16 செப்டம்பர், 2025

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்..?

     - சதக் மஸ்லஹி.

நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும் என்று சில பேருக்கு நினைப்பு. அவ்வாறு நடக்கவில்லை என்றால் வாழ்க்கையை வெறுத்து விரக்தி அடைந்து விடுகிறார்கள். 

ஒரே புலம்பல். கடந்த காலத்தின் கவலையிலேயே தோய்ந்து விடாமல் எதிர்காலத்தின் பயத்திலேயே இருந்து விடாமல் நிகழ்காலத்தில் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். 

குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் நல்லோர்களின் வரலாறு இவற்றிலிருந்து பாடம் பெறலாம். 

📖 குர்ஆன்

 وَعَسَىٰ أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ ۖ وَعَسَىٰ أَنْ تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَكُمْ ۗ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ 
"நீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள் அது உங்களுக்கு நல்லதாக இருக்கலாம்; நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள்; அது உங்களுக்கு தீமையாக இருக்கலாம். அல்லாஹ் அறிவான், நீங்கள் அறிவதில்லை."
— (சூரா அல்-பகரா 2:216)


இந்த வசனம் நமது விருப்பம் உடனடியாக நிறைவேறாமல் போனாலும் அதில் மறைவான நன்மைகள் இருக்கலாம் என்பதை உணர்த்துகிறது.

🤲 ஹதீஸ்

 قال رسول الله ﷺ:
"عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ، إِنَّ أَمْرَهُ كُلَّهُ لَهُ خَيْرٌ، وَلَيْسَ ذَاكَ لأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ؛ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ، فَكَانَ خَيْرًا لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ، فَكَانَ خَيْرًا لَهُ"
— (ஸஹீஹ் முஸ்லிம் 2999)

"ஒரு முஃமினின் விஷயம் ஆச்சரியமானது! அவனது எந்த நிலையிலும் அவனுக்கு நன்மை உண்டு. இது வேறு எவருக்கும் இல்லை. அவனுக்கு நல்லது நடந்தால் நன்றி செலுத்துவான், அது அவனுக்கு நன்மையாகும். அவனுக்கு துன்பம் வந்தால் பொறுமை காட்டுவான், அதுவும் அவனுக்கு நன்மையாகும்."

👉 அதாவது, நமது விருப்பங்கள் உடனடியாக நிறைவேறாமல் போவது, இறுதியில் நம் நலனுக்கே அமையக்கூடியது என்பதைக் குர்ஆனும் ஹதீஸும் வலியுறுத்துகின்றன.

ஒரு மனிதனுக்கு பெரிய கவலை! இந்த உலகத்தில் எதுவுமே நாம் நினைக்கிற மாதிரி நடக்க மாட்டேங்குது என்று.
இதன் காரணமாகவே அவனுக்கு மன அமைதி இல்லை. இந்த உலக வாழ்க்கை நமக்கு தேவையில்லை என்று கூட நினைக்க ஆரம்பித்து விட்டான்.

இந்த நிலையில் ஒருநாள் எதையாவது புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை வந்தது.  வில்வித்தை கற்றுக் கொள்ளலாமா என யோசித்து ஒரு குருவை தேடிச் சென்றான். அவரும் அவன் தனக்கு தெரிந்த வித்தைகளை எல்லாம் கற்றுக் கொடுத்தார். இனிமேல் இதையெல்லாம் தொடர்ந்து பயிற்சி செய் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

இவன் வந்தான். ஒரு மரத்தில் வட்டமாக கோடு போட்டுக்கொண்டு அதன் மத்தியிலே ஒரு புள்ளியை வைத்தான். தூரத்தில் நின்று கொண்டு அம்பை விட்டான் அது சற்று விலகியே போய் குத்தியது. மறுபடியும் முயன்றான்.
என்ன முயன்றும் அந்த மத்தியை தொட முடியவில்லை. 

அவன் மனம் உடைந்து போனான். "நம்ம ஜாதகமே இப்படித்தான் எதுவுமே நாம நினைக்கிற மாதிரி நடக்கிறது இல்லை என்று சோர்ந்து போய் ஒரு மண்டபத்தில் உட்கார்ந்தான். 

அப்போது ஒரு பெரியவர் அந்த பக்கமாக வந்தார். 
"என்ன தம்பி கவலையாக இருக்கிறாய்?"
"மன அமைதி இல்லை"
"என்ன காரணம்"
" நான்  நினைக்கிறது எதுவும் நடப்பதும் இல்லை; ஒரு அம்பு கூட என் பேச்சை கேட்பதில்லை."

"சரி! என்னோடு வா!" என்று அவனை அடுத்த ஊருக்கு அழைத்துச் சென்றார்.
அங்கே பல மரங்களில் வட்டங்கள் வரையப்பட்டிருந்தன. அவற்றின் நடு மத்தியில் கரும்புள்ளி அந்த புள்ளிகளில் மிகச் சரியாக அம்புகள் குத்திக் கொண்டு இருக்கின்றன. எல்லாம் மரங்களிலும் எல்லா அம்புகளும் சரியாக குறித்த வராமல் பாய்ந்திருந்தன. 

இவனுக்கு பெரிய ஆச்சரியம். "எப்படி இது! யார் இந்த மனிதன்? மிகவும் கெட்டிக்காரனாக இருப்பான் போலிருக்கிறது ஒரு மரத்தில் கூட அவன் வைத்த குறி தப்பவில்லை.
 அவனை பார்க்க வேண்டுமே!"

"அதற்கு தானே உன்னை இங்கு அழைத்து வந்திருக்கிறேன். ஆனால் ஒரு விஷயம். அவன் ஒரு கிறுக்கன்!
தான் நினைக்கிறபடியே இந்த உலகில் எல்லாம் நடக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறான்."

"அப்படியானால் வாழ்வின் ரகசியம் என்ன என்பதை அவனிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் வாருங்கள் போகலாம்!" 

"யப்பா! வில்வித்தையில் நீ ரொம்பவும் கெட்டிக்காரனா?

"அதெல்லாம் கிடையாது! எனக்கும் வில்வித்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! 

"அப்புறம் எப்படி குறி தவறாமல்?" 

அவன் சிரித்துக் கொண்டே சொன்னான் : "அது ஒன்னும் பெரிய காரியமில்லை முதல்ல மரத்தின் மீது அம்பு விடுவேன். அதுக்கப்புறம் கிட்ட போய் அதை சுற்றி ஒரு வட்டம் வரைந்து விடுவேன். அவ்வளவுதான்."

அவன் பித்தனாக இருந்தாலும் ஒரு உண்மையை சொல்லி இருக்கிறான் 
நம்மால் ஆன முயற்சிகளை செய்ய வேண்டும் இறைவனிடத்திலும் பிரார்த்தனை புரிய வேண்டும் அதையும் மீறி நாம் நினைப்பது நடக்காவிட்டால் அதில் ஏதோ நன்மை உண்டு எனப் புரிந்து மன அமைதி கொள்ள வேண்டும் நமக்கு இழந்ததை விட சிறந்ததை இறைவன் நிச்சயம் தருவான் என்ற வாழ்க்கை தத்துவம். 
"பிடித்தது கிடைக்காவிட்டால் 
கிடைத்ததை பிரியப்பட வேண்டும்"


அல்லாஹ்விடத்தில் அழுது புலம்பினோம் அழுத்தமாய் வேண்டுதல் செய்தோம் ஆனாலும் நடக்கவில்லை எனில் பொறுமை காக்க வேண்டும். 
ஒரு தந்தை தன் சிறு குழந்தையை அழைத்துக் கொண்டு சந்தைக்கு செல்கிறார் சந்தையில் ஏராளமான பண்டங்கள் ஆங்காங்கே இருக்கின்றன கண்ணுக்கு அழகான கவர்ச்சியான இனிப்பு தேன் பாகு வழிகின்ற தின்பண்டங்கள் ஆனாலும் அது திறந்து கிடக்கிறது கண்ட கண்ட ஈக்கள் மொய்க்கின்றன. 

அதன் கவர்ச்சியில் மயங்கி குழந்தை அது தான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறது. ஆனாலும் தந்தை அதை தவிர்த்து விட்டு கொஞ்சம் தள்ளிப் போகிறார் ஒவ்வொரு பண்டமாக கேட்கிறது அதையெல்லாம் தவிர்த்து விட்டு வேறொரு சிறந்த பண்டத்தை வாங்கி தருகிறார் அது மூடி பாதுகாப்பாக இருக்கிறது 

ஆனால் குழந்தைக்கு அது பிடிக்கவில்லை. காரணம் சீனிப்பாகு அதில் வழியவில்லை. கண்ணுக்கு அழகான கலராக இல்லை. 
ஆனால் தந்தைக்கு புரிகிறது: இந்த குழந்தைக்கு ஏற்ற பண்டம் எது என்று. 
அதுபோலத்தான் ஆயிரம் தாயை விட அதிக அன்புள்ளவன் அல்லாஹ். 
ஒரு அடியானுக்கு எது நல்லது? எது பொல்லாதது? என்று அவனுக்கு தெரியும் எனவே அடியான் கேட்கிறான் என்பதற்காக பொல்லாததை அவன் தர மாட்டான் நல்லதைத்தான் தேர்ந்தெடுத்து தருவான் அதற்கு சில நாட்கள் ஆகலாம் அதுவரை அடியான் பொறுத்திருக்க வேண்டும்.

4 கருத்துகள்:

  1. தாங்கள் மீண்டும் கட்டுரைகளை வெளியிட துவங்கி இருப்பது மட்டற்ற மகிழ்ச்சி.

    அல்லாஹ் பரக்கத் செய்வானக...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறந்த படைப்பாளரும் அருமைச் சகோதரருமான காதிர் மீரான் மஸ்லஹி கருத்து எனக்கு நிச்சயம் ஊக்கம் தரும்.

      நீக்கு
  2. இக்காலத்தில் தேவையான கட்டுரை
    பாரக்கல்லாஹ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது ஹஜ்ரத். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்