23 ஜூலை, 2014

மனித நேயம் வாழ்கிறதா? வீழ்கிறதா?- நடுவர் முன்னுரை

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அல்ஹம்து லில்லாஹ். நஹ்மதுஹு வநுசல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃது.
இந்நிகழ்ச்சியை அவதானித்துக் கொண்டிருக்கும் அன்பு நேயர்களே!
யாருக்கும் இன்னல் தராத மின்னல் FM நேயர்களே! மனித நேயர்களே!!
ஈதுல் பித்ர் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
இன்று ஒரு அருமையான பட்டிமன்றம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மனித நேயம் வாழ்கிறதா? வீழ்கிறதா?
மனிதநேயம் என்றால் என்ன?
மனிதனை மனிதானாக மதித்து- சகமனிதர்களோடு சகோதர வாஞ்சையுடன் சங்கமித்து, இல்லாருக்கு வழங்கி, எல்லோருக்கும் இணங்கி, ஒருத்தருக்கொருத்தர் உதவி வாழ்வதுதான் மனிதநேயம்.
இந்த மனித நேயம் இன்று இருக்கிறதா? இல்லையா என்பதுதான் கேள்வி.
ஒருத்தர் சொன்னார்: “அடுத்தவங்களுக்கு ஒரு ஆபத்துனா அதைப் பார்த்துக்கிட்டு நான் சும்மா இருக்கமாட்டேன்.”
“அப்படியா! என்ன செய்வீங்க?”
“உடனே என்னோட இரண்டு கண்ணையும் இருக்கமா பொத்திக்கிருவேன்” அப்படின்னார். இதை மனித நேயம்னு சொல்லமுடியுமா?

ஒத்ததறி வான் உயிர் வாழ்வான் மற் றையான் 
செத்தாருள் வைக்கப் படும்- வள்ளுவர் சொன்ன வாக்கு.
பிறருக்கு உதவி செய்து வாழ்பவன்தான் உண்மையில் உயிர் வாழ்கிறான்; உதவாக்கரை இருக்கிறானே..அவன் ‘செத்தாருள் வைக்கப்படும்’ செத்த பிணத்திற்கு சமம். ஏனென்றால் பிணம்தான் பிறருக்கு உதவாது.

சில நேரத்துல.. உதவி செய்யாட்டியும் பரவாயில்லை. உபத்திரவம் செய்யாமலாவது இருக்கணும். அதுவே மனித நேயம்தான்.
அப்படித்தான் ஒருத்தன் பைக்ல வேகமா போய்க்கிட்டு இருந்தான். அவனுக்கு முன்னால ஒரு வேன். அதிலிருந்து ஒரு பார்சல் திடீர்னு கிழே விழுந்தது. அடடா.. கவனிக்காம போறாங்களேன்னு பரிதாபப் பட்டு அந்த பார்சலை எடுத்து பைக்ல வச்சிக்கிட்டு வேகமா அந்த வேனை follow பண்ணான். கொஞ்ச தூரம் போய் இன்னொரு பார்சல் கீழே விழுந்துச்சு. அதையும் எடுத்து வச்சிக்கிட்டு வேகமா வந்தான். இப்படியே ஒரு நாலஞ்சு இடத்துல ஒவ்வொரு பார்சலா விழுந்துச்சு. எல்லா பார்சலையும் எடுத்து வச்சிக்கிட்டு அந்த வேனை ஓவர்டேக் பண்ணி முன்னாலே வந்து நிறுத்துனான். “யோவ் என்னய்யா.. ஏகப்பட்ட பார்சலை விட்டுட்டுப் போறீங்க.. எதோ நான் நல்லவனா இருக்கப்போய் எடுத்துட்டு வந்து கொடுத்தேன். இல்லைனா என்னாயிருக்கும்?
அதுக்கு அவன் சொன்னானாம்: “அடப்பாவி நான் ஒவ்வொரு இடமா பேப்பர் பார்சல் போட்டுட்டு வர்றேன். அதை ஏன்யா நீ எடுத்துட்டு வந்தே?”
இப்ப இந்த உதவி யாரவது கேட்டாங்களா?
தேவை அறிந்து உதவி செய்வதுதான் உண்மையான மனிதநேயம்.
"உன்னைத் துண்டித்து வாழ்பவனையும் நீ சேர்ந்து வாழ்! உனக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடு! உனக்கு உபத்திரவம் செய்தவனுக்கும் நீ உபகாரம் செய்!
இது மனித நேயத்தின் உச்சம்.

அன்னை ஆயிஷா (ரலி-அன்ஹா) அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருமுறை கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! தங்கள் வாழ்க்கையிலே தங்களை அதிகம் சங்கடப்படுத்திய சம்பவம் என்ன?”
“ஆயிஷா! என் வாழ்நாளில் அதிகமான துன்பங்களை நான் அனுபவித்துள்ளேன். ஆனால் என்னை அதிகம் பாதித்த விஷயம் என்ன தெரியுமா?  
  • என்னையும் என் குடும்பத்தையும் ஊரைவிட்டு ஒதுக்கி பள்ளத்தாக்கிலே பல வருடம் பட்டினி போட்டார்களே.. அதுகூட எனக்குத் துன்பமாகப் படவில்லை. 
  • நான் நடக்கிற பாதையிலே கல்லையும் முள்ளையும் போட்டுவைத்துக் காயப்படுத்தினார்களே..அதைக் கண்டு கூட நான் கலங்கவில்லை. 
  • தாயிஃப்  நகர மக்கள் கல்லாலும் சொல்லாலும் அடித்தார்களே.. அதுகூட பரவாயில்லை. 
  • ஆனால் அந்த தாயிப் மக்களை இரண்டு மலைகளுக்கு மத்தியில் வைத்து நசுக்கட்டுமா? என்று ஒரு வானவர் வந்து கேட்டாரே.. அதுதான் என்னால் தாங்கமுடியவில்லை. நான் பதறினேன்..வேண்டாம்..அந்த மக்களை அழிக்கவேண்டாம். பாவம் அவர்கள் அறியாமல் செய்கிறார்கள். என்று அவர்களுக்காக மன்றாடினேன். ஆயிஷா என் வாழ்நாளிலே எனக்கு மிகவும் சங்கடமான தருணம் அதுதான்.

கல்லால் அடித்துக் காயப்படுத்தியது பரவாயில்லையாம். அந்த மக்களை அழிக்கப்போகிறேன் என்று வானவர் சொன்னதைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லையாம் மானுட வரலாற்றில் இப்படி ஒரு மனித நேயத்தை எங்காவது பார்த்திருக்கோமா?

அன்னை தெரசா. சமூக சேவைக்கென்றே பிறந்த பெண்மணி. ஒருமுறை அவர் ஒரு செல்வந்தரிடம் ஏழைகளுக்காக நிதி கேட்டு கை நீட்டியபோது அந்த செல்வந்தன் கையிலே காரி உமிழ்ந்தான். அன்னை தெரசா ஆத்திரப்படவில்லை. அமைதியாக அந்தக் கரத்தை மடக்கி வைத்துக்கொண்டு இன்னொரு கரத்தை நீட்டினார். “எனக்கு எச்சில் தந்தாய்..ஏற்றுக்கொண்டேன். ஏழைகளுக்கு என்ன தரப்போகிறாய்?” அந்த செல்வந்தன் அதிசமாய்ப் பார்த்தான். இப்படியும் ஒரு பெண்மனியா?

அருமையானவர்களே! இப்படி மனிதநேயத்தோடு வாழ்ந்தார்கள் என்று வரலாற்றிலிருந்து எடுத்துக்காட்டுகளை எடுத்து வைக்கிற அதே நேரத்தில் இன்றைக்கு அந்த மனிதநேயம் நிதர்சனமாக இருக்கிறதா என்று பேசத்தான் இங்கே இரண்டு அறிஞர்கள் அமர்ந்திருக்கிறார்கள். 

முதலில் இவர்களை மோதவிடுவோம்; அப்புறம் ஒரு முடிவுக்கு வருவோம் சரியா? இப்ப.. மனிதநேயம் வாழ்கிறதே.. என்று வலியுறுத்திப் பேச வருகிறார் நம்ம கருத்துக் கருவூலம் காதிர் மீரான் மஸ்லஹி. 

1 கருத்து:

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...