26 அக்டோபர், 2012

சோதனையில் சாதனை! இதுவே இப்றாஹீம் நபியின் போதனை!!


தியாகத் திருநாள் வந்துவிட்டது.
இந்த பக்ரீத் பண்டிகையை ஹஜ்ஜுப் பெருநாள் என்றும் தியாகத் திருநாள் என்றும் மக்கள் மகிமையோடு அழைப்பதுண்டு. காரணம் இதில் பிரதான வணக்கமாய் ஹஜ்ஜும் அந்த ஹஜ்ஜுக்கே முன்னோடியாய் நபி இப்றாஹீம் அலை அவர்களும் அவர்களின் குடும்பமும் செய்த தியாகமும் இந்த பெருநாளில் பின்னிப் பிணைந்திருக்கிறது.
ஹஜ்ஜின் அதிகமான கிரியைகளைக் உற்றுநோக்கினால் ஒரு உண்மை புரியும்:
இப்றாஹீம் அலை அவர்களும் அவர்களின் குடும்பமும் செய்த மிக யதார்த்தமான செயல்களைக் கூட அல்லாஹ் ஹஜ்ஜில் முக்கிய வணக்கமாக ஆக்கிவிட்டான்.
நபியவர்களின் குழந்தை இஸ்மாயீல் அலை தண்ணீர் இல்லாத பாலை மணலில் தாங்கமுடியாத தாகத்தில் தவித்து அழுதபொழுது தாயார் ஹாஜர் அலை அவர்கள் தண்ணீர் தேடி ஸஃபாவிற்கும் மர்வாவிற்கும் இடையே ஓடிய அந்த யதார்த்த்மான செயல் கூட இன்று ஹஜ்ஜிலே பிரதானமான ஒரு வணக்கம். செய்யவில்லை என்றால் ஹஜ் நிறைவேறாது என்ற அளவில் அல்லாஹ் அமைத்தான். தண்ணீர் தேடி ஓடிய தாயின் பரிதவிப்புக்குகூட தக்க மரியாதையை தந்தான் இறைவன்.
இளவல் இஸ்மாயீலை அழைத்துக்கொண்டு இறைவனின் ஆணையை இனிதே நிறைவேற்ற இப்றாஹீம் அலை செல்லும் நேரம் இப்லீஸ் வந்து இடைமறித்தான்:
''இப்றாஹீமே.. உம் மகனைப் பலியிட பணித்தது படைத்தவன் அல்ல.. பாதகன் இப்லீஸ். அவனின் திருவிளையாடல்தான் இது என்பதைப் புரியாமல் புதல்வனை பலிகொடுக்க பூரிப்போடு செல்கிறீரே..என்றான் வயோதிகன் உருவில் வந்த இப்லீஸ் .
வந்திருப்பது யார் என்று புரிந்துகொண்ட நபியவர்கள், '' அடே அல்லாஹ்வின் எதிரியே! ஆதித்தந்தையர் ஆதமையும் ஹவ்வாவையும் வழிகெடுத்த அயோக்கியனே! நில்லாதே என் முன்! அல்லாஹ்வின்மீது ஆணையாக அவனின் ஆணையை நிறைவேற்றியே தீருவேன்'' என்று கூறி ஏழு கற்களை எடுத்து எறிந்து அவனை விரட்டி அடித்தார்கள். சிறிது தூரம் சென்றதும் மீண்டும் வந்து தடுக்க முனைந்தான் இவ்வாறு மூன்று முறை அவன் தடுக்க முனைந்தபொழுது ஏழு ஏழு கற்களை எடுத்து எறிந்தார்கள். அந்த யதார்த்தமான எறிதலைக் கூட எல்லா ஹாஜிகளுக்கும் வணக்கமாய் ஆக்கினான் வல்ல நாயன்.
தொழுகையின் தொடக்கம் தொடுத்து தொழுகையின் இறுதிவரை இறைவனின் நேசர் இப்றாஹீம் அலை அவர்களை நினைவலைகளை அல்லாஹ் அள்ளித் தெளித்தான். ஆமாம் அன்பர்களே!
ஆரம்ப தக்பீருக்குப் பின் அடக்கத்துடன் ஓதுகிற வஜ்ஜஹ்து இப்றாஹீம் அலை கற்றுத் தந்த இனிய பழக்கம் என்றால் தொழுகையின் இறுதியில் அத்தஹிய்யாத் இருப்பில் இப்றாஹீம் அலை அவர்களையும் அவர்களின் குடும்பத்தையும் கூறித்தான் தொழுகையை நிறைவு செய்கிறோம். அதாவது  இப்றாஹீம் அலை அவர்களின் வார்த்தையுடன் ஆரம்பம் செய்கிறோம்; அவர்களின் வாழ்த்துடன் நிறைவு செய்கிறோம்.
வஜ்ஜஹ்து வரலாறு:
 وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَوَاتِ وَالأَرْضِ وَلِيَكُونَ مِنَ المُوقِنِينَ * فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَباً قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لاَ أُحِبُّ الآفِلِينَ * فَلَمَّا رَأَى القَمَرَ بَازِغاً قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لأَكُونَنَّ مِنَ القَوْمِ الضَّالِّينَ * فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ فَلَمَّا أَفَلَتْ قَالَ يَا قَوْمِ إِنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ * إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ حَنِيفاً وَمَا أَنَا مِنَ المُشْرِكِينَ ﴾ ‏(‏ الأنعام‏:75‏ ـ‏79).‏

ஒரு நாள் சிறுவர் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அகண்ட பாருலகை பார்த்தார்கள் விரிந்த வானைப் பார்த்தார்கள்  இறைவனின் படைப்புகளைப் பார்த்தார்கள் மனிதர்களைப் பார்த்தார்கள் மக்களைப் பார்த்தார்கள்; பறவைகளைப் பார்த்தார்கள் புழுக்களைப் பார்த்தார்கள் எல்லாம் அவர்களுக்கு ஒரே வியப்பாக இருந்தது. இவற்றை எல்லாம் படைத்தவன் யார்? இவற்றை ஏன் படைத்தான்? என்ற வினாக்கள் அவர்களுடைய மூளையில் சுழலத் தொடங்கியது.
இருள் சூழ்ந்தது. காரிருள் கவ்வியது. அவர்கள் வானத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தார்; அப்பொழுது திடீரென ஒரு விண்மீன் தோன்றி பிரகாசித்தது. இதுதான் என்னுடைய இறைவனாக இருக்குமோ என்று எண்ணினார்கள் சற்றுநேரத்தில் அந்த விண்மீன் மறைந்ததும் இது அல்ல என் இறைவன்; மறையக் கூடியது இறைவனாக இருக்க இயலாது' என்று தமக்குள் கூறிக்கொண்டார்கள்.
பின்னர் வெண்ணிலா விசும்பின் அடியிலிருந்து வெளிவருவதைக் கண்டு இதுதான் என்னுடைய இறைவனாக இருக்குமோ என்று எண்ணினார்கள். அதுவும் வான்வெளியில் அன்ன நடை நடந்துவிட்டு மறையவே, இதுவும் என் இறைவனல்ல; இறைவன் எனக்கு நேர்வழியைக் காட்டவில்லையெனில் நானும் வழிதவறியவர்களில் ஆகிவிடுவேன்' என்று அவர்கள் கூறினார்கள். விடிந்தது. சூரியன் தன் பொற்கிரணங்களை அள்ளி வீசியவாறு வெளியே வந்தது. அதைக் கண்டதும் .. இது மிகவும் பெரியதாயுள்ளதே. இதுதான் என் இறைவனாக இருக்குமோ' என்று எண்ணினார்கள். ஆனால் அது அந்நாளின் இறுதியில் மறையவே மறையக் கூடியது என் இறைவனல்ல.. 
﴿ إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ حَنِيفاً وَمَا أَنَا مِنَ المُشْرِكِينَ﴾ (‏ الأنعام‏:79)‏
வானங்களையும் பூமியையும் படைத்த அந்த வல்ல நாயனை நோக்கி என் முகத்தை திருப்புகிறேன்நான் முஸ்லிம்؛ இணைவைப்பவனல்ல.'' என்று கூறினார்கள்.


தொழுகைக்கு மட்டுமா அவர்கள் ஆரம்பம்?
தொன்றுதொட்டு நிலவி வரும் நல்ல பழக்கங்களுக்கெல்லாம் அவர்கள்தானே முன்னோடி.
  • குழந்தை பிறந்தால் அதற்கு அகீகா கொடுத்தல்
  • விருத்த சேதனம் செய்தல்
  • மீசையை உதட்டின் விளிம்பிற்கு வெளியே வராமல் கத்தரித்தல்
  • அக்குள் மற்றும் அரை முடியை மழித்தல்
  • பல்துலக்க மிஸ்வாக்கைப் பயன்படுத்துதல்
  • புனித மாதங்களைக் கவுரவித்தல்
இதுபோன்ற ஏராளமான இனிய பழக்கங்களை அறிமுகப்படுத்தியவர்கள்
இப்றாஹீம் அலை அவர்கள்தான். இதற்கும் மேலாக ஒரு குடும்பப் பெண் என்பவள் வீட்டின் வாயிற்படி போல என்ற அருமையான உதாரணத்தைக் கூறி இல்லற வாழ்க்கைக்கும் இனிய வழிகாட்டியாய் இருப்பவர்கள் இப்றாஹீம் அலை அவர்கள்.

விருத்த சேதனம் செய்து விருத்தியோடு வாழ வழிகாட்டியவர்:
விருத்த சேதனம் செய்துகொண்டவர்களுக்கு எய்ட்ஸ் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் அதில் ஏராளமான சுகாதார நன்மைகள் உண்டு என்றும் இன்று கண்டுபிடித்து அநேக யூதர்களும் கிறிஸ்தவர்களும் ஏனைய மதத்தைச் சார்ந்த ஏராளமான மருத்துவர்களும் சுன்னத் செய்துகொள்கிற நிலையப் பார்க்கிறோம். இந்த அருமையான நடைமுறைக்கு ஆரம்ப வழிகாட்டி இப்றாஹீம் அலை.

மீசையைக் குறைத்தல்:
வீரப்பன் போல் மீசையை வளர்ப்பது வீரத்தின் அடையாளமாய் இன்று சினிமாக்களில் காட்டப்பட்டாலும் உண்மை என்ன? தாடிதான் ஆண்மையின் கம்பீரம். மீசையைக் குறைத்துக்கொள்வதுதான் நாகரீகம் என்பதை இன்று நாம் மட்டும் கூறவில்லை பல சமய அறிஞர்களும் மருத்துவர்களும் ஒப்புக்கொள்கிற உண்மை.
மறைமலை அடிகளார் தன் 'மனித வசியம் 'என்ற நூலில் எழுதுகிறார்:
''மனிதன் சுவாசிக்கும்போது சுத்தமான காற்றை (ஆக்சிஷன்) உள்ளே இழுக்கிறான்; கிருமிகள் நிறைந்த அசுத்தமான காற்றை (கார்பண்டை ஆக்ஸைடு) வெளியிடுகிறான் அப்படி காற்றை வெளியிடும்போது அதிலுள்ள கிருமிகள் மீசை அடர்த்தியாக இருந்தால் அதற்குள்ளே சென்று படிகின்றன. அதன் பின்னர் நாம் ஏதாவது உண்ணும்போது பருகும்போது அவற்றில் அந்த கிருமிகள் கலந்து மீண்டும் நம் உடலுக்குள் சென்று கடும் விளைவுகளை உண்டாக்குகிறது... ஆகவே மீசையக் குறைக்கவேண்டும்''
இல்லத்தரசி என்பவள் இல்லத்தின் நிலைப்படி என்று இயம்பிய இப்றாஹீம் அலை:


இப்றாஹீம் அலை அவர்கள் மனைவி மகனை பள்ளத்தக்கிலே விட்டுவிட்டு சென்று பல வருடங்களுக்குப் பிறகு பருவ வயதை அவர் அடைந்த போது அவருக்கு ஜுர்ஹூம் கிளையார், தங்களிலிருந்து ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தனர். இஸ்மாயீலின் தாயார் (ஹாஜர்) இறந்துவிட்டார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் மணம் புரிந்து கொண்ட பின்பு இப்ராஹீம் (அலை) அவர்கள், தாம் விட்டுச் சென்ற (தம் மனைவி மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்துக் கொள்வதற்காக (திரும்பி) வந்தார்கள். அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களை (அவர்களது வீட்டில்) காணவில்லை.

ஆகவே, இஸ்மாயீல் (அலை) அவர்களின் மனைவியிடம் இஸ்மாயீலை குறித்து விசாரித்தார்கள். அதற்கு அவர் எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார். பிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலைப் பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு அவர் நாங்கள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம் என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் முறையிட்டார்.

உடனே இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) ஸலாம் கூறி அவரது நிலைப்படியை மாற்றி விடும்படி சொல் என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, எவரோ வந்து சென்றிருப்பது போல் உணர்ந்தார்கள். எவரேனும் உங்களிடம் வந்தார்களா? என்று கேட்டார்கள். அவருடைய மனைவி, ‘ஆம்’ இன்னின்ன (அடையாளங்கள் கொண்ட) பெரியவர் ஒருவர் வந்தார். எங்களிடம் உங்களைப் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு (விவரம்) தெரிவித்தேன்.

என்னிடம் உங்கள் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் அவரிடம், நாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம் என்று சொன்னேன் என்று பதிலளித்தார். அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் உன்னிடம் தம் விருப்பம் எதையாவது அவர் தெரிவித்தாரா என்று கேட்க, அதற்கு அவர் ‘ஆம்’ உங்களுக்கு தன் சார்பாக ஸலாம் உரைக்கும்படி எனக்கு உத்தரவிட்டு, உன் நிலைப்படியே மாற்றிவிடு என்று (உங்களிடம் சொல்லச்) சொன்னார் என்று பதிலளித்தார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தைதான். உன்னைவிட்டு பிரிந்து விடும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார்.

ஆகவே, நீ உன் (தாய்) வீட்டாருடன் போய் சேர்ந்து கொள் என்று சொல்லிவிட்டு, உடனே அவரை விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் ஜுர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார். பிறகு, இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவன் நாடிய காலம் வரை அவர்களை (ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார். அதன் பிறகு அவர்களிடம் சென்றார். ஆனால், இஸ்மாயீல் (அலை) அவர்களை (இந்த முறையும்) அவர் (அங்கு) காணவில்லை. ஆகவே, இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய (புதிய) துணைவியாரிடம் சென்று இஸ்மாயீலைப் பற்றி விசாரித்தார். அதற்கு அவர் எங்களுக்காக வருமானம் தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார்.

இப்ராஹீம் (அலை) அவர்கள், நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் (நலம்தானா?) என்று கேட்டார்கள். மேலும், அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார். அதற்கு இஸ்மாயீலின் துணைவியார், நாங்கள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு உயர்ந்தவனும் வல்லவனுமாக அழ்ழாஹ்வைப் புகழ்ந்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள், உங்கள் உணவு எது? என்று கேட்க அவர், இறைச்சி என்று பதிலளித்தார். அவர்கள், உங்கள் பானம் எது? என்று கேட்க தண்ணீர் என்று பதிலளித்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும், தண்ணீரிலும் பரக்கத்தை அருள் வளத்தை அளிப்பாயாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.

இதை கூறிக்கொண்டே வந்த நபி (ஸல்) அவர்கள், ''அந்த நேரத்தில் அவர்களிடம் உணவு தானியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் அருள் வளம் தரும்படி இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்திருப்பார்கள். ஆகவே தான் மக்காவைத் தவிர பிற இடங்களில் அவ்விரண்டையும் (இறைச்சியையும் தண்ணீரையும்) வழக்கமாக பயன்படுத்தி வருபவர்களுக்கு அவை ஒத்துக்கொள்வதே இல்லை என்று சொன்னார்கள். 
''இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவன் வந்தால் அவருக்கு (என் சார்பாக) ஸலாம் உரை. அவரது (வீட்டு) நிலைப்படியை உறுதிப்படுத்தி வைக்கும்படி சொல் என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்குத் திரும்பி) வந்த போது, உங்களிடம் எவரேனும் வந்தார்களா? என்று கேட்க, அவருடைய மனைவி, ‘ஆம்’ எங்களிடம் அழகிய தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார் என்று (சொல்லிவிட்டு) அவரை புகழ்ந்தார். (பிறகு தொடர்ந்து) என்னிடம் நமது பொருளாதார நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் நாங்கள் நலமுடன் இருக்கிறோம் என்று தெரிவித்தேன் என்று பதில் சொன்னார். அவர் உனக்கு அறிவுரை ஏதேனும் சொன்னாரா? என்று இஸ்மாயீல் (அலை) கேட்டார்கள். அதற்கு அவர் ‘ஆம்’ உஙகளுக்கு ஸலாம் உரைக்கிறார். உங்கள் நிலைப்படியை உறுதிப்படுத்திக் கொள்ளும்படி உங்களுக்கு கட்டளையிடுகின்றார் என்று சொன்னார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தை. நீ தான் அந்த நிலைப்படி உன்னை (விவாகரத்து செய்யாமல்) அப்படியே மனைவியாக வைத்துக் கொள்ளும்படி எனக்கு உத்தரவிட்டுள்ளார்; என்று சொன்னார்கள்.  ( புகாரீ)

ஒரு இல்லத்தின் நிலைப் படி சரியாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அதுபோல இல்லத்தரசி சரியாக இருப்பது குடும்பத்திற்கு முக்கியம். இதை அருமையாக உணர்த்தியவர்கள் இப்றாகீம் அலை.
நமக்கு பல லட்சம் கிடைத்தால் போதும் என்று பணக்கார வீட்டில் பார்த்து மகனுக்கு சம்பந்தம் பேசி அவனைப் பாலுங்கிணற்றில் தள்ளிவிட்டுவிட்டு அவன் அங்கே அனுபவிக்கும் அவஸ்தையை எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் பார்த்து ரசிக்கும் எத்தனையோ பெற்றோர்களுக்கு மத்தியில் இப்றாஹீம் அலை ஒரு முன்மாதிரி. தன் பிள்ளைகளின் வாழ்க்கைத் தரம் எப்படி உள்ளது என்பதில் அக்கறை காட்டி அவர்கள் வளமாக நலமாக வாழ்வதற்கும் வழிகாட்டிய இப்றாஹீம் அலை அவர்கள் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள்.

ஒரு குடும்பத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்திற்கு வேண்டிய அத்தனை அம்சங்களுக்கும் அருமையான வழிகாட்டியாக அமைந்திருப்பதால்தான் அல்லாஹ் அவர்களை ஒரு தனிமனிதரல்ல.. அவர் ஒரு சமுதாயம் என்கிறான் 
(إِنَّ إِبْرَاهِيمَ كَانَ أُمَّةً قَانِتاً لِلّهِ حَنِيفاً وَلَمْ يَكُ مِنَ الْمُشْرِكِينَ (النحل : 120)

 நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளையும் வேதனைகளையும், துன்ப துயரங்களையெல்லாம் அவர்கள் பொறுமையுடன் சகித்திருந்து இறைவனிடம் பிரார்த்தித்து வெற்றி பெற்ற வீர வரலாற்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாய கடமையாகும். நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளை சுருக்கமாக கூறுவதானால்,

 அவர்கள் தம் இளம் பிராயத்திலேயே ஓரிறை கொள்கையான இஸ்லாத்தை எடுத்து சொன்னதின் காரணத்தினால், அவருடைய தந்தையாராலேயே வீட்டைவிட்டும் விரட்டப்பட்ட சோதனை. அல்குர் ஆன் 19:46

       கொடுங்கோல் ஆட்சி புரிந்த மன்னன் நம்ரூது என்பவனை எதிர்ததினால் நெருப்பு குண்டத்தில் எறியப்பட்ட சோதனை. அல்குர் ஆன் 21:68,69

       திருமணமாகி பல்லாண்டு காலம் பிள்ளைப்பேறு இன்றி பரிதவித்த சோதனை. அல்குர்ஆன் 37:100,101

       முதிர்ந்த பருவத்தில் உள்ள இபுறாஹீம் (அலை) அவர்களுக்கு நபி இஸ்மாயீல் (அலை) பிறக்கிறார்கள். சிறிது காலத்திற்கு பின்பு அல்லாஹ்வின் உத்தரவின் பேரில் தம் மனைவி ஹாஜிரா அம்மையாரையும், மகன் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களையும் பாலைவனத்தில் தகிக்கும் சுடுமணலில் தன்னந்தனியாக விட்டுப் பிரிந்த சோதனை. ( புகாரீ)  

       அல்லாஹ்வின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு தம் அருமை மைந்தரான நபி இஸ்மாயீல்(அலை) அவர்களை அறுத்து பலியிட துணிந்த சோதனை. அல்குர்ஆன் 37:02,03
    ஆக வாழ்நாளில் பல அடுக்கடுக்கான சோதனைகளை சந்தித்தும்கூட மனம் தளராமல் எல்லாம் வல்ல இறைவனிடமே பிரார்த்தனை செய்து பொறுமையுடன் துன்பங்களை சகித்து கொண்டிருந்ததினால் சோதனைகளெல்லாம் சாதனையாக மாறிய சாகஸ வரலாற்றை குர்ஆனில் காணலாம். கிட்டத்தட்ட 5000 வருடங்களுக்கு முன்பாக நடந்த சில நிகழ்ச்சிகளை குர்ஆன் நமக்கு படம் பிடித்து காட்டுகிறது.

இப்றாஹீம் அலை அவர்களின் அருமை பெருமைகளைப் பட்டியல் போட பக்கங்கள் போதாது ஒரே கட்டுரையில் முழுமையாக தரமுடியாது 




சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

நபிமார்களின் அறிவுக் கூர்மை

   இப்ராஹீம் அலை மற்றும் இஸ்மாயீல் அலை ஆகியோரின் அறிவுக் கூர்மை : قَالَ ابْن عَبَّاس لما شب إِسْمَاعِيل تزوج امْرَأَة من جرهم فجَاء إِبْرَاه...