டி போடும். முராபஹா என்பது வங்கி பொருள் தரும் விற்பனை விலை சேர்த்து. அதைப் பல தவணைகளில் செலுத்த அனுமதி தரும்.
ஆதாரம் : AAOIFI Shariah Standard No. 8
(இஸ்லாமிய நிதி சர்வதேச வழிகாட்டல் எண் 8)
⚠ சில வங்கிகள் உண்மையான விற்பனை இல்லாமல் வட்டி கடனை “Murabaha” என்று பெயர் மாற்றம் செய்கின்றன. அது ஷரிஅத்துக்கு முரணானது
அதனால் நம்பகமான இஸ்லாமிய வங்கி/வழிகாட்டல் அவசியம்
இஸ்லாமிய பைத்துல் மால் வட்டியில்லா கடன் வழங்குகிறது. இதுவும் நல்ல நடைமுறை.
பின் குறிப்பு:
இன்சூரன்ஸ் குறித்து தற்பொழுது எகிப்திய ஃபத்வா மன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பில் இன்சூரன்ஸின் அனைத்து வகைகளையும் தற்கால சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஆகுமாக்கி ஆர்வப்படுத்தியும் உள்ளது. அதுபோல நம் இந்தியாவின் சில ஃபத்வா குழுக்களும் இந்நாட்டில் தற்பொழுது சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை ஆராய்ந்து இந்நாட்டில் அவசியத்திற்க்கு ஏற்ப ஒரு பாதுகாப்பிற்காக இன்சூரன்ஸ் செய்து கொள்ளலாம் என அனுமதி வழங்கியுள்ளது.
எனினும் மிகவும் பேணுதலோடு, சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைக் கூட தவிர்ந்து கொண்டு, இஸ்லாம் ஆகுமாக்கி வைத்துள்ள மாற்று வழிகளைத் தேர்ந்தெடுக்கலாம். அவற்றையும் நாம் மேலே கூறியுள்ளோம். அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக.

அல்ஹம்துலில்லாஹ் மிகவும் தெளிவான சட்டங்கள்
பதிலளிநீக்குகுறிப்பாக முராபஹா என்ற முறையில் கடன் பெறுதல் என்ற சட்ட விதிகள் மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது
பாரக்கல்லாஹ்.......
Masha Allah barakkallah
பதிலளிநீக்குHazrath
நல்ல தெளிவான விளக்கம் இதே போன்றே பிக்சட் டெபாசிட், ஷேர்மார்க்கட் , டிரேடிங் இதனை போன்ற நவீன பண பறமாற்றல் பற்றியும் கொஞ்சம் எழுதுங்களேன் ஹஜ்ரத்