மார்க்கம் என்பது மஸ்ஜிதுக்கு உள்ளே மட்டும் என்று நினைப்பவர்கள் நம்மிலே அதிகம்
பக்தியை பள்ளிக்குள்ளே மட்டும் பக்குவமாய்க் காட்டிவிட்டு பள்ளிக்கு வெளியே பட்டவர்த்தனமாய் பாவம் செய்துகொண்டிருக்கிற பாதகர்கள் உண்டு
இன்னும் சிலர் பள்ளிக்குள் கூட பக்தியாகவும் பவ்வியமாகவும் இருப்பதில்லை என்பது வேறு விஷயம்
أُولَئِكَ مَا كَانَ لَهُمْ أَنْ يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ (114) البقرة
பள்ளிக்குள் பயமில்லாமல் பக்தியில்லாமல் நுழைபவர்களுக்கு மறுமையில் மாபெரும் தண்டனை உண்டு என்று மன்னவன் அல்லாஹ் மாமறையிலே கூறுகிறான்
மாநபி ஸல்லல்லாஹு அலைஹ் வசல்லம் நவின்றார்கள்
وإياكم وهيشات الأسواق. رواه مسلم وأبو داود والترمذي عن عبد الله بن مسعود.
சந்தைகளின் கூச்சலைப் போல சங்கை மிக்க பள்ளிகளில் கூச்சல் போடவேண்டாம்
ஒரு சிலர் பள்ளியில் நல்லவர்களாக நடந்துகொண்டாலும் பள்ளிக்கு வெளியே பழக்க வழக்கங்கள் சரியில்லை
இவர்கள் நினைப்பது என்ன
மார்க்கம் என்பது முசல்லாவில் முடங்கிய ஒன்று
மார்க்கம் என்பது தஸ்பீஹ் மணியில் தங்கிய ஒன்று
மார்க்கம் என்பது பள்ளிக்குள்ளேயே பதுங்கிய ஒன்று
நாம் சொல்கிறோம்
மார்க்கம் என்பது பள்ளிக்கு உள்ளேயும் உண்டு வெளியேயும் உன்டு
அண்டை வீட்டுக்காரனிடம் அனுசரித்து நடப்பதிலும் உண்டு
பகைமை பாராட்டுபவனோடும் பாசத்தைப் பகிர்வதிலே உண்டு
மனைவியின் வாயிலே மகிழ்வோடு ஊட்டுகிற ஒரு கவள உணவில் உண்டு
பாதையிலே கிடந்து பாதசாரிகளின் பாதங்களைப் பதம் பார்க்கிற கல் முள் போன்றவற்றை ஓரமாக ஒதுக்கிப் போடுவதிலே உண்டு
கொடுக்கல் வாங்கலிலே பதுக்கல் இல்லாமல் நேர்மையாக வணிகம் செய்வதால் அந்த வணிகம் கூட வணக்கம் ஆகிறது
நாயகம் ஸல் இப்படி கூறினார்கள்
عن أبي سعيد الخدري ، عن النبي صلى الله عليه وسلم قال : « التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء »المستدرك على الصحيحين
நேர்மையான வியாபாரி நாளை மறுமையில் நபிமார்களோடும் உண்மையாளர் களோடும் தியாகிகலோடும் இருப்பார்
நாம் சிந்திக்கிறோம் ஒரு வியாபாரி அவரது வியாபாரத்தின் நோக்கம் என்ன?
சுவனம் போவதா..? இல்லை .
அசல் நோக்கம் வயிற்றுப் பிழைப்புக்காக ஏதோ சில பொருட்களை வாங்கி விற்கிறான் ஆனால் அதில் கூட நேர்மையும் நியாயமும் இருந்தால் அது வணக்கமாக மட்டுமல்ல வசந்தமான சுவனத்தில் வாஞ்சை மிக்க நல்லோர்கள் நபிமார்களோடு நட்புடன் இருக்கிற பாக்கியத்தையும் பெற்றுத் தருகிறது
அப்படியானால் வழக்கத்தைக் கூட வணக்கமாக்கலாம் அது நம் தூய்மையான எண்ணத்தைப் பொறுத்தது
மார்க்கம் என்றாலே நன்மையை நாடுவதுதான்
( إذا استنصح أحدكم أخاه فلينصح له فإن الدين
النصيحة لله عز وجل ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم ) )
عن تميم الدارى قال قال رسول الله صلى الله عليه وسلم
انما الدين النصيحة
انما الدين النصيحة
انما الدين النصيحة
فقيل لمن يا رسول الله قال لله ولكتابه ولرسوله ولائمة المؤمنين وعامتهم -السنن الكبرى للبيهقي
மற்றவருக்கு நன்மையா நாடாமல் நாம் எத்தனை வணங்கினாலும் அந்த வணக்கம் வானைத் தொடுமா என்பதே சந்தேகம்தான்
நமக்குத்தான் தெரியுமே
இரவு பகலாக இறைவனக்கத்திலேயே திளைத்த ஒரு பெண் சக மனிதர்களிடம் சந்தோஷமாக இருப்பதில்லை சண்டை சச்சரவாக இருக்கிறாள் இவள் குறித்து தங்கள் கருத்தென்ன நாயகமே என்று கேட்டபோது இவள் ஒரு நரகவாதி என்றார்கள் அல்லவா
ஒரு பெண், பூனையைக் கட்டிப் போட்டு தீனி கொடுக்காததால் அவளிடம் தீன் இல்லை அவள் தீயவள் என்று நாயகம் ஸல் குறிப்பிடவில்லையா
எனவே எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
உமர் ரலி அவர்கள் தொழுகைக்காக நின்றிருந்தபோது வரிசையிலே நின்றிருந்த வஞ்சகன் ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த குறுவாளை எடுத்து குத்தினான் குடல் சரிந்து கீழே சாய்ந்த உமர் ரலி அவர்கள் அந்த நேரத்திலும் அழுத்தமாய் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா
நல்லவேளை .. என்னை குத்தியது ஒரு நயவஞ்சகன் . ஒரு முஸ்லிம் என்னை குத்தியிருந்தால் அநியாமாக கொலை செய்த குற்றத்திற்கு ஒரு முஸ்லிம் ஆளாகி என் காரணமாக அவன் நரகத்திற்கு சென்றிருப்பானே
உடல் கிழிந்து குடல் சரிந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு உத்தமரின் உதட்டிலிருந்து உதிருகின்ற வார்த்தைகளைப் பார்த்தீர்களா
மரணத்தின் மடியிலே இருக்கிற போதும் மகத்தான சிந்தனையைக் கொண்டிருந்தவர்கள் அந்த மேன்மக்கள்
ஒரு சுற்றுலா பேருந்து மலைப் பாதையில் ஏறிக் கொண்டிருந்தது சுமார் 50 பயணிகள் இருந்தனர் பயணத்தின் இடையில் ஒரு பயணிக்கு சிறுநீர் கழிக்கிற அவசரம் . அடக்கமுடியவில்லை அவ்வளவு நிர்பந்தம் ஓட்டுனரிடம் ஓடினான் விஷயத்தைக் கூறினான் வண்டி நிறுத்தப்பட்டது
கீழே இரங்கி ஒரு ஓரமாக சென்று சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான் அந்த நேரம் பார்த்து மலை உச்சியிலிருந்து உருண்டு வந்த ஒரு பெரும் பாறாங்கல் நின்றிருந்த பஸ்சின் மீது மோதி பஸ் குட்டிக் கரணம் அடித்து பாதாளத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது இவன் சிறுநீர் கழித்து விட்டு திரும்பிப் பார்த்து திடுக்கிட்டான் அங்கே அருகில் நின்றிருந்தவன் ஓடி வந்து சொன்னான் நல்லவேளை நீங்கள் பஸ்ஸை விட்டு இறங்கியதால் தப்பித்தீர்கள் நீங்கள் இறங்காமல் இருந்திருந்தால் நீங்களும் பலியாகி இருப்பீர்களே என்றான் இவன் கூறினான் இல்லை... நான் மட்டும் இறங்கா திருந்தால் 50பேரும் பிழைத்திருப்பார்களே எனக்காகத்தான் வண்டி இடையில் நிறுத்தப்பட்டது இல்லையென்றால் வண்டி போய்க்கொண்டே இருந்திருக்கும் பாறை உருண்டு விழுகிற வினாடிய பஸ் கடந்திருக்கும் என்றான்
ஆகா .. எந்த நேரத்தில் என்ன அழகான சிந்தனை
நாமாக இருந்திருந்தால் என்ன நினைத்திருப்போம்
நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன் ...என்று ஆனந்த கானம் பாடி ஆடியிருப்போம்
எல்லாவற்றிலுமே இரண்டு விதமாக சிந்திக்கலாம் இரண்டு விதமாக பார்க்கலாம் positive negative நேர்மறை - எதிர்மறை
நாம் எதயுமே நேர்மறை எண்ணங்களோடு அணுகினால் நல்ல பலன் கிடக்கும்
எந்த ஒரு விஷயத்தையும்
நல்லதாகப் பார்த்தால் நன்மை வரும். தீயதாகப் பார்த்தால் தீமை ஏற்படும். வெற்றி நோக்கத்தோடு
ஒரு செயலை அணுகினால் வெற்றி பெறும் வாய்ப்புக்கள் அதிகம்; உண்டு. தோல்வி கண்ணோடு அந்த செயலை செய்தால் தோல்வி
ஏற்படுவதை தவிர்க்கவே முடியாது.
ஆப்பிரிக்காவின் கிராமம்
ஒன்றில் காலணி கம்பெனி ஒன்று தனது பொருட்களை விற்பனை செய்வதற்காக ஒரு ஆளை அனுப்பியது.
அவர் அந்த ஊருக்குச் சென்று சில நாட்கள் தங்கினார். தெருவில் நடப்பவர்களின் கால்களை
ஆர்வத்தோடு கவனித்தார். தங்கள் கம்பெனியின் காலணிகளை அங்கே விற்க முடியுமா என்று நோட்டம்
விட்டார். அந்த கிராமத்தில் வசித்தவர்கள் யாருமே கால்களில் காலணிகளை அணியாமல் நடந்து
சென்றனர். இதைப் பார்த்த விற்பனையாளருக்கு சலிப்பு ஏற்பட்டது. இந்த மக்களுக்கு காலணியின்
உபயோகமே தெரியவில்லை. ஏற்கெனவே காலணி அணிந்து அதன் உபயோகம் தெரிந்தவர்கள் என்றால் நமது
சரக்குகளை விற்பனை செய்வது எளிது. இங்கே ஒரு ஜோடி காலணிகளைக் கூட விற்பனை செய்ய முடியாது
என்ற முடிவுக்கு வந்தார். எனவே தனது கம்பெனிக்குத் திரும்பி சென்றார். தனது முதலாளயிடம்
நடந்தவைகளை தெரிவித்தார்.
கம்பெனி அவருக்குப்
பதிலாக மற்றொரு விற்பனையாளரை அதே கிராமத்திற்கு அனுப்பியது. அவர் காலணி அணியாத மக்களை
பார்த்தார். அடடா நமது சரக்குகளை விற்பதற்கு இதுதான் சரியான இடம். இவர்களுக்கு காலணிகளை
அணிவதால் என்னென்ன பயன்கள் ஏற்படும் என்பதை விளக்கி விட்டால் போதும் . விற்பனை சூடு
பிடித்து விடும் என்று எண்ணமிட்டார். தனது எண்ணத்தை செயல்படுத்தினார். மக்களை ஒரு மரத்தின்
நிழலில் கூட்டினார். காலணிகளின் பயன்களை அவர்களுக்கு புரியும் விதத்தில் எடுத்துச்
சொன்னார்.
கல்லிலும் முள்ளிலும்
நடந்து செல்லும் நீங்கள், காலில் அடிபட்டால்
இரண்டு நாட்கள் வீட்டில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டிவரும். இதனால் உங்கள்
வேலை தடைப்படும். கூலி குறையும். இதை தடுப்பதற்காக கால்களுக்குப் பாதுகாப்பாக காலணிகளை
அணிந்து செல்லுங்கள் என்றார். விவசாயிகளுக்கு அவர் சொல்வதில் உள்ள உண்மை புரிந்தது.
அந்த ஊரில் விவசாயத்தில் ஈடுபட்ட பலர், இருட்டு நேரத்தில் காட்டு வழியில் நடந்து வரும்போது பாம்பு கடித்து இறந்து போயிருக்கின்றனர்.
கால்களில் ஷீக்கள் இருக்குமானால் பாம்பு விஷத்தில் இருந்து தப்பி உயிர் பிழைக்கலாம்
என்று அறிந்து கொண்டனர். எனவே போட்டி போட்டுக் கொண்டு காலணிகளை வாங்கி அணிந்தனர். விற்பனையாளருக்கு
நல்ல லாபம் கிடைத்தது.
காலணிகளை விற்பனை
செய்ய வந்த ஒருவர் எதை தடையாக நினைத்து பின்வாங்கினாரோ அதே விஷயத்தை மற்றொருவர் சாதகமாக
நினைத்து வெற்றி கண்டார். எனவே நாம் ஒரு விஷயத்தை எப்படி நினைக்கிறோமோ அப்படியே அது
மாறிவிடும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி மிகச் சிறந்த உதாரணமாகும்.
எனவே உங்கள் எண்ணம்
உயர்ந்ததாக இருக்கட்டும். சுயநலம் அற்றதாக இருக்கட்டும். நல்லதாக மற்றவர்களுக்குப்
பயன்படுவதாக இருக்கட்டும். இப்படிப்பட்ட எண்ணங்கள் உங்களை உயர்த்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்